ஆபிரிக்காவின் அழகிய விடிவெள்ளியே சென்று வா!

posted Apr 26, 2014, 6:04 PM by வாடா மல்லிகை   [ updated Apr 27, 2014, 6:02 PM ]தென்னாபிரிக்காவின் சேரிக் குடிசைகளின்,

கறள் படிந்த கூரைத் தகரங்களின் கீழும்,

சூரிய ஒளி நுழைய இயலாத,

செம்மண் குடிசைகளின் இருட்டுக்களிலும்,

பெரு வீதிகள் குவிகின்ற,

கூடார வளைவுகளின் கீழ்த்தளங்களிலும்,

தினமும் பசித்திருக்கின்ற,

மனிதர்களின் வெற்று வயிறுகளிலும்,

உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்!ரொபின் தீவின் கரை தொடுகின்ற,

கடலலைகள் எழுப்பும் அழுகுரலிலும்,

சுண்ணாம்புக் கற்களில் சம்மட்டிகள்,

செதுக்கிய துவாரங்களில் புகுந்து,

வெளியில் வருகின்ற அனல்காற்று,

எழுப்புகின்ற அவலம் கலந்த ஓசையிலும்,

ஆருமற்று அனாதைகளாய் இறந்து.

புதைந்து போன சிறைக் கைதிகளின்,

உக்கிப்போன எலும்புக்கூடுகளிலும்,

உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்!காவலர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி,

கடல் வெளிகள் தாண்டி வந்தும்,

கட்டியணைக்கவும் இயலாத,

காதல் மனைவியின் ஏக்கங்களிலும்,

கண்கள் உறங்காத இரவுகளின்,

கனத்துப்போன கண்ணிமைகளில்,

தேக்கிவைத்த ஏக்கக் கதைகளிலும்,

தடைவேலிகளாகி நடுவில் நிற்கின்ற,

தடித்த கண்ணாடிச் சுவர்களிலும்,

கிழிக்கப் பட்டும் படிக்கப்பட்டும்,

கறுத்தக் கோடுகளால் மறைக்கப்பட்ட,

காலாவதியான காதல் கடிதங்களிலும்,

உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்!சிறைக் கூடங்களின் மூலைகளில்,

செல்லரித்தும் தொலைந்தும் போன,

புத்தகங்களின் பக்கங்களிலும்,

சிறு தோட்டங்களின் ஓரங்களில்,

சின்னம் சிறிய சாடிகளில்,

இருந்தாற்போல முகம் காட்டுகின்ற,

‘டெய்சி' மலர்களின் புன் சிரிப்புக்களிலும்,

தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் என்று,

தூர ஒதுங்கிய சிறைக் காவலர்களின்,

தூசு படர்ந்திருந்த மன வலைகளிலும்,

எப்போதாவது உனக்குக் கிடைக்கின்ற,

புகையிலைத் துண்டுக்காய்க் போட்டியிடும்,

கைதிகளின் கனத்த உள்ளங்களிலும்,

உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்!
Comments