![]() விந்திய மலைத்தொடரில் அந்த அகத்தியமுனிவன் அடிபதித்த நாள் முதலாய், இந்திய தேசம் எங்கள் தேசத்தைத் தங்கள் தேசத்துடன் இணைத்துக் கொண்டது! சோழ வள நாட்டின் சோறுடைத்த வயல்களும், சேரநாட்டு யானைகளின் செழிப்பான தந்தங்களும், பாண்டிய நாட்டின் பசுமை மிக்க இலக்கியமும், இந்திய தேசத்தின் சொத்துக்களாகின !
அரை குறையாய் வளர்ந்த ஆரியமொழி, எங்கள் தமிழிடம் கடன் வாங்கித் தன்னை வளர்த்துக் கொள்ள, விலை போகாத வேதங்களும் வேள்விகளும்,சாதிகளும் எங்கள் சொந்தங்களாகின. புறமுதுகு காட்டாத புறநானுற்றுத் தமிழன் இராமாயணத்தின் குரங்காக மாற, கடாரம் வரை கப்பலோட்டியவன் பிடாரிக்குக் கோவில் கட்டிக் கும்பிடுகிறான். இந்தியாவின் கரங்கள் இலங்கை வரை நீண்டு . நந்திக் கடல் வரைக்கும் எங்களைத் துரத்தின. எங்கள் இரத்தத்தின் ரத்தங்களே இரத்த வெறி கொண்டு இராமாயணத்தின் சுக்கிரீவன்களாகின. இந்திய தேசமே! இறுதிச் சந்தர்ப்பம். துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தொண்டைக் குழியில் நீ!. ஆணையிட எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. எங்கள் தலை விதியை எங்களிடம் விட்டு விடு!. உதவி வேண்டாம் ஒரு பக்கம் ஒதுங்கிவிடு!. உனது மௌனமே எங்கள் தேசத்தின் விடி விளக்காய் இருக்கட்டும்! |
கவிதைகள் >