இருள் பிரியாத நேரத்தில், ஆயிரம் பயணங்களில், அதுவும் ஒரு பயணமாகியது! அப்பாவின் பனித்த கண்களும், அம்மாவின் அன்புத் தழுவலும், அந்தத் தேங்காய் உடைத்தலில், அமிழ்ந்து போனது! கலட்டிப் பிள்ளையாரின், கடவாயின் தந்தங்கள், கொஞ்சமாய் அசைந்த பிரமையில், சஞ்சலப் பட்டது மனம்! விரியும் கனவுகளில், வருங்காலக் கேள்விக்குறி, விரிந்து வளைந்து, பெருங் கோடாகியது! தூரத்தில் தெரிந்த நீரலைகள், கானல் நீரின் கோடுகளாய், ஈரம் காய்ந்து போயின! கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும், காற்றாடியாகியது பயணம்! புலம்பெயரும் புள்ளினங்களே!, போன பயணம் முடித்ததும், போய் வரக் கூடிருக்கும் உங்களுக்கு! போகுமிடமெல்லாம் கூடு கட்டும், பயணமாகியது, எனது பயணம்! உற்றார்கள், பெற்றார்கள், உடன் பிறந்த சொந்தங்கள், சுற்றித் திரிந்த குறுந் தெருக்கள், சுகம் தந்த காற்றின் வருடல்கள், விடிகாலை வேளையின் சிலிர்ப்புகள்! வானத்தில் பறக்கும் பறவையின், விழிகளில் தெரியும் வடிவங்களாக, விரைந்து தொடர்கிறது ,பயணம்! தொடுகையில் கிடைக்கும் சுகங்களும், நுகர்தலில் கிடைக்கும் வாசனைகளும், படங்களில் மட்டுமே கிடைக்கும், பாக்கியமாகப் பயணம் தொடர்கின்றது! இராமாயணத்தின் அஞ்ஞாத வாசமாய், இரவும் பகலுமில்லாத, பெருவெளியில், திசை மாறிய பறவையாகித், தொடர்ந்து செல்கின்றது, பயணம்! முடிவில்லாத பயணமாகி, முற்றுப் புள்ளியைத் தேடுகின்றது! |
கவிதைகள் >