கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன். கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு! கால்கள் மூன்றாகி நடக்கையில், மனம் மட்டும், அங்கும் இங்குமாய், மரம் விட்டு மரம் தாவும் குரங்காகின்றது! காலம் தான் எவ்வளவு குறுகியது! கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில், யாரோ பந்து விளையாடுகின்றார்கள்! களிப்போடு அவர்கள் எழுப்பும் குரல்கள், காதுக்கு இனிமையாய் இருக்கின்றன! கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது! அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில், ஆசை முளையிலேயே உயிர் விடுகின்றது! முதுமை என்பது, முந்திய அனுபவங்களின் இரை மீட்புக் காலம் போலும்! பழைய அனுபவங்கள் படமாக ஓடுகின்றன! இழந்து போன சந்தர்ப்பங்கள், எக்காளமிட்டுச் சிரிப்பது போல பிரமை! இமை வெட்டும் நேரத்திற்குள் வாழ்வு முடிந்து போய் விடுகின்றது! வரட்டுக் கவுரவங்களின் பிடியில், வாழ்க்கை நசுங்கிப் போய் விடுகின்றது! இளமையின் முறுக்கு ஏற்றிய துடிப்பில், எடுத்தெறிந்தவர்களை நினைக்கின்றேன், இனிமையான ஒரு வாழ்வைத் தேடி, இணையத் துடித்தவர்களை நினைக்கின்றேன்! உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின். அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால், அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன! இருக்கும் போதே வாழ்வதை விட்டு, எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய், சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும், வேதனை மட்டும் முதுமையாகின்றது! இளமையெனும் நதியில் மிதக்கும் படகாகி, காலமெனும் தரையில் உருண்டோடி, கடலன்னையின் கரையில் சங்கமமாகும், நதியொன்றின் நிலையில், மிடுக்கிழந்து. மெல்லிய ஒரு கீற்றாகி ஓடுகிறது, வாழ்வு! விடியும் பொழுதுகள், வேதனை தருகின்றன! வெந்து போன நெருப்புக்குள், தணலாக, வேதனைகள் உள்ளேயே குமுறுகின்றன! இளமைக் காலத்தின் வெறித்திமிரில் உலகம் கூட சிறிதாகத் தெரிந்தது! தேவைகளை மதிக்கும் உலகத்தில், தேவையே இல்லாத ஒரு பொருளாகி, தவிர்க்க முடியாத, அந்த விடுதலைக்காகத்,, தயாராவது தான் முதுமை போலும்! |
கவிதைகள் >