posted Oct 23, 2011, 10:04 PM by வாடா மல்லிகை
[
updated Jul 23, 2012, 7:15 PM
]
பவளப் பாறைகள் துப்பும் மகரந்த மணிகள் தவழ்ந்து வரும் அலைகளில் கலக்க, கரை சேர்ந்த மகரந்தங்களின் வாடை கடற்காற்றில் கலந்து, பூங்கறை நாற்றமாய்க் கடல் மணம் பரப்ப பச்சை படிந்து போன தந்திக் கம்பிகளில் கடற்காற்று மீட்டிய சங்கீதம் அந்த மாலை நேரத்துப், பறவைகளின் ஒலியோடு கலந்தது!
மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில், களங்கண்டித் தடிகளின் உச்சிகளில் கடற்காகங்கள் தங்கள் சிறகுகளை அகல விரித்துத் தவம் செய்ய, மேல் வானத்துச் சூரியன் தங்கத் தகடாகி, கடற் கன்னியின் மடியில் சங்கமிக்கத் தயாராகினான்!
பாலத்தின் அடித்தளத்து மதகுகளின் மேலே குந்தியிருந்த மீனவர்களின் மூங்கில் தடித் தூண்டில்களில் தொங்கிய மிதப்புக் கட்டைகளுடன் அலைகள் மேல் தவழ்ந்த முரல் மீன்கள், ஓடிப் பிடித்துக் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தன!
உன் கரையோரக் கண்ணா மரங்களின் ஆகாயம் பார்த்த வேர்களின் மீது ஓடி விளையாடிய சிறு நண்டுகள் பாடசாலை முடிந்து வீடு நோக்கி ஓடும் சிறுவர்களைப் போல நீலப் பாவாடையின் குறுக்கே ஓடும் கோலக் கரை போன்ற உந்தன் கற்களில் ஒளிந்து கொள்ள இடம் தேடின!
பேட்டுக் கோழியைச் சுற்றித் திரிந்த கோழிக் குஞ்சுகளாகக் கிடந்த தீவுக் கூட்டங்களைத் தாயோடு இணைக்கும் மூல வேராகி, இதயத்தின் மூல நாடியாகி கல்லில் நாருரித்த எங்களுக்கு நெல்லில் இருந்து நெருப்புக் குச்சி வரை, பொருளே இல்லாதவர்களுக்குப் பொருளாதாரம் காட்டிய பாதை நீ!
நிரை நிரையாகக் கரையோரங்களின் இருந்த வெள்ளைக் கற்கள் மட்டுமே வழி காட்டி விளக்குகளாகப் பேருந்தின் வாசல்களில் தொங்கியபடி ஊர் சேரும் வரை. உயிரைக் கையில் பிடித்த படி உன் மடியில் ஊர்ந்த நாட்கள் இன்றும் நினைவுகளில்!
பள்ளிப் படிப்பற்றுத் துள்ளித் திரிந்த தலைமுறைக்குக் கல்லூரி காட்டிய உன்னால், மூடிக் கிடந்த எங்கள் கதவுகள் அகலத் திறந்து, நாங்கள் அகிலம் எல்லாம் பரந்து விட நீ மட்டும் எரிந்துபோன மெழுகுவர்த்தியாய், எல்லோரையும் கரையேற்றி விட்ட கற்குவியல் பாதையாய் இன்னும்!!!
|
|