![]() கலிங்கம் வீழ்ந்தது! குருதி கொப்பழித்த 'தாயா' நதிக்கரையின் ஓரங்களில், கரையொதுங்கிய பிணங்களின் இரத்த வாடை கலந்த காற்று வெற்றிச்செய்தியை, நெற்றியில் சுமந்து வீசியது, அன்னப் பறவைகள் நடை பயின்ற ஆற்றங்கரையில், ஆந்தைகளும் கழுகுகளும் குந்தியிருந்தன. கலிங்கம் வீழ்ந்தது!. வீதியெங்கும் வெற்றியின் பூரிப்பு. வீழ்ந்து கிடக்கும் கலிங்கத்து வீரர்களின் கோலத்தை, தோல்வியில் துவளும் கலிங்கத்தின் குங்குமம் இல்லாத முகத்தைப் பார்க்கத் துடித்தது அவன் வக்கரித்துப்போன மனம். கலிங்கம் வீழ்ந்தது! காணுமிடமெல்லாம், மரணத்தின் விளம்பரங்கள். ஆண்கள், பெண்கள் குழந்தைகள் ஆயிரமாயிரமாய் வீழ்ந்து கிடந்தன. ஆயுதம் தாங்காத கைகள்! கவசம் இல்லாத மேனிகள்!. கந்தல் ஆடைகளே கவசங்களாக, கலப்பைப் பிடிகளே ஆயுதங்களாக, அசோகன் கலங்கினான் . 'அகண்ட' பாரதம். அவன் கண்ட கனவு! நனவாகிய வேளை, அவன் கண்கள் பனித்தன.
கலிங்கம் வீழ்ந்தது! மன்னனின் தலைக்குள் ஒரு குரல்! 'மன்னா பற்றைத் துறந்து விடு'. மன்னனின் நாடி நரம்பெல்லாம் திரும்பத் திரும்ப, மந்திரமாக ஒலித்தது அது. 'மன்னா பற்றைத் துறந்து விடு' சடப்பொருளிலும் ' தர்மா' வைத் தேடியவனின் குரல்கள்..
காலம் திரும்பியது., மீண்டும் ஒரு கலிங்கம்! 'சர்வதேச சமுகம்' முன்னுரையை எழுதிவைக்க 'முள்ளிவாய்க்கால்' முடிவுரையை எழுதியது. முன்னின்று நடத்தியது, ‘'அகண்ட' பாரதம்! 'அவாள்கள்' ஓதிய 'வேதத்தில்' தர்மச்சக்கரத்தின் அச்சாணிகள் மீண்டும் கழன்றன. அழகிய தர்மச்சக்கரம், 'அகண்ட பாரதக்' கொடியின் அலங்கோலத்தைப் பிரதி பலித்தது.
கலிங்கத்துப் போரில், பேய்கள் கூழ் காய்ச்சப் பற்கள் கிடைத்தன. எங்கள் கலிங்கத்தில் .. எரிந்த 'இரசாயன' நெருப்பில் எங்கள் பற்கள் மட்டுமல்ல எலும்புகள் கூட, நீறாகிப் போயின. பதுங்கு குழிகளே எங்கள் புதை குழிகள் ஆக, எங்கள் வேலிகளே எங்களை மேய்ந்தன.
புத்தனின் பல் மட்டும் பூட்டிய பெட்டியினுள் பத்திரமாய் இருந்தது. ‘தலதா’ மாளிகையின் வாசற்படிகளில். காவலுக்கு நின்றன இயந்திரத் துப்பாக்கிகள்! ரத்தக் காட்டேரிகள் ஆளும் 'இலங்காபுரி'யின் தேசீய இலச்சனையிலும் திமிரோடு வீற்றிருந்தது அந்தத் 'தர்மச்சக்கரம்' |
கவிதைகள் >