பிரபஞ்சத்தின் அந்தகார இருளில் மூழ்கிக் கிடந்த பூமிப் பந்தில் தோன்றிய சிறியதொரு ஒளிக்கீற்று! பிரம தேவனின் பிரதிநிதியாய் உயிர்ச்சங்கிலி ஓய்ந்து விடாது ஓட வைக்கும் அற்புதப் படைப்பு!
கருவை வளர்த்தெடுத்து, அதன் கண்ணையும்,மூக்கையும் கற்பனையில் வடித்துக் குருதியில் குளித்துச் சிலையாய் வடித்தெடுக்கும் ஒரு சிற்பியின் திறமை!
குழந்தையின் முகம் பார்த்துக் காலம் காலமாய்க் கட்டி வைத்த ஆசைகளின் கனவுக் கோட்டையைக் கணப்பொழுதில் உடைத்தெறியும் ஒரு முனிவனின் முதிர்ச்சி!
நோய் கண்ட வேளையில், இரவும் பகலும், அரைக்கண் மூடி, நீ கொள்ளும் அனந்த சயனத்தில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் அந்தப் பரந்தாமனின் பக்குவம்!
பூவைத் துளைத்து அதன் மகரந்தக் கூட்டுனுள் முட்டையிடும் பூச்சியைப் போல் குழந்தை வளர்ப்பில் குறுக்கு வழி தேடாத உன் நேர்மை!
உறங்கும் வேளையில் நீ பாடும் தாலாட்டின், ஏற்ற இறக்கத்தில் ஒலிக்கும் உன் குரல் நான் இது வரை கேட்காத சங்கீதம்!
வளர்ந்த குழந்தைகள் வேறு வேறு திசைகளில் விதம் விதமாய் வாழ்கையில். உன் மனம் மட்டும் வறுமையில் வாடும் குழந்தையின் பின்னால்! எனக்குப் புரியாத சோசலிசம்!
குழந்தையின் வாழ்வே உன் வாழ்வின் வரைவிலக்கணமாய், பிரதிபலன் பாராது நீ செய்யும் சேவைகள் தான் பகவத் கீதையின் சாராம்சம்!!! |