மாவீரர் நினைவுகளும், நாங்களும்..!

posted Apr 26, 2014, 6:08 PM by வாடா மல்லிகை   [ updated Apr 26, 2014, 6:09 PM ]

விரிந்த எனது தேசத்தின்,

பரந்து படர்ந்த வெளியெங்கும்,

அறைந்து நிற்கிறது வெறுமை!

 

நான்கு வருடங்கள் நகர்ந்து போனதை,

நம்பக்கூட முடியவில்லை!

 

உங்கள் நினைவுகள் சுமந்த,

உயிர்க்கூடுகள் மீது.

கோரை படர்ந்திருக்க,

எருக்கிலை சிந்தும் கள்ளிப்பால்,

உங்களுக்கு நிவேதனமாகின்றது!

அரவங கேட்டுச் சத்தமிடும்,

ஆட்காட்டிக்  குருவிகள்,

உங்களுக்காகக் கீதமிசைக்கின்றன !

 

எங்களுக்கெல்லாம் இப்போது,

இரண்டு விலாசங்கள்!

பிறந்த இடமொன்று,

மறையும் இடம் இன்னொன்று!

கிழக்கே உதித்து,

மேற்கில் மறைகின்ற,

சூரியன்களாக,

எங்களை நாங்களே,

உருவகித்துக் கொள்கிறோம்!

 

அரேபியப் பாலைவனங்களிலும்,

உருகும் பனிப் டலங்களிலும்,

எங்களால் வாழமுடிகின்றது!

 

நகருகின்ற ஒவ்வொரு வினாடியும்,

எங்கள் தேசம் தின்னப்படுகின்றது!

எங்கள் எச்சங்கள்,

கொஞ்சம், கொஞ்சமாக,

விழுங்கப்படுகின்றன!

 

குமர்ப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த,

தாய்களின் நிலையில் தான்,

எங்கள் வாழ்க்கை நகர்கின்றது!,

பருவகாலம் முடிந்ததும்,

பயிர் விளைக்க நினைக்கிறோம்!

 

நமது முடிவில்லாத பயணத்தின்,

நங்கூரமிட வேண்டிய நேரம்,

அண்மையில் வந்துவிட்டது!

 

இன்னும் தாமதித்தால்,

நாளை பிறக்கப் போகின்ற,

நம் பேரக்குழந்தைகளுக்கு ,

நல்ல கட்டுக்கதையொன்று,

கற்பனை செய்ய வேண்டும்!

 

Comments