குறுங்கவிதைகள்
தொலைந்த விமானம் !
வானமும் சில வேளைகளில், வாய் திறந்திருக்கலாம், அதன் வயிறு எங்கேயென, இனித் தான் தேடவேண்டும்! வேற்றுலக மனிதர்கள், கவர்ந்து சென்றிருக்கலாம், அவர்கள் வீடு எங்கேயென, இனித் தான் தேடவேண்டும்! கடலுக்கு உன் மீது, காதல் வந்திருக்கலாம்! அதன் அடித்தளம் எங்கேயென, இனித் தான் தேட வேண்டும்! சில வேளைகளில், உனது கண்கள் கட்டப்பட்டிருக்கலாம், காதுகள் கூட மூடப்பட்டிருக்கலாம், கதவுகள் கூட 'சீல்' வைக்கப்பட்டிருக்கலாம், ஏன், இறக்கைகள் கூட அரியப்பட்டிருக்கலாம்! ஆனாலும் நீயும்,, உனது வயிற்றுக்குழந்தைகளும், எங்கோ உயிரோடிருக்கின்றீர்கள், என்னும் நம்பிக்கைக் கீற்று, இன்னும் உயிரோடிருக்கின்றது! என்றோ ஒருநாள், உங்கள் எச்சங்கள், வெளியே துப்பப்படும் வரை, எனது நம்பிக்கை வாழ்ந்திருக்கும்! |
எருமை மாடு !
டேய், எருமை மாடே....! திரும்பிப் பார்த்தேன், ஒரு வேளை, எருமை மாடும், என்னோடு வந்து விட்டதோ? வாத்தியார் என்னைத் தான், வரவேற்றிருக்கிறார் ! நீயெல்லாம், எருமை மாடு மேய்க்கத்தான் சரி..! வாத்தியார் முடிவாகச் சொன்னார்! மனத்துள் எங்கோ, சுள்ளென்று வலித்தது! வாத்தியார் முகத்தில், காறித்துப்ப வேண்டுமென, அன்றிலிருந்து, எனக்குள் ஒரு ஆவேசம்! அன்றைய ஆவேசத்தில், இன்று நானும் ஒரு மனிதனாக...! வாத்தியார் உயிரோடிருந்தால், அவர் வாய்க்குக் கட்டாயம், சர்க்கரை போட வேண்டும்! |
குளிசைகள்
சூளைச் சுண்ணாம்பைக் கூட, செமித்துத் தள்ளின, எனது பாட்டனாரின், சமிபாட்டு உறுப்புகள்! பரியாரி கொடுத்த, வெறும் கோரோசனைக், குளுசைகளும், வாட்டியெடுத்த, ஆடாதோடை இலைகளும், அவரது வருத்தங்களைத், தள்ளி வைத்தன! இன்றோ.....! வண்ணங்களும், வடிவங்களும், கொண்ட குளுசைகளுடன், முக்கலும் முனகலுமாக, வாழ்வு நகர்கிறது! மனிதக் கழிவுகளைக், கடந்து போகின்ற, மண்புழுக்கள் கூட, விலத்திச் செல்கின்றன! |
கதிரவனின் ஆசை !
மாலை நேரத்துச் சூரியன், ஈரம் குளித்த பூமகளுக்கு, மஞ்சள் தடவுகிறான்! விடிகின்ற வேளையில், வெள்ளிப் பனித்துளிகளில், அவள் குளிக்கும் அழகை, கண் நிறையக் காணும் தாகம், அவனுக்கு....! பொன் மணல் கடற்கரையில், பந்து விளையாடும், பையனின் கரங்களுக்குள், புகுந்து விடும் அவசரம்...! தனது காலால் உதைத்துத், துன்பங்கள் எதுவுமில்லாத, தூரத்து உலகமொன்றுக்குத், தன்னை உதைத்துத், தள்ளி விட மாட்டானா? இந்தப் பிரபஞ்சத்திலிருந்து, இன்னுமொரு பிரபஞ்சம் நோக்கிய, பயணமொன்றுக்கான. எதிர்பார்ப்புடன், ஆதவன் காத்திருக்கிறான்! |
முது காதல் !
உன் முகத்தில் தோன்றிய, முதல் வெட்கம் கூட, இன்னும் மாறி விடவில்லை! அனுபவங்கள், இனிமையான போது, இருவருமே, சிரித்திருந்தோம்! அவை, சுமைகளான போதில், இருவருமே, சுமந்திருந்தோம்! சுள்ளிகள் பொறுக்கிக், கட்டிய கூட்டில், வளர்ந்த பறவைகளும், சிறகுகள் முளைத்து, பறந்து போய் விட்டன! இரை தேடலும், சுமை தாங்கலும், இல்லாத வாழ்வில்....! இருவருமே, ஒருவர் மற்றவரின், சுமை தாங்கியாக...! பகிர்தலிலும், புரிதலிலும், உனது அருகாமை, இன்றும் கூட, இனிக்கின்றது! |
சதுரங்கம்
சதுரங்க மேடையில்......! அனைவருமே, ஆயுதங்கள் தாங்கியவர்கள்! தாக்குபவனும். தாக்கபடுபவனுக்கும், தப்பிகொள்ளச் சந்தர்ப்பங்கள், தரப்பட்டிருக்கின்றன! வெற்றியைக் குறுக்கு வழியில், பெற்றுக் கொள்ளாமலிருக்க, விதிகளும் வரையப்பட்டுள்ளன! மறு கரையைத் தொட்டுவிட்டால், மீண்டுமொரு ராணியாக, மண்ணை மீட்டுக்கொள்ள, மீண்டுமொரு சந்தர்ப்பம்! ஆனால், நிஜ வாழ்வில் .....! விதிகள் செத்துமடிகின்றன! வெறும் பதுங்கு குழிகளே, வதிவிடங்களாகின்றன ! பெண்கள், குழந்தைகள், பொல்லூன்றி நடக்கும் வயோதிபர், எல்லோருமே போர்வீரர்கள்! குதிரைகளுக்க்ப் பதிலாகக், குண்டு வீசுகின்ற, ஆகாயப் பறவைகள்.! வெற்றிக் களிப்புகளின் பின்னர், வெறும் பலகை மட்டுமே, மிஞ்சியிருக்கின்றது! இன்னுமொரு ஆட்டத்திற்கு, எவரும் உயிருடன் இல்லை! |
1-10 of 12