தொலைந்த விமானம் !

posted Apr 28, 2014, 2:49 AM by வாடா மல்லிகை   [ updated Apr 28, 2014, 2:49 AM ]
வானமும் சில வேளைகளில்,
வாய் திறந்திருக்கலாம்,
அதன் வயிறு எங்கேயென,
இனித் தான் தேடவேண்டும்!

வேற்றுலக மனிதர்கள்,
கவர்ந்து சென்றிருக்கலாம்,
அவர்கள் வீடு எங்கேயென,
இனித் தான் தேடவேண்டும்!

கடலுக்கு உன் மீது,
காதல் வந்திருக்கலாம்!
அதன் அடித்தளம் எங்கேயென,
இனித் தான் தேட வேண்டும்!

சில வேளைகளில், 
உனது கண்கள் கட்டப்பட்டிருக்கலாம்,
காதுகள் கூட மூடப்பட்டிருக்கலாம்,
கதவுகள் கூட 'சீல்' வைக்கப்பட்டிருக்கலாம்,
ஏன், இறக்கைகள் கூட அரியப்பட்டிருக்கலாம்!

ஆனாலும் நீயும்,,
உனது வயிற்றுக்குழந்தைகளும்,
எங்கோ உயிரோடிருக்கின்றீர்கள்,
என்னும் நம்பிக்கைக் கீற்று,
இன்னும் உயிரோடிருக்கின்றது!

என்றோ ஒருநாள்,
உங்கள் எச்சங்கள்,
வெளியே துப்பப்படும் வரை,
எனது நம்பிக்கை வாழ்ந்திருக்கும்!
Comments