சிறுகதைகள்




வாணரின் சுயதரிசனம்..!

posted Apr 26, 2014, 6:31 PM by வாடா மல்லிகை   [ updated Apr 26, 2014, 6:31 PM ]


அது பகலா அல்லது இரவா என்று வாணருக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

 

ஆனாலும், யாழ்தேவியில் இருந்து பிள்ளைகள் வந்திருந்த படியால், அது பின்னேரம் என்று நினைத்துக்கொண்டார். அவர் ‘அடங்கிப்' போனார் என்று பரியாரியார் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருந்தது,வாணருக்குத் தெளிவாகக் கேட்டது. இந்த ‘அடக்கம்' வருவது அவருக்கு மூன்றாவது முறையாகும். அவருக்கு ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளையும், இரண்டு பொம்பிளைப்பிள்ளைகளும் உண்டு. எல்லாரும் கலியாணம் கட்டிப் பிள்ளை குட்டிகளோட கொழும்பில் தான சீவியம். .கண்கள் மூடிய நிலையில் இருந்தாலும், தனது உடல், பூவரசம் மரத்தால் செய்யப்பட்ட , தலைமாடும், கால்மாடும் இல்லாத ஒரு கட்டிலில் வளர்த்தப் பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. அத்துடன், அவரால் வெளியில் நடக்கும் சம்பவங்களை, நேரில் பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. அட, இதைத் தான், மரணம் என்று சொல்லுகின்றார்களோ என்ற சிந்தனையிலும், அவருக்கு ஒரு சிரிப்பு வந்தது. ஆனால், அருகிலிருப்பவர்களிடம் இருந்து ஒரு விதமான சத்தமும் வராததால், தனது ‘உதடுகள்' உண்மையில் சிரிப்பை வெளிப்படுத்தவில்லை ன்று அனுமானித்துக் கொண்டார்.

அப்போது பரியாரின் விளக்கம் தெளிவாகக் கேட்டது.

 

இஞ்சை பாருங்கோ, வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூண்டிலையும், வாதமும், பித்தமும் விழுந்து போச்சு. இப்ப தனியச் ‘சிலேட்டுமத்தில' மட்டும் தான் ‘உயிர்' தொங்கிக்கொண்டிருக்கு. போன முறை, அடங்கேக்க, வாதம்' விழுந்து போகப் ‘பித்தம்' கொஞ்சம் ஓடிக் கொண்டிருந்தது.

 

பரியாரிக்கு வாணரில கனகாலத்துக் ‘கறள்' ஒண்டு இருக்குது எண்டு வாணருக்குத் தெரியும். பெரிசா ஒண்டுமில்லை. அவன் சின்னப் பெடியனா இருக்கேக்கை, ஒரு கலியாண வீட்டுக்கு வாணர் கூட்டிக்கொண்டு போய், அங்கை வடிவாச் சாப்பிட்ட பிறகு, வாசல்ல போற ஆக்கள் ‘மொய்' எழுதிறதைப் பாத்த பரியாரியும்,அதென்ன எண்டு கேக்க, வாணரும், ஆக்கள் சாப்பிட்டதுக்குக் காசு குடுக்கினம் எண்டு சொல்லவும், பொக்கற்றில்லாத காச்சட்டையோட நிண்ட பரியாரியாரும், காவோலை  வேலிக்கிள்ளால பூந்து வெளியால ஓடேக்கிள்ள, முதுகில வேலிக்கருக்குப் பிளந்து போட்டுது. வடுவா, இவ்வளவு காலமும் அதை மறக்காம வைச்சிருக்கிறான் எண்டு கறுவிக்கொண்டார்.

 

வாணருக்குத் தாய், தகப்பன் வைச்ச பெயர் அம்பலவாணர். அந்தக்காலத்திலேயே கொஞ்சம் நவீனமான சிந்தனையுள்ளவர் எண்ட படியால, அம்பலத்தைத் தூக்கி வெளியால போட்டிட்டார். அதோட, அவர் நிரந்தரமாய்ச் செய்த தொழிலும், ஊரில உள்ள ஆக்களிட்டை, ஆட்டுக்குட்டியள வாங்கி, மாதத்தில ஒருக்கா வாற முஸ்லிம் வியாபாரியளின்ர லொறியில. மொத்தமா ஏத்தி அனுப்பறது தான். அந்தத் தொழிலையும் செய்துகொண்டு, அம்பலத்தின் பெயரையும் காவிக் கொண்டு திரியிறது, அவ்வளவு பொருத்தமாக அவருக்குப் படவில்லை.

 

‘அப்புவை நினைச்சாப் பெரிய கவலையாக்கிடக்குது, என்று மகன் சொல்வது அவருக்குத் தெளிவாகக் கேட்டது. நான் காசைக் கையில குடுக்கிற நேரமெல்லாம், அப்புவும் ‘வேண்டாம், மகனே, எனக்கென்னப்பு குறை?, நீ தான் வச்சுக்கொள்ளு' எண்டு வாங்கவே மாட்டார் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

 

மகன் ஒரு முறை திருவிழாவுக்கு வந்த நேரம், அவன் கோவிலுக்குக் கட்டிக்கொடுத்த ‘மணிக்கூண்டுக் கோபுரம்’, அம்பலவாணர் உபயம், என்று சிவப்பு நிற எழுத்துக்கள்  சூரிய ஒளியில் மின்னிய படி நின்று கொண்டிருந்தது் .

 

வாணருக்கும்  ஆட்டு லொறி வரப்பிந்தினதாலும்,, ஊரில கொஞ்சம் முன்பணம் கொடுத்து ஆடுகளை ‘புக்' பண்ணி வைச்சிருந்ததாலும், கொஞ்சம் காசு தேவைப்பட்டது. ஊருக்கிள்ள ஆரிட்டையும் கொஞ்சக்காசு கடன் கேட்கலாம் எண்டாலும், மகனின்ர ‘கௌரவமும்' அந்தக் கடனில் தொங்கிக்கொண்டிருந்த படியால் ஒருவரிடமும் வாய் திறந்து கேட்க முடியவில்லை. எனவே, துணிந்து மகனிடம் ‘தம்பி, கொஞ்சம் காசு தேவைப்படுகுது, லொறி வந்த உடன கொழும்புக்கு அனுப்பி விடுகிறன் என்று கேட்டுப்பார்த்தார்,

 

அப்பு, இப்ப தான் கோவில் காசு குடுத்திட்டு நிக்கிறன். நீங்கள் லொறியைக் கொஞ்சம் கெதிப் பண்ணி வரச்சொல்லுங்கோ, என்று சொன்னபடி போய் விட்டான்.

 

அப்போது, யாரோ மூக்கைச் சீறி எறியும் சத்தம் கேட்டது.மகன் அழுகிறான் போலும். மீண்டும் தனக்குள் சிரித்துக்கொண்டார்.

 

யாரோ அருகில் சுருட்டுப் பிடிக்கும் வாசம் வந்தது. அவருக்கும் ஒண்டைப் பத்தவைச்சால் நல்லம் போல கிடந்தது.

 

௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦                            ௦௦௦௦௦௦                               ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦                            

உடனேயே தான் இப்போது ‘அடங்கிப்போய்' இருப்பது் நினைவுக்கு வரவும், கொஞ்சம் மூச்சை இழுத்து ஆழமாக விட்டுக் கொண்டார். சுருட்டுப் புகை, உள்ளே போனதோ இல்லையோ, உடம்பில் கொஞ்சம் 'புத்துணர்வு' திடீரெனப் பாய்ந்த மாதிரி இருந்தது.  தனது புத்தியை நினைக்க அவருக்குப் பெருமையாக இருந்தது. இந்த 'நரிப்புத்தி' அவருக்குப் பல விதங்களில், பல தடவைகளில் உதவியிருக்கின்றது. .

 

‘மனுசனுக்குச் சமைக்கவே தெரியாது.  நான், இரண்டாவதை வயித்தில வைச்சிருக்கிற நேரம், மனுசன் கறி வைக்க வெளிக்கிட்டு,கறிக்குள்ள போட்ட மீனெல்லாம் கரைஞ்சு போய்த் தனிய முள்ளு மட்டும் தான் கறியிக்கை மிஞ்சிக்கிடந்தது. அதுக்குப் பிறகு மனுசனை அடுப்படிப்பக்கம் நான் விடறதேயில்லை. இப்ப கூட, சாரதாக்கா வீட்டிலையிருந்து தான் மனுசனுக்குச் சாப்பாடு போறது' எண்டு வாணரின் மனுசி, அங்குள்ளவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்ததும் வாணருக்குத் தெளிவாகக் கேட்டது.

 

அட, நான் திரும்ப எழும்பவே மாட்டன் எண்டு எல்லாரும் நினைச்சுக்கொண்டினம் போல கிடக்கு. இந்த முறை, முழிச்சு எழும்பட்டும். எல்லாருக்கும் செய்யிறன் வேலை, எனத் தனக்குள் சொல்லிக்கொண்டார். வாணரும் அந்த நாளையில லேசுப்பட்ட ஆளில்லை. பழி வாங்கிற குணம் அவரோட கூடப்பிறந்தது.

 

வாணரின்ர மனுசி, எப்ப சமைக்கிறதை நிப்பாட்டினது எண்டு வாணருக்குச் சரியாக நினைவுக்கு வரவில்லை. இரண்டாவது மகளின் கலியாணம் முடிஞ்ச கையோடையா அல்லது மூத்த மகளுக்குக் பேரன் பிறந்த கையோடையா என்று கண்டு பிடிக்கக் கொஞ்ச நேரம் முயன்று, பின்னர் அந்த முயற்சியைக் கைவிட்டார். திடீரென ‘அம்மாவுக்கு'  எல்லாப் பிள்ளையளின்ர வீட்டிலையும், திடீர் கிராக்கி ஏற்பட்டதும், ‘இனி, அப்புவுக்குத் தனிய உலை வைக்கிறதா? வீட்டை வந்து சாப்பிடுவார் தானே என்ற சமாதானமும் கூறப்பட்டது நினைவிருக்கின்றது. கொஞ்ச நாள், பிள்ளையளின்ர வீட்டை போய்ச் சாப்பிட்டுப் பார்த்தார். பல நாட்களில்,அவரது ஆடு பிடிக்கிற தொழிலால், அவருக்குச் சாப்பாட்டு நேரத்துக்கு வீட்டுக்குப் போக முடியாமல் போய்விடும் அல்லது ஆரோடையும் தவறனைக்குள்ள உள்ளிட்டால், நேரம் போறது தெரியாமல் போய்விடும்.  அவ்வாறு போகும் போது, மக்களின் பார்வையில், பல அர்த்தங்கள் தெரிவதாக அவர் உணர்ந்தார். தன்னால, இனிப் பிள்ளையளுக்குக் ‘கரைச்சல்' வரக்கூடாது என்று தானே சமைக்கத் துவங்கியது நன்றாக நினைவிருக்கின்றது. பிறகு பேரப்பிள்ளையளும் வளர, மனுசியும் கொழும்புக்காறியாப் போச்சுது. அவருக்கும் கொழும்புக்குப் போய்ப் பிள்ளை குட்டியளோட இருக்க இடைக்கிடை ஆசை வந்து போகும். ஆனால், ஒரு பிள்ளை கூட, அப்பு, என்னோட வந்து இருக்கலாம் தானே, என்று இதுவரை வாய் திறந்து கேட்கவில்லை. அது மனுசியின்ர பிழையா, பிள்ளையளின்ர பிழையா, தன்ர வளர்ப்புப் பிழையா, அல்லது மொத்த ஆண்குலத்தின்ர பிழையா என்ற கேள்வியைப் பல தடவைகள் தன்னைத் தானே கேட்டிருப்பார்! இரவு நேரங்களில், நாய் குலைச்சு, நித்திரை முறிஞ்சிட்டுது எண்டால், இப்படியான நினைவுகள் வந்து மனதை அரிப்பதுண்டு. மனித உடலுக்கு வயது போனாலும், மனித உணர்வுகளுக்கு வயது போவதில்லை என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டார்.

 

இந்தக் கண்றாவியைக் காணப் பொறுக்காமல் தான் ‘சாரதாக்கா' தனக்குச் சமைக்கிறதில கொஞ்சத்தை அவருக்குக் கொண்டுவந்து கொடுக்கிறது.

வாணரும், இடைக்கிடை மீன், மரக்கறி எண்டு வாங்கிக் கொடுப்பதுண்டு. இந்தக் கதைக்குத் தான் வாணரின் மனுசி, கை, கால், மூக்கெல்லாம் வைச்சுத் தனது குற்றவுணர்வில் இருந்து விடு படுகிறதுக்குக் கதை புனையுது என்று அவருக்குப் புரிந்தது.

 

நாங்கள் அப்புவோட இருந்த காலத்திலை, ஒரு நாள் கூடக் கடைக்குப் போய், அரிசி வாங்கினது கிடையாது. அப்புவின்ர வயல்ல இருந்து, மூட்டை, மூட்டையாத் தான் நெல்லு வாறது. மனுசனும், நெடுக ஏதாவது ஒரு முயற்சி பண்ணிக்கொண்டே இருக்கும். இல்லாவிட்டால், எங்க இரண்டு பேருக்கும், சீதனமும் தந்து, ‘முதலாளி' மாப்பிள்ளையளாப் பாத்துக் கட்டி வைச்சிருக்க ஏலுமே. கடைசிக் காலமெண்டு, எங்களோட வைச்சிருந்து பாக்க எங்களுக்குத் தான் கொடுத்து வைக்கேல்ல. அவரைக் கொழும்புக்கு வாங்கோ, வாங்கோ எண்டு ஒவ்வொரு முறை வரேக்கையும் அவரிட்டைக் கேக்கிறனாங்கள். பிள்ளை நான் ‘காம்பறாக்குள்ள' இருந்து எப்படிச்சீவிக்கிறது எண்டு சொல்லி மாட்டனெண்டு சொல்லிப்போடுவார். ஒருவரும் கேட்காமலே, இரண்டு மகள்மாரும் தங்களுக்கிடையே பேசிக்கொள்வதும் வாணரின் செவியில் விழுந்தது. இப்போது ஏறத்தாள ஒரு ‘மரத்துப் போன' நிலைக்கு அவர் வந்திருந்தார். காரணமில்லாமல், பட்டினத்தார் நினைவில் வந்து வந்து போகத் தொடங்கினார்.

 

அந்த நேரம் பார்த்துப் பரியாரியார் கிட்ட வந்து அவரது கையைத் தூக்கிப் பாத்தார். இப்ப ‘சிலேட்டுமமும்' விழுந்து போச்சுது போல கிடக்கு. இனி, ஆள் தப்பாது. மகனோட ஒருக்காத் தனிய கதைக்கவேணும் என்று சொல்வது தெளிவாக வாணருக்குக் கேட்டது. பின்னர், பரியாரி எதையோ மகனிடம் சொல்லவும், மகனும் மூண்டாந்தரமாய் , கடை, கிடை எல்லாத்தையும் விட்டிட்டு வந்திருக்கிறம்.  இனியும் , அப்பு எழும்புவார் எண்டு எங்கள்ள ஒருத்தருக்கும் நம்பிக்கையில்லை. ஏதோ, நீங்க செய்யிறதைச் செய்யுங்கோ எண்டு சொல்வது கேட்டது.

 

பிறகு பரியாரியும், உரத்த சத்தத்துடன் ‘நல்லா ஆண்டு அனுபவிச்ச மனிசன். எல்லா நாடியும் விழுந்துபோன பிறகும், மனிசன்ர உயிர் என்னும் போகாமல் இருக்குதெண்டால், ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். நான், என்ர அனுபவத்தில, இப்பிடிக் கன பேரைக் கண்டிருக்கிறன்.’ மண் ஆசை' மட்டும் மனுசன்ர உயிரைப் போகவிடாமல் பிடிச்சுக் கொண்டிருக்கு. பாலுக்குள்ளை, கொஞ்சம் மண்ணைப் போட்டுப் பிள்ளையள் பருக்கி விடுங்கோ! மனிசன் சந்தோசமாய்ப் போயிரும்'

 

ஒரு நீதிபதியின் உத்தரவைக் கேட்டது போல, எல்லோரும் திடீரென அமைதியாகியது போல இருந்தது. பின்னர் மகன், ஒரு மூக்குப் பேணிக்குள்ள, கொஞ்சம் பாலைக் கொண்டுவரப் பரியாரியார், கொஞ்சம் மண்ணையள்ளி அதனுள் போட்டு, அவரது வாயைத்திறந்து, ஒரேயடியாக, அவ்வளவத்தையும் வாணரது வாய்க்குள் ஊத்தினார். அது மட்டுமல்ல, அவரது மூக்குத் துவாரங்களையும் தனது விரல்களால் இறுக்கமாகப் பொத்தியிருந்தார்.

 

வாணரின் உடல் அசையவேயில்லை. அவரது கண்கள் மட்டும் திடீரெனத் திறந்து கொண்டன! அந்தப்பார்வை, அவர் ஆட்டுக்குட்டிகளைக் கொலைக்களத்துக்கு அனுப்பும்போது அவற்றின் கண்களில் தெரிந்த ‘இயலாமையுடன் கெஞ்சும்' பார்வையைப்போலவே இருந்தது.

 


தங்கக்கடியாரம்...வைர மணியாரம்..!

posted Apr 26, 2014, 6:28 PM by வாடா மல்லிகை   [ updated Apr 26, 2014, 6:28 PM ]

சந்திரனுக்கு அது ஒரு குறுகுறுத்த பருவம்!

 

பாவாடை, சட்டையோட என்னத்தைப் பார்த்தாலும் வடிவாத் தெரியிற காலம்!

அண்டைக்கும் சரசு வழக்கம் போல, படலையைக் கடந்து சென்றாள். ஒரு கொஞ்ச தூரம் நடந்து போய்த் திரும்பிப் பார்த்து, கழுத்தைத் திருப்பி ஒரு சின்ன “‘வெட்டு"!

சும்மா ‘வெட்டு' எண்டு எழுதமட்டுமே முடியுமே தவிர, அதை எழுதி விளங்கப்படுத்திறது கொஞ்சம் கடினமான காரியம்!

 

ஆனால், அடி வளவுக்குள்ள பனங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த ஆச்சிக்கு, அந்த ‘வெட்டின்' அர்த்தம் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்!

மனுசி நேர சந்திரனிட்டை வந்து, ஒரு ஒளிவு மறைவுமில்லாமல், தம்பி, உனக்கும் அந்தப் பெடிச்சிக்கும் இடையில ஏதாவது இருக்கோ? என்று கேட்கவும், இப்படியான நேரடித்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத சந்திரனும்  அப்பிடியொண்டும் இல்லையணை எண்டு வார்த்தைகளைத் தேடவும், மனுசியும், தம்பி உனக்குத் தங்கச்சிமாரெல்லாம் இருக்கினமப்பு! இந்த ‘எடுபட்டதுகளைப்’ பாக்கிறதை விட்டிட்டுக் கவனமாப் படிச்சுப் பெரிய உத்தியோகத்திலை இருந்தாய் எண்டால், நானா, நீயா எண்டு தங்கட பெட்டையளைக் குடுக்கப் போட்டி போடுவாங்களப்பு! வீடென்ன, வாசலென்ன, நகையென்ன, நட்டென்ன எல்லாம் தந்து அள்ளிக்கொண்டு போவாங்களெல்லோ. எண்டு ஒரு பிரசங்கமே செய்து முடிச்சுது!

இதுக்குப் பிறகு, வீட்டுக்கு வெளியால சந்திரன் வாற நேரமெல்லாம், ஆச்சியும் விறகு பொறுக்க வாறதும் வழக்கமாகிப் போனது!  

 

இந்த முதலாவது சம்பவத்துக்குப் பிறகு, ஊருக்குள்ள கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது நல்லது எண்டு சந்திரன் முடிவு செய்து விட்டான்! ஆச்சியும் தனது ‘புலனாய்வு முயற்சிகளைக்' கொஞ்சம் தளர்த்தின மாதிரி இருந்தது! பிறகு சந்திரனும்,யாழ்ப்பாணத்துக்குப் படிக்கப் போகத் தொடங்க, எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக அவனது நினைவிலிருந்து விலகிப் போனது! சந்திரனது படிப்பும், ஒரு மாதிரி முடிஞ்சு, கொழும்புக்கு வேலைக்கும் போகத் தொடங்கியிருந்தான்!

ஆராவது ஊருக்கிள்ள கொஞ்சம் படிச்சுக் கிடிச்சு வந்திட்டால், கலியாணப் புறோக்கர் மாருக்கு ஒரு விதமான ‘அரிப்பு' ஏற்படும்!. அவர்களும் சந்திரனது வீட்டாரை அணுகி, ஒரு மாதிரி அடிக்க வேண்டிய ;குழை’ எல்லாம் அடிச்சு, ஒரு மாதிரி, ‘புரிந்துணர்வு உடன்படிக்கை' ஒன்றை முடித்திருக்க வேண்டும்!

 

சந்திரனோட ஏதாவது முக்கியமான விசயங்கள் கதைக்க வேண்டுமெண்டால், தாய், தகப்பன் அவனை அணுகிறது குறைவு. ஆச்சி தான், அனேகமாக ஒரு நல்லெண்ணத் தூதுவராக அனுப்பப் படுவது வழக்கம்! சின்னனா இருக்கேக்க, நல்லெண்ணெய் தடவித் தடுக்கில ‘பிரள' விட்டதிலையிருந்து, இண்டைக்கும் சனிக்கிழமையில தலைக்கு எண்ணெய் வைச்சுத் தப்பி விடுகிறதால, மனுசி கொஞ்சம் நெருக்கம் கூடத் தான்!,அண்டைக்கும் ஆச்சியும் சந்திரனிட்டை வந்து வழக்கத்துக்கும் மாறாகக் குழைஞ்ச மாதிரிக் கிடக்கச் சந்திரனும், என்னணையாச்சி, கொஞ்சம் விளக்கமா விசயத்தைச்  சொல்லணை, எண்டு கேட்க மனுசியும் கதையைத் துவங்கிச்சுது.

 

‘தம்பி, நீயும் படிச்சு முடிச்சிட்டாய். உனக்கும் காலா காலத்திலை, ஒரு கலியாணத்தைக் கட்டி வைக்கலாம் எண்டு அம்மாவும், அப்பாவும் முடிவு பண்ணியிருக்கினம். அவை எப்பவும் உனக்கு நல்லது தானே செய்வினம். தங்கச்சியளுக்கும் வயசாக முந்திச் செய்ய வேண்டுமெல்லோ எண்டு ஆச்சியின் கதை தொடர்ந்து கொண்டே போனது!ஆச்சியோடை சண்டை பிடிச்சு ஒண்டும் ஆகப்போவதில்லை, என்று அனுபவத்தில் தெரிந்திருந்தபடியால், கொஞ்சம் விட்டு ப்பிடிப்பம் எண்டு யோசிச்ச சந்திரனும், ஆரணை பெட்டை எண்டு கேட்க, வேறை ஆரு, நம்மடை ராசாத்தி தான் எண்டு சொல்லவும்,’கிர்ர்' எண்டு தலைக்குள் என்னவோ சத்தம் கேட்டது மாதிரியிருக்கச் சந்திரனும் அப்படியே நிலத்தில் அமர்ந்து விட்டான்!

 

அட கடவுளே, சில வேளையில அவசரமான அலுவலாப் போகேக்குள்ள, உன்னைக் கும்பிடாமல் கோயிலைக்கடந்து போயிருப்பன், அதுக்காக இப்பிடியா என்னைத் தண்டிக்க வேண்டும்? என நினைத்துக் கொண்டான், இவ்வளவுக்கும் ‘ராசாத்தி  பெரிய அழகு எண்டு சொல்லாவிட்டாலும், நிச்சயமாக ‘அலங்கோலம்; இல்லை. அழகும் சந்திரனுக்குப் பெரிய பிரச்சனையில்லை. ஏனெனில் அவனும் பெரிய ‘மன்மதக்குஞ்சு’ இல்லையென்று அவனுக்குத் தெரிந்தே இருந்தது.. அவளது அப்பா ஒரு பெரிய முதலாளி என்பது அவனுக்கு முதலாவது பிரச்சனை. அடுத்ததாக, ராசம்மா பள்ளிக்கூடத்தில படிக்கிற காலத்தில,ஆங்கில வாத்தியார் அவளுக்கு நாற்பதாம் வரிசையும், ஐம்பதாம் வரிசையும் சொல்லிக்குடுக்கப் பட்ட பாடு, பள்ளிக்குடம் முழுக்கத் தெரியும்.

அந்த ‘எவ்'  சத்தம் மட்டும் அவளுக்கு ‘எப்' எண்டு தான் வரும்.அதால அவளின்ர பட்டப்பெயரே ‘பவுண்டின்' . அந்தக்காலத்திலை ‘சியால்' எண்டொரு பேனை இருந்தது. அதால, ராசம்மாவும், பேனையப் பற்றிக்கதை வந்தால், அந்த இடத்தில் ‘சியால்' என்றே பேனைக்குப் பதிலாகக் கதைப்பாள். அது ‘பைலட்' எண்டாலும், அதுக்கும் பேர் ‘சியால்' தான்!  அவளும் கடைசி வரைக்கும் ‘எப்'' எண்டே பிடிவாதம் பிடிக்கக் கடைசியாக் களைச்சுப் போன வாத்தியும், நீ சொல்லுறது தான் சரியெண்டு சொல்லிச் சரண்டர் பண்ணின கதை அவனுக்கும் தெரிந்திருந்தது!.  


அவளுக்கு உன்னில, படிக்கிற காலத்திலேயிருந்து நல்ல விருப்பமாம்!

ஆச்சியின் பேச்சு அவனை இந்த உலகத்துக்குத் திரும்பக் கொண்டு வந்தது!

நல்ல ‘சீதனமும்' கொடுக்கினமாம் எண்டு கேள்வி, எண்டு ஆச்சியும் ஒண்டும் தெரியாதமாதிரி, சந்திரனுக்குத் தலையில நல்லெண்ணெய் தடவிற மாதிரிக் கதையை நகர்த்த, அவனுக்கும் தங்கைகளின் ‘முகங்கள்' வரிசையாக நினைவில் வந்து போயின!


ஏதோ, ஒரு காரணத்தினால், அல்லது பல காரணங்களினால், அவன் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் குறுக்கிட்ட போதும், நிரந்தரமான வலிகளோ, வடுக்களோ இன்றி, இது வரை அவனால் விலகிச் செல்ல முடிந்திருக்கின்றது! அப்படியானால், காதலே சந்திரனுக்கு ஏற்படவில்லையா? என்ற கேள்விக்கும் அவனால் பதில் சொல்ல முடியாது! ஒவ்வொன்றிலும் இனம், மதம், மொழி என்று பல தடைகள் குறுக்கிட்டன!அவனைக் காதலிப்பதாகக் கூறியவர்கள், எவருக்கும் காதலுக்காக, அவற்றைக் கடந்து செல்லும் தைரியம் இருக்கவில்லை! அவற்றைக் கடந்து வரத் துணிந்த ஒருத்தியையும் விட்டுவைக்கக் காலனுக்கும் கருணையில்லை!

 

நீ விரும்பும் பெண்ணிலும் பார்க்க, உன்னை விரும்பும் பெண்ணொருத்தி இருப்பாளானால், நீ மிகவும் பாக்கியசாலி என்று பலவிதமான சமாதானங்களைத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்! தூரத்திலிருந்து தனது மனதைத் தானே பார்த்து, அதனுடன் அளவளாவக்கூடிய ‘குணாதிசயத்தை' அவன் வளர்த்துக்கொண்டது அவனுக்கு இப்போது மிகவும் உதவியாக இருந்தது!  சரி,சந்திரன் ‘கோழை' தான் எனத் தீர்ப்பளித்து விட்ட திருப்தியுடன், கதையை நோக்கி நகர்வோம்!

 

திருமண ஆயத்தங்களில், ஒரு பணக்கார முதலாளியின் ‘ஆடம்பரங்கள் அத்தனையும் குறைவின்றி இருந்தன! திருமண அழைப்பிதழ் கூட, அவனது பட்டதாரிச் சான்றிதழை விடவும், நேர்த்தியான கடதாசியில் அச்சிடப்பட்டிருந்தது! அவனது பெயரை விட, அவனது பட்டமும், தொழிலும் கொஞ்சம் பெரிதாக அச்சடிக்கப்பட்டிருந்ததையும், சந்திரனின் கண்கள் அவதானிக்கத் தவறவில்லை! மாப்பிள்ளை அழைப்பின் போதும், ஒரு இயந்திரத்தனமான சிந்தனையுடன் நடந்து வந்தவனை ,’என் தலைவன் வருகிறான், தேரிலே….! எனற நாதஸ்வர வித்துவானின் பாடல், ராசாத்தியின் வீடு அண்மையில் வந்து விட்டதை, அவனுக்கு உணர்த்தியது!,சிறு குழந்தைகள்,கலகலப்புடன் குரும்பட்டிகளில் தேர் செய்து விளையாடும் விளையாட்டைப் போலவே பெரியவர்களின் கலகலப்புக்களுடன், திருமணமும் இனிதே நடைபெற்று முடிந்தது!

 

திருமணம் முடிந்த கையோடு, நயினாதீவுக் கோவில் திருவிழாவும் வந்த படியால் அங்கேயும் ஒருக்காப் போய்வாறது நல்லது எண்டு, ராசாத்தியின் குடும்பம் முடிவு செய்தது! கோயிலுக்கு வெளிக்கிட்ட ராசாத்தியைப் பார்க்க, அவனுக்கு முதலாவது ‘தலைச்சுற்று' ஏற்பட்டது! கலியாண வீட்டுக்குப் போட்டிருந்த அவ்வளவு நகையும் அவளது கழுத்தில் இருந்தது! அவனும். எவ்வளவுக்குக் குரலில், இனிப்பைக்குழைக்க முடியுமோ அவ்வளவுக்குக் குழைச்சு, ‘இஞ்சை, பாருங்கோ, இதெல்லாத்தையும் கழட்டி வைச்சிட்டு, சிம்பிளா ஒரு சங்கிலியை மட்டும் போட்டுக்கொண்டு வாங்கோ! எண்டு சொல்லவும், சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த தகப்பனின் காதில் இந்த வார்ததைகள் விழுந்து விட்டன! குறை நினைக்காதையுங்கோ, தம்பி… பிள்ளை, ஆசையாய்ப் போட்டிருக்குது..நகையளைப் போட்டுக்கொண்டு போனாத்தானே, நாலு பேர், நம்மை மதிப்பினம்!  என்று சொல்ல, நான் கதைச்சது ராசாத்தியோட, என்று வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளை, மிகவும் சங்கடத்துடன், திரும்பவும் மென்று விழுங்கிக்கொண்டான்!  கொஞ்சம் மாலையாகிற நேரமானதால், கோயிலுக்குப் போறவழி நெடுகிலும், ஒரே சன நடமாட்டம்! மோட்டார் சைக்கிள்ல போன ஒரு ஆமிக்காறன், கிட்டவரவும் சேலைத் தலைப்பையிழுத்துத் ‘தற்பாதுகாப்பு நடவடிக்கையில் ஈட்டுபட்ட ராசாத்தியிடம், அக்கோய், வெலாவக் கீயத எண்டு கேட்க, ராசாத்தியும் கொஞ்சமும் தயங்காமல், பைப் போர்டி பைப் எண்டு சொல்லவும், ஆமிக்காறன் கொஞ்சம் ஆடிப் போனது கடைக்கண்ணில் தெரிந்தது!

 

ஒரு மாதிரி ராசாத்தியைக் கொழும்புக்குக் கூட்டிக் கொண்டு வந்த பின்னர்…..

 

அவனது வீட்டில், அவன் வீட்டுத் தேவைக்கான அரிசி, மா, பருப்பு, சீனி போன்ற பாரமான பொருட்களை வாங்கிகொடுப்பது அவனுக்குப் பழக்கமாகையால், அன்று வேலை முடிந்து வரும் வழியில் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் காவிக்கொண்டு வந்தான்! ராசாத்தியும் முகத்தில் எந்த விதமான சலனத்தையும் காட்டாமல், வீட்டிலை அனேகமா, வேலைக்காரர் தான் இதுகளைப் பாத்துக்கொள்ளுவினம்! மற்றது அப்பா எல்லாத்தையும் சில்லறையா வாங்காமல்,மூட்டை, மூட்டையாக் கொண்டு வந்து இறக்கி விடுவார்! சந்திரனுக்குக் கோபம் வந்தது தான்! ஆனாலும், ராசாத்தி எதற்காக இதைச் சொல்லுகிறாள் என்று அவனுக்குப் பிடிபடவில்லை! ஒரு வேளை, அவனுக்குச் சம்பளம் காணாதென்பதைக் குத்திக்காட்டுகிறாளோ என்றும் மனம் நினைத்துக்கொண்டது! சரி, எதற்கும் விட்டுப்பிடிப்பம் என்று தீர்மானித்துக் கொண்டான்!

 

ராசாத்தி இப்போதெல்லாம் வீட்டில் இருக்கும்போது நகைகள் அணிவதையும் நிறுத்தி விட்டிருந்தாள்! தகப்பன் வரப்போவதாகத் தெரிந்தால் மட்டும், அவற்றைப் போட்டுக்கொண்டாள்! ஆனால், அடிக்கடி எங்கட வீட்டிலை எண்டால்……. மட்டும் அடிக்கடி வந்து போனது! சந்திரனுக்கு, அவன் மீதே ஒரு விதமான பச்சாத் தாபம் ஏற்பட்டது! சரி, ராசாத்திக்கு என் மேல விருப்பம் இல்லைப்போல கிடக்கு! காசைக் குடுத்து வாங்கின சாமான் தானே எண்டு நினைக்கிறாளோ தெரியாது! அப்படி அவள் நினைத்தாலும், அவளில் தவறில்லைத் தானே!

 

ஒரு நாள் இரவு ஏழு மணியிருக்கும்! சுவரில் இரண்டு பல்லிகள் ஒன்றையொன்று துரத்திப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன! அவனும் தானும் ஒரு பல்லியாகப் பிறந்திருந்தால், இந்த சீதனப் பிரச்சனையில்லாமல் இருந்திருக்கும்! ‘ராசாத்தி' என்ட பல்லியை, எந்த விதமான மனச் சஞ்சலங்களுமின்றி, அந்த ஆண் பல்லியைப் போல துரத்திப் பிடித்து விளையாடியிருக்க முடியும் என எண்ணியவன், ராசாத்திக்குத் தன் மீது விருப்பமில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான்! உடனேயே, மனம் மாற முந்தியே ராசாத்தியைக் கூப்பிட்டு, ராசாத்தி, நான் ஒரு அவசர அலுவலா, எங்கட வீட்டை போகவேணும்! நீ கொஞ்ச நாளைக்கு அப்பாவோட, அவற்றை கொழும்பு வீட்டில போய் இரு! என்று கூறியவன் தான் செய்வது சரி தானா என்றும் சிந்தித்தான்! ஆயினும் மனத்தை மாற்றிக்கொள்ளாமல், வேலைத்தலத்து  மேலாளரிடம், எதிர்பாராத் விதமா, ஊருக்குப் போக வேண்டி வந்திட்டுது! அங்க போன பிறகு உங்களோட வடிவாக் கதைக்கிறன் என்று தொலைபேசியில் தெரிவித்து விட்டு, ராசாத்தியின் தகப்பனாருக்கும் விசயத்தைச் சொன்னான்! என்ன தம்பி, இருந்தாப் போலை, என்று இழுத்தவர் அதிகம் அலட்டாமல், சரி, தம்பி என்று போனை வைத்துவிட்டார்! அவரது ‘வியாபார மூளை' இவ்வளவுக்குள், ஆயிரம் காரணங்களைத் தேடியிருக்கும் என்றும் அவனுக்குத் தெரியும்!

 

அன்று இரவே பஸ் பிடித்தவன் யாழ்ப்பாணம் வரும் வரைக்கும் ஒரே யோசனையில் ஆழ்ந்திருந்தான்! விடியக்காலமை வீட்டையடைந்த போது, தலை ஏறத்தாழக் கொதிநிலையில் இருந்தது! வீட்டில், ஒரு அலுவலா வர வேண்டி வந்திட்டுது எண்டு சொல்ல அவர்களது அடுத்த் கேள்வி, அப்ப ஏன் அண்ணியைக் கூட்டிக்கொண்டு வரேல்லை? எண்ட கேள்வி அவனைத் திக்குமுக்காட வைத்துவிட்டது! எத்தினை நாளெண்டு வடிவாத் தெரியாததால, அவவின்ர அப்பா வீட்டை விட்டிட்டு வந்திட்டன்!

 

ஆச்சி, தனது முகத்தைத் அவவின்ர தோள்பட்டையில் இடிச்ச விதம், அவனிடம் இதைப்பற்றி ஆச்சி மேலும் கதைக்கப் போவதில்லை என்பதை அவனுக்கு உறுதிப்படுத்தியது!

 

இரண்டு நாட்கள் போயிருக்கும்! இருந்தாப்போல, சந்திரனுக்கு அடிவயிற்றில் ஒரு வலி ஏற்பட்டது!  வலி தாங்க முடியாமல் போகவே, வீட்டிலிருந்து அவனை, அவனது நண்பனொருவன் உடனடியாக ஊரில் உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனான்! அங்கே அவன் மயக்கமானது மட்டும் தான் அவனுக்கு நினைவிருந்தது! எவ்வளவு நேரம், அவன் அந்த நிலையிலிருந்தான் என்பதைக்கூட அவனால் அனுமானிக்க முடியவில்லை! மெதுவாக ;மயக்கம்' தெளிந்து கொண்டிருந்தது!

 

ராசாத்தியின் குரல் வெளியிலிருந்து கேட்டது மாதிரியிருந்தது!

 

ஐயோ, என்ர ராசாவைப்பாக்க விடுங்கோ! என்ர கிட்னியில ஒண்டை அவருக்குக் குடுங்கோ! உரத்த குரலில், அவள் யாரிடமோ கெஞ்சிக்கொண்டிருந்தாள்!

 

அப்போது அங்கு வந்த மருத்துவர், சந்திரன் உமக்கு ஒரு பிரச்சனையுமில்லை! உங்கட நண்பன், உங்களுக்கு ‘வயித்துக்குத்து' எண்ட உடனை ‘கிட்னிப்பிரச்சனையா இருக்கும் ; எண்டு சொல்லி உங்கட வீட்டில சொல்ல, அவை கொழும்புக்கு உங்கட மனுசியிட்டைச் சொல்ல, அவை அப்பிடியே கார் ஒண்டைப் பிடிச்சுக்கொண்டு நேர இஞ்சதான் வந்திறங்கியிருக்கினம்! நான் அவையோடை இன்னும் கதைக்கேல்லை! கொஞ்ச நேரத்தாலை உள்ளுக்கு அனுப்பி விடுறன்! நீங்களே நேரில, இந்தச் சந்தோசமான செய்தியைச் சொல்லுங்கோவன் என்ற படி மெல்ல நழுவினார்!

 

சந்திரன் நனைந்து போன தலையணையினுள் மேலும், மேலும் புதைந்து கொண்டிருந்தான்!

 

 



இக்கரையும், அக்கரையும்...ஒரு இரைமீட்டல் !

posted Apr 26, 2014, 6:24 PM by வாடா மல்லிகை   [ updated Apr 26, 2014, 6:24 PM ]


அந்த வேப்ப மரத்தின் நிழலில், சாக்குக்கட்டிலில் படுத்திருந்த சந்திரனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது! ஒரு நீண்ட காலச் சொகுசு வாழ்க்கை அவனது உடலை இன்னும் மாற்றிவிடவில்லை என நினைத்தபோது, தனது உடலைப்பற்றிக் கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது! பல வருடங்களுக்கு, முன்பும் இதே இடத்தில். பல தடவைகள் மதியச் சாப்பாட்டின் பின்பு படுத்து உறங்கியிருக்கிறான்! அப்போது, அருகே இருந்த தென்னம் பிள்ளையில், எட்டிப்பிடிக்கலாம் போலச் செவ்விளனிக் குலைகள் தொங்கும்! அவற்றின் அழைகைப் பல முறை பார்த்து வியந்திருக்கிறான்! ஒரு கவிஞனாக இருந்திருந்தால், அவனது அந்த வயதின் கற்பனைகள், அளவில்லாத, அர்த்தமில்லாத ஆயிரம் கவிதைகளையாவது  புனைந்திருக்கும் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை! இப்போது அந்தத் தென்னம்பிள்ளை, தென்னை மரமாகி, ஏறிக் கூடப் பறிக்க முடியாத அளவுக்கு மேலே போய்விட்டது! அதனைப் போலவே, அந்த நேரத்தில் அருகில் இருந்தன போலவும், அவனால் இலகுவாக அடைந்திருக்கலாம் போலவும் இருந்த பல , அந்தத் தென்னைமரத்துத் தேங்காய்களைப்போலவே வெகு உயரத்துக்குப் போய் விட்டன!

 

அப்போது, வேப்பமரத்திலிருந்து காகம் ஒன்று பிடுங்கிப்போட்ட ஒரு வேப்பம்பழம் அவன் மேலே வந்து விழுந்தது! முந்திய சந்திரனாக இருந்திருந்தால், ‘யக்' என்று கூறியபடி,அதைத் தூக்கி எறிந்திருப்பான்! அத்துடன் ஒரு மூன்று ‘திசுக்களாலாவது' துடைத்து எறிந்து, அந்தக்காகத்தையும் நாலு ‘கெட்ட' ஆங்கில வார்த்தைகளால் திட்டித் தீர்த்திருந்தால் தான் அவனது ஆத்திரம் அடங்கியிருக்கும்! ஆனால் இப்போது, அவனது மனம் காகத்தின் பக்கமும் நியாயம் இருக்கின்றது என்ற விதத்தில் சிந்திக்கத் தொடங்கியது! நாலு பக்கமும் திரும்பிப் பார்த்துத் தன்னை ஒருவரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியவனுக்கு, அந்தப் பழத்தை வாயில் போட்டுச் சுவைக்கும் ஆசையும் வந்து விட்டது! அதனை வாயில் போட்டு உமிழ்ந்த போது, அந்த வேப்பங்கிளையில் ‘அன்ன ஊஞ்சல்' ஆடிய நினைவுகளும் பழைய நண்பர்களின் நினைவுகளும் வந்து போயின! எப்பவுமே ஒரு விதமான ‘அழுத்தநிலையில்' இருக்கும் அக்கரையின் மன நிலைக்கும், எந்த வித ‘அழுத்தமும்' இல்லாத இக்கரையின் மன நிலைக்கும் ஒரு நீண்ட இடைவெளி இருப்பது இப்போது தான் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது!

 

ஒரு ஆசிரியக் குடும்பமாக இருந்த அவனது பெற்றோரினால், அவனையும், அவனது சகோதரர்களையும், எவ்வாறு அவர்களது சம்பளத்தில் வளர்த்தெடுக்க முடிந்தது  மட்டுமன்றி, படிப்பித்துக் கரையேற்றவும் முடிந்தது என்பது இன்னும் கூட அவனுக்குப் புரியாத புதிராகத் தான் இருந்தது! அது மட்டுமன்றி, உறவுகள், சொந்தங்கள் என்று ஒருவருடனும், பிரச்சனைகள் இல்லாமல் அவர்களால் எவ்வாறு வாழ முடிந்தது என்பதும் கூட அவனுக்கு இன்னும் விளங்கின பாடாயில்லை ! என்ன காரணமாக இருக்கலாம் எனக் காரணங்களைத் தேடியபோது, அவர்களிடம் ‘பகட்டு' என்பது இருக்கவில்லை என்பதும், ஏதாவது ஒரு அவசியமில்லாத தேவை வரும்போது, ‘அடுத்த சம்பளம்' வரட்டும் என, இலகுவாக அவர்களது தேவைகளைத் தள்ளி வைக்கும் மனப்பாங்கும் தான் காரணமாக இருக்கலாம் என்றும் நினைத்துக்கொண்டான்! ஒரு வேளை, அடுத்த சம்பளத்தில் மட்டுமல்ல, அதற்கடுத்தடுத்த சம்பளங்களிலும் வேறு தேவைகள் வரும்போது, இன்னொரு சம்பளத்துக்கு அந்தத் தேவையைத் தள்ளிப்போடுவது அவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கவில்லை! மற்றது, அவர்களிடமிருந்த, சந்தேகத்துக்கிடமில்லாத ‘தெய்வ நம்பிக்கை' யும் ஒரு காரணமாக இருக்கலாம்!

 

என்ன வாத்தியார், பொம்பிளைப் பிள்ளையள் எல்லாம் வளர்ந்து கொண்டு வருகுதுகள், ஏதாவது திட்டமேதும் இருக்கா எண்டு யாராவது சீண்டினால், ‘படைத்தவன் படியளப்பான்' என்ற படி கதையை முடிக்க அவர்களால் முடிந்திருக்கிறது! என்ன, இந்த மனுசனுக்குப் புத்தி, கித்தி ஏதும் பிசகி விட்டதா எனத் தாயார் சொல்லும்போது, சந்திரனும் அப்படித்தான் யோசித்திருக்கிறான்! ஆனால், இறுதியில் ஏதோ ஒரு விதத்தில் படைத்தவன் படியால் அல்ல, சாக்கு மூட்டையாலேயே அளந்தது வேற கதை!

 

ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo

 

அவனது ஆரம்ப கால வாழ்க்கையை திரும்ப நினைத்துப்பார்க்கும் போது அவனுக்கே வெட்கமாக இருந்தது!  எவ்வளவு ‘சின்னப்பிள்ளைத் தனமாக' அவனும் உருத்திரனும் நடந்திருக்கின்றார்கள் என நினைக்கச் சிரிப்புத் தான் வந்தது! தன்னை மறந்து அவன் வாய் விட்டுச்சிரிக்கவும், தூரத்தில் படுத்திருந்த நாய், தன்னை யாரோ மல்லுக்குக் கூப்பிடுகின்றார்கள் என நினைத்து, உடலைச் சிலிர்த்தது! இங்கிலாத்துக்குப் போக வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டதே, அவனது நண்பன் உருத்திரனால் தான்! உருத்திரனது தமையன், ஏற்கெனவே இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தான்! அவன் அனுப்புகின்ற ‘பிறை நைலோன்' சேட்டுக்களை இவன் கல்லூரிக்குப் போட்டுக்கொண்டு வந்து காட்டுகின்ற எடுப்புக்களும், அவனது தமையன் ஊருக்கு வரும்போது, அவருக்கு நடக்கின்ற அரச மரியாதைகளும், அவனது தமையனது வாயிலிருந்து வழுக்கி விழுகின்ற ஒரு விதமான ஆங்கிலமும் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும்!

 

சரி, கதையை வளத்திக்கொண்டு போகாமல், சந்திரனும் உருத்திரனும் லண்டனுக்கு வந்து சேர்ந்து, இருவரும் ஒரு தெரிந்த நண்பரின் வீட்டில்,ஒரு அறையை வாடகைக்கு எடுத்துப் படிக்கத் தொடங்கினார்கள்! நண்பரும், தன்னிடமுள்ள ‘ மைக்கிரோ வேவை' இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்! அது என்னவோ ஒரு குமர்ப்பிள்ளை மாதிரியும், நாங்கள் தேவையில்லாமல் அதற்குக் கிட்டப்போகக் கூடாது எண்ட மாதிரியும் சொல்லியிருந்தார்! அதே நேரம், முன் பின் பழக்கமில்லாத லண்டன் குளிர் அவர்களை ஒரு பக்கம் வாட்டியெடுத்தது! நண்பர் வீட்டில், ‘சென்ட்ரல் ஹீற்றிங்’ இருந்தாலும் இவர்களிருந்த அறையான் மட்டும் கொஞ்ச நேரத்திலை தானாய் நிண்டு போயிரும்! சந்திரனும், உருத்திரனும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்த படி ஒரே கட்டிலில் படுப்பதால் கொஞ்சமாவது அந்தக்குளிரிலிருந்து தப்பிப்பிழைக்கக் கூடியதாயிருந்தது! இருவருக்கும், ஊரில் பல ‘பொறுப்புக்கள்' இருந்ததாலும், ‘வீட்டுக் கந்தோர்’ விசயத்தையும் கவனமாகக் கையாள வேண்டிய தேவை இருந்ததாலும், இருவருக்கும் கையில் ‘ காசு' மிஞ்சுவதில்லை! உருத்திரனின் அண்ணன்காரனின் நிலையும் இவர்களைப் போலத் தான் இருந்தது, அங்கு வந்த பின்னர் தான் புரிந்தது!

 

கொஞ்சம் தூரத்திலை போய் வேலை செய்தால், கொஞ்சம் உழைக்கலாம் என எண்ணிய உருத்திரன் மச்சான் ஒரு கார் வாங்கினால் என்னடா எண்டு சந்திரனுக்கு ஆசையை ஊட்டினான்! ஆனால் இருவருக்கும் கார் ஓடத் தெரியாது என்பது அப்போது பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை! இரண்டு பேரிட்டையும், இருந்த காசெல்லாத்தையும் சேர்த்து ஒரு ‘டற்சன் செர்ரி' ஒண்டும் வாங்கின பிறகு, உருத்திரனின் அண்ணனின், ‘பிறந்த தினத்தை’, மனப்பாடமாக்கி வைத்து இருவரும் ஓடக்கூடியதாக இருந்தது! கொஞ்சக்காலம் ஓடின பிறகு, பின்னால வாற, கோண் சத்தங்கள், நீட்டப்படுகின்ற நடுவிரல்கள் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாய்க் குறைஞ்சு போக,  ஒரு மாதிரி இருவரும் சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எடுத்தாச்சு!  அந்தக் கார் ஒரு ராசியான கார் தான்! போனட்டைத் திறந்து பார்த்தால் உள்ளுக்குள்ள கனக்க ஒண்டும் இருக்காது! அதுக்கு எண்ணெய், தண்ணி பார்க்கிறதெல்லாம் உருத்திரனும், சந்திரனும் தான்!

 

ஒரு நாள், உருத்திரன் ஒரு சேர்விஸ் ஸ்ரேசனில வேலை செய்யிற நேரம், விடியக்காலமை ஆரோ ஒருத்தன் தன்னுடைய புதிய ஹொண்டா கார் ஒண்டைக் கொண்டுவந்து கழுவியிருக்கிறான்! அப்போது, அவன் போனட்டையும் திறந்து, அதுக்குள்ளையும் ஹோஸ் பைப்பால, தண்ணியை அடிச்சுக் கழுவியிருக்கிறான்! அதைப்பாத்த உருத்திரனுக்குப் பொறுக்க முடியவில்லை! வேலை முடியத் தன்ர காரையும் அதே மாதிரிக் கழுவ, மிச்சம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்!

 

இன்னொரு முறை, வீட்டிலிருக்கும் போது, முன்வீட்டு கிழவியொண்டு,தன்ர மகனோடு சேர்த்து ஒரு பெரிய தொலைக்காட்சிப் பெட்டியொன்றைக் கொண்டு வந்து வெளியில வைத்து விட்டுச் செல்வதை இரண்டு பேரும் அவதானித்தார்கள். அதை ஆரெண்டாலும் எடுக்கலாம் என்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை! அந்தக் காலத்திலை ‘கலர் டிவி' என்பது பெரிய நினைக்கேலாத சாமான்! ஊரிலையே இரண்டு பேரும், சுப்பிரமணியம் பூங்காவுக்குப் போய், தேரில சாமி இருக்கிற மாதிரி ஒரு உயரமான இடத்தில  இருக்கிற டிவி யைத் தான் பார்த்திருக்கிறார்கள். அதில மேலிருந்து கீழ் நோக்கியோ, அல்லது கீழிருந்து மேல் நோக்கியோ கோடுகள் ஓடினது மட்டும் இன்னும் நினைவில இருக்குது! நல்ல இருட்டினாப்பிறகு, ஒரு மாதிரி அந்த டிவியைக் கொண்டு வந்து வீட்டில வைச்சாச்சு! அதில, ஜைரோ போஸ்ட் எண்டு ஒரு தபால் வந்கியின்ர விளம்பரம் ஒன்று போகும்! அப்போது ஒரு சிங்கம் ஒன்று மிகவும் வேகமாக ஓடிவரும்! எங்களது டிவியில் அந்தச் சிங்கத்துக்குப் பதிலாக ஒரு பூனைக்குட்டி ஒன்று 'கர்ச்சித்தபடி' ஓடிவரும்! கொஞ்ச நாளையில, இருவருக்கும் அது பூனைக்குட்டி தானோ என்ற சந்தேகமும் வராமலில்லை!! எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்த ஒரு நாளில், வீட்டுக்காரனின் பேரில் ஒரு கடிதம் வந்தது! அதில் அந்த வீட்டில் இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கின்றன என்றும் அதில் ஒன்றுக்கு மட்டும் ‘ லைசன்ஸ்' இருக்கெண்டும் மற்றதுக்குப் பணம் கட்டச் சொல்லியும் அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது! எவ்வளவு பணம் கட்ட வேண்டுமெனக் கேட்ட இருவருக்கும், தொகையைக் கேட்டதும் தலை சுற்றத் தொடங்கி விட்டது! வீட்டுக்காரர் தான் போட்டுக்கொடுத்திருப்பார் என்று இருவரும் நினைத்துக் கொண்டு, ஒருவருமில்லாத நேரம் இருவருமே அதைத் தூக்கிக் கொண்டு போய் முந்தியிருந்த இடத்திலேயே வைத்து விட்டார்கள்!

 

இதே போலவே உருத்திரனுக்கு இன்னுமொரு ‘ஐடியா’ வந்தது! இந்த நேரத்தில் இருவருமே ஒரு இரண்டாம் மாடியிலுள்ள ஒரு சின்ன ‘பிளாற்றுக்கு' மாறியிருந்தார்கள்! ஒரு நாள், வேலை முடிந்து வரும்போது, ஒரு பிறீசர் ஒன்று வீதிக்கரையோரத்தில் கேட்பாரற்றுக் குந்திக்கொண்டிருந்தது! முந்திய டிவி அனுபவம் இருந்த படியால், அதை ஒரு மாதிரிக் காவிக்கொண்டு வந்தால், ஒவ்வொரு கிழமையும் மீன் கடைக்குப் போகத் தேவையில்லை என்ற வழியில் சிந்தித்தான்! ஏனெனில், அவர்களுக்குப் பிடித்த ‘ டொக்ரர் பிஷ்'  (ஒட்டி அல்லது ஓரா) தனிய ‘பில்லிங்ஸ் கேற்’ சந்தையில மட்டும் தான் விலைப்படும்! ஆரோ ஒரு வெள்ளைக்காரன் ஒட்டி மீன் முள்ளுக்குத்தின கடுப்பில அந்தப் பேரை வைச்சிருக்க வேணும்! அந்த ‘பிரீசரை’ ஒரு மாதிரி இழுத்துக்கொண்டு வந்து, ஒரு ‘கிறேன்' பிடிச்சு ஜன்னலுக்குள்ளால எத்தி, வீட்டை கொண்டு வந்தாச்சு! , இரண்டு பேரும் ஒரு மாதிரி, ஆறுதல் மூச்சு விட்ட நேரம்! நெடுக மீன் சாப்பிடற படியால், இரண்டு பேருக்குமே ‘ஊரில' இருக்கிற மாதிரி ஒரு உணர்வு! வாற போற ஆக்களும், தங்கட பங்குக்குக் 'கன காசு வந்திருக்குமே' எண்டு சொல்ல இரண்டு பேருக்கும் நல்ல புழுகம்! எல்லாமே, நல்லாய்ப் போய்க்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள், அவர்களது மின் கட்டண பில் வந்தது! வழமையா வாறதிலும் பார்க்க மூண்டு மடங்கு! தெரிஞ்ச ஆங்கிலத்தை வைச்சு, மின் சப்பிளை பண்ணுற கொம்பனியோட ஒரே சண்டை! அவனுக்கும் ஒண்டும் வடிவா விளங்கையில்லைப் போல! சரி, வாற முறை பார்க்கலாம் என்று சொல்லிப்போட்டு விட்டிட்டான்! இரண்டாவது ‘பில்' முந்தினதை விட இரண்டு மடங்காக இருந்தது! இந்த முறை ‘சண்டை' உச்சத்தில போக, மின் சப்பிளை பண்ணிற கொம்பனி ஆக்கள் நேரிலேயே வந்திட்டாங்கள்! இங்கை ஏதாவது 'புதிசா' வாங்கினீங்களோ எண்டு அவன் கேட்க, இவர்கள் இரண்டு பேரும் தலைகளை ஒரே நேரத்தில், இடமிருந்து வலமாக ஆட்டத் தற்செயலாக அவர்களது கண்கள் 'பிறீசரைப் பார்த்ததும், அவர்கள் கண்களில் அலாதியான ஒரு மலர்ச்சி ஏற்பட்டது! 'யூரேக்கா' ! பிறகென்ன, இரண்டு பெரும் பிறீ சருக்குப் பிரியாவிடை கொடுக்க வேண்டி வந்திட்டுது!

 


ஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை !

posted Apr 26, 2014, 6:21 PM by வாடா மல்லிகை   [ updated Apr 28, 2014, 9:15 PM ]


அன்றைய காலைப் பொழுதின் விடியலிலேயே , பாலைவனமொன்றின் சகல குணாதிசயங்களும் கலந்திருந்தன. கண்களைத் திறந்து பார்க்கக் கூட இயலாத அளவுக்கு, அதன் பிரகாசம் இருந்தது. நீண்ட ஒரு கருநிற மலைப்பாம்பொன்றின் வளைவுகளுடன், அந்த நெடுஞ்சாலை நீண்டு கிடந்தது. முதல் நாள் இரவின் ‘கடுங்குளிர்', மெல்லிய நீர்ப்படலமொன்றை, அந்த வீதியின் மீது தடவியிருந்தது. வரப்போகும் ‘வெயிலின்' கடுமையுணர்ந்த கங்காருக்கள், வீதியின் இரு பக்கங்களிலும் பரந்திருந்த, மஞ்சள் நிறமான கோரைப்புற்களின் மறைவுகளிலிருந்து, வீதியில் படிந்திருந்த நீரைத் தங்கள் நாக்குகளினால், மெல்ல மெல்ல நக்கி எடுப்பதற்காக வந்து கொண்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால், அன்றைய பொழுது தாகத்துடனேயே கழிந்து விடக்கூடும். முந்திய இரவுகளில், அந்த நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, வாகனங்களினால் கொல்லப்பட்டு வீதியோரங்களில் கிடந்த தங்கள் உறவுகளுக்காக, ஒரு நிமிட அஞ்சலி செலுத்தவும் நேரமில்லாத ‘அவசரம்' அவற்றுக்கு இருந்தது! அந்த இறந்து போன, கங்காருகளின் ‘கருப்பைப் பைகளில்’ சில ‘குட்டிகள்' இன்னும் குற்றுயிருடன் இருக்கவும் கூடும்!   

 

அந்தப் பாதையில் தான் ‘மாயா' (Maya) தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தாள். ‘கார்' என்ற வகையினுள் அதனை ‘அடக்கி விட' முடியாது. இப்பகுதியில் 'கார்' என்று அழைக்கப்படுவது நான்கு சில்லுகளும், ஆகக்குறைந்தது இரண்டு கதவுகளையுமாவது கொண்ட, வீதியில் ஓடக்கூடிய ஒரு 'வாகனம்' என்பது தான் அதிகமாகப் பொருந்தும் .பொதுவாக ஒரு தேசத்தின் வீதிக் கட்டுப்பாடுகளையும், சட்டங்களையும் நடை முறைப்படுத்துபவர்கள் போக விரும்பாத பகுதி அது. வெளியே தெரியும் ஒய்யாரக் கொண்டைகளையும், தாழம்பூ வாசனைகளையும் தாண்டி, உள்ளே இருக்கின்ற ஈர்களையும், பேன்களையும் பற்றி எவரும் கவைலப்படுவதில்லை. அதனை ஆங்கிலத்தில் ‘காம்ப்' என்னும் நவீன வார்த்தைகளுக்குள் அடக்கி விட்டு, வாரா வாரம் அவர்களுக்கான ‘ கொடுப்பனவைக்' கொடுத்துவிடுவதுடன், தனது ‘கடமை' முடிந்து விடுவதாகத் தான் சராசரி, அவுஸ்திரேலியக் குடிமகன் நினைத்துக் கொள்வதுண்டு. தற்செயலாகத் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, அந்தப் பகுதிக்குள் போக நேரிட்டால், கறள் கட்டிய தகரக்கூரைகளும், உடைந்து போன கண்ணாடிகளைக் கொண்ட ‘ஜன்னல்களும்', வீதியெங்கும் சிதறிக்கிடக்கும் உடைந்து போன, பியர்ப் போத்தல்களும், மூக்குச் சிந்திய படியே விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களும், கட்டாக்காலி நாய்களுடன் கட்டிப்பிடித்தபடி படுத்திருக்கும் முதியவர்களும் அவர்களது கண்களையும், மனச்சாட்சியையும் உறுத்துவதுண்டு. எனினும், எப்படி முயன்றாலும் இவர்களை மாற்றமுடியாது என்று தங்கள் மனச்சாட்சிகளை, அவர்களே சாந்தப்படுத்தி விடுவதுண்டு!

 

மாயா தனது காரைப் பிரதான வீதியிலிருந்து, ‘உலுறு' நோக்கிச் செல்லும், சிறு செம்மண் பாதையொன்றில் செலுத்திக்கொண்டிருந்தாள். வெயில் வருவதற்கு முன்பு, அவள் ‘உலுறுவை' அடைந்து விடவேண்டும் என்பது தான் அவளது திட்டமாக இருந்தது. மத்திய வயதில் பயணித்துக் கொண்டிருக்கும் மாயா, இப்போதெல்லாம் ‘உலுறுவுக்கு' அடிக்கடி வர விரும்புகின்றாள். ‘உலுறு' என்பது வேறு ஒன்றுமல்ல. அவுஸ்திரேலியாவின் நடுவே பரந்து கிடக்கும் சிவந்த மண்ணின் பரப்பில், விரிந்து கிடக்கும் ஒரு பாரிய ‘பாறைத்தொடர்' தான்.

 

உலகத்திலேயே மிகவும் பெரிய ‘தனிக்கல்' இதுவென்று சொல்லப்படுகின்றது. வெளியே பல தலைகளைக் கொண்ட ‘ஒரு அரக்கன்' படுத்திருப்பது போலத் தோன்றினாலும், நிலத்தின் கீழேயே, இதன் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதி, தனிக்கல்லாகப் புதைந்து போய்க் கிடக்கின்றது என்று கூறுகிறார்கள். இதற்கு ‘வயிற் பெல்லாஸ்' (White Fellows) வைத்த பெயர் ‘ அயர்ஸ் றொக்' (Ayers Rock) எனினும், மாயாவுக்கு அந்தப் பெயரால், அதை அழைக்க ஏனோ விருப்பமில்லை. அவளைப் பொறுத்தவரையில், அந்த ‘கற்குன்றைப்' பற்றி ஏராளமான கதைகள் இருக்கின்றன. அவளது மூதாதைகளின் ‘கனவுக் காலங்களில்' (Dream Times), இதைப்பற்றிப் பலவிதமான ‘கர்ண பரம்பரைக் கதைகள்' உள்ளன. அநேகமானவை, மலைப்பாம்புக்கும், நச்சுப்பாம்புக்கும் நடந்த போராட்டத்தை நடுநிலைப் படுத்த, மற்றையவை அரணை, ஓணான், தீக்கோழி, கங்காரு, முதலை போன்றவற்றை முன்னிலைப்படுத்தி நிற்கின்றன.  எது எப்படி இருந்தாலும், இந்த கற் குன்றுக்கு' அண்மையில் வரும்போது, தனது மூதாதையரின் ‘ஆவிகள்' வந்து தன்னை, அரவணைப்பதாகவும், ஆறுதல் சொல்வதாகவும் அவள் உணர்கிறாள்.

 

அண்மையில் நடந்த ஒரு சம்பவமொன்று, அவளை இந்த இடத்திற்கு, இப்போதெல்லாம் அடிக்கடி அழைத்து வருகின்றது !

 

அவளது தாயாரான 'பின்டிக்கும்' (Bindi), யாரோ ஒரு ‘வயிற் பெல்லா' வுக்குமிடையில் ஏதோ ஒரு வகையில், ஒரு விதமான ‘தொடர்பு' ஏற்பட்டு விட்டது. அதற்குக் காதல் என்று பெயர் வைத்து அந்தப் புனிதமான வார்த்தையை மாசு படுத்த மாயா விரும்பவில்லை. பின்னர் அந்த ‘வயிற் பெல்லா' தனது பயணத்தைத் தொடர்ந்து சென்று விட,  அவர்களின் தொடர்பின் விளைவாக மாயாவின் அம்மா ‘பின்டி' (Bindi)  கர்ப்பமானாள். நல்ல வேளையாக, அவளுக்குப் பிறந்த குழந்தை, எந்த விதமான ‘வயிற் பெல்லா' வின் வெளிப்படையாகத் தெரியக்கூடிய எந்த அடையாளங்களும், குணாதிசயங்களும் கொண்டு பிறக்கவில்லை. அதனால் ‘மாயாவை' அவளது ‘இனத்தவர்' ஒதுக்கியோ, விலக்கியோ வைக்கவில்லை. அதனால் அவளும், இன்னுமொரு 'பூர்வீகக் குடி மகளாக' அவளது தாய் வழிப் பாட்டியால், அந்தக் 'காம்புக்குள்ளேயே' வளர்க்க்கப்பட்டாள். ஒருவேளை மாயாவை, அவளது அம்மம்மா ஒருவருக்கும் தெரியாமல் மறைத்தும் வைத்திருந்திருக்கலாம். ஆனால் மாயாவின் அம்மாவை, அவளது இனத்தவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படியான கலப்புத் திருமணங்களில் ஈடுபட்டவர்களை, பூர்வீகக் குடிகள் என்றைக்குமே, தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வதில்லை. ஈவிரக்கம் இல்லாது, பரந்த வெளிகளில் அவர்கள் துரத்திவிடப்படுவார்கள். இல்லாவிட்டால், உறவினர்களால் தயவு தாட்சண்யம் இன்றிக் கொல்லப்படுவார்கள். இப்படியான உறவுகளின் விளைவாகப் பிறக்கும் குழந்தைகள், எப்போதும் அவர்களது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதனால் பின்டி  ‘களவெடுக்கப்பட்ட தலைமுறையினரில் ' (Stolen Generation) ஒருவராக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதை விடவும், இவ்வாறு துரத்தப்பட்டவர்கள், மாட்டுமந்தைகளை வளர்க்கும் ' மிகப்பெரிய நிலப்பரப்பிலான மந்தை பராமரிப்பு நிலையங்கள்"  (Cattle Stations) போன்றவற்றைச் சுற்றி அலைவது வழக்கமாகும். இத்தகைய நிலையங்கள், பெரும்பாலும் வெள்ளையர்களாலேயே நடத்தப்பட்டதுடன், இவ்வாறு 'சமூகத்தால் விலக்கப்பட்ட பெண்களுக்கு,  நல்ல 'வரவேற்பும்' இருந்தது. ஏற்கெனவே மனமுடைந்து போயிருந்த பின்டிக்கு, மரத்தால் விழுந்தவளை மாடு  ஏறி மிதிப்பது போன்றதொரு வாழ்வில் வெறுப்பே ஏற்பட்டது. அத்துடன், தனது மகளை' ஒருநாளாவது திரும்பவும் பார்க்கவேண்டும் என்ற ஒரு தாயின் சாதாரண 'எதிர்பார்ப்பும்' அவளுக்குத் தான் உயிரோடு வாழவேண்டும் எனும் உந்துதலை அளித்தது.

 

இதனால் மரணத்தைப் பின் தள்ள விரும்பிய அவள், அங்கிருந்து மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு கிறீஸ்தவ ‘திருச்சபைகளால் நடத்தப்படும் சீர்திருத்த விடுதியொன்றுக்குத் தானாகவே போக முன்வந்தாள். இப்படியான விடுதிகளுக்கு, பூர்வீகக் குடிகளிலிருந்து 'இளம் வயதினரும், குழந்தைகளும், அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பிடித்துச் செல்லப்படுவது வழக்கமாக இருந்தது. இப்படியானவர்களையே 'களவெடுக்கப்பட்ட தலைமுறை' (Stolen Generation) ஐச் சேர்ந்தவர்கள் என்று அழைப்பார்கள். அவள் அவ்வாறு கொண்டுபோகப்பட்டது கூட, அவளது பாட்டியார் சொல்லித் தான் மாயாவுக்கே தெரியும். தனது அம்மாவைப் பார்க்கவேண்டும் என்ற ‘தாபம்' மாயாவின் மனதில் அடிக்கடி தோன்றி மறைந்தாலும், அதனை வெளியே எவரிடமும் சொல்லும் ‘துணிவு' அவளுக்கு ஏற்படவே இல்லை!



பரந்து கிடந்த அந்தச் சிவப்புக் கல் மலைக்குவியலின், வாய்ப்பக்கத்தை நோக்கித் தனது காரைச் செலுத்திய ‘ மாயா', அங்கு தனியாக நின்றிருந்த ஒரு ‘யூகலிப்டஸ்' மரத்தின் அருகே நிறுத்தினாள்! அந்த மரமும், அவளைப்போலவே பல நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பது போலவே அவளுக்குத் தெரிந்தது. ‘உலுறுவின்' மேலே சென்று, அதிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக, உல்லாசப்பயணிகள் சிலர் வரத் தொடங்கியிருந்தனர். ‘உலுறுவை' அவள் பார்க்கும் விதத்துக்கும், மற்றவர்கள் பார்க்கும் விதத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகத் தான் அவள் எண்ணினாள். எல்லாரும் ‘கயிலாயம்' போவதனால், நானும் போக வேண்டும் என்பது போலத் தான் அவர்களது வருகை இருக்கும்!

 

ஆனால், மாயா, அந்த மலையின் வெளி அழகை ரசிக்கவில்லை. அதன் பிரமாண்டத்தைத் தன்னுள் உள்வாங்கிக் கொள்கின்றாள். அகல விரிந்த இரவு வானத்தின் நட்சத்திரச் சிதறல்களிலும்,  அடர்ந்த காடுகளின் நடுவில் காணப்படும் ‘மயான அமைதியிலும் ' அவள் இதே ‘உணர்வை' அடைவதுண்டு. ஒரு வேளை, தனது மூதாதையர்களின் ‘ கனவுக்காலங்கள்' என்பது இதுவாகத் தான் இருக்கவேண்டும் என அவள் பலமுறை சிந்தித்ததும் உண்டு. எல்லோருக்கும் எதுவுமேயில்லாத பாலை நிலமாகத் தெரிவது, அவளுக்கு மட்டும் எல்லாமே நிறைந்த ஒரு ‘வளமான பூமியாகத்' தோன்றுகின்றது.தனது உடலும், பிரபஞ்சமும் ஒன்றோடு ஒன்று ‘பின்னிப் பிணைந்தது’  போன்ற ஒரு விதமான ‘உணர்வு' அவளுக்கு இங்கு வரும்போது ஏற்படும்.

 

நினைவுகளின் நகர்வுகளுக்குக் கடிவாளம் போட்டவள், உரத்த குரலில்’பின்டி' என்று கத்தினாள். அப்போது அந்த மலைப்பிளவும். உரத்த குரலில், திருப்பிக் கத்தியது. பின்னர் தனது கணவனின் பெயரைச் சொல்லிக் ‘குலன்' என்று கத்தவும், மலைப்பிளவும் உரத்த குரலில் மீண்டும் திரும்பக் கத்தியது.    

 

இந்த இடத்தில், மாயாவின் கணவன் ‘குலனைப்' பற்றிக் கொஞ்சம் சொல்வது பொருத்தமென நினைக்கிறேன்! அவுஸ்திரேலியாவின் கரையோரம் தவிர்ந்து, மத்திய பகுதிகளில் பொதுவாக 'பூர்வீகக் குடிகளே' அதிகமாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் அதிகம் இல்லை. அதனால், குலனும், ஒரு மந்தை நிலையத்தில் ‘மாடுகளை மேய்ப்பவனாக' வேலை செய்தான். பகல் முழுவதும் குதிரைகள் மீதிருந்தபடி, மாடுகளை வழிநடத்துவது தான் அவனது வேலையாக இருந்தது. 'டிங்கோ' (Dingo) என அழைக்கப்படும் காட்டு நாய்களிடமிருந்தும், மற்றும் திருடர்களிடமிருந்தும் ‘மந்தைகளைக் கவனமாகப்' பாது காப்பது தான் அவனது தொழிலாக இருந்தது. அத்துடன், பூர்வீகக் குடிகளுக்கே தனித்துவமான ‘ தடம் பார்த்துத் தேடுதல்' (Tracking Skills) ஐ உபயோகித்துத் தப்பியோடி மறைந்து வாழும், சிறைக்கைதிகள், தேடப்படும் குற்றவாளிகள், போன்றவர்களைத் தேடிப்பிடிக்க, போலீசார் அவனது உதவியை நாடுவதுமுண்டு.


அப்போதெல்லாம், பூர்வீகக் குடிகளுக்கு, மதுசாரம் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. ஆதலால், அவர்கள் ‘யாராவது ஒரு வெள்ளைக்காரனின் காலில் விழுந்து தான் ‘அதிக பணத்தைக் கொடுத்து' அவர்கள் மூலம் 'மதுபானங்களை' வாங்கியாக வேண்டும்! இப்படி ஒரு நாள், மதுவருந்தி விட்டு நடந்து வரும்போது, ‘கைது' செய்யப்பட்ட குலனுக்கு, இரண்டு வாரங்கள் தனிமைச் சிறைத்தண்டனை கிடைத்தது.  ஒரு திறந்த வெளியில், வாழ்நாள் முழுவதையும் செலவழித்த ஒருவன், தனிமைச் சிறையில் போடப்பட்டால், இரண்டு நாட்கள் கூட அவர்களில் சிலரால் உயிர் வாழ முடியாது. அவர்களது ‘குடும்பப்  பிணைப்புகள்' அவ்வளவு தூரம் இறுக்கமானவை! அத்துடன் , இயற்கையுடனான அவர்களது தொடுகையும் மிகவும் நெருக்கமானது. நீரிலிருந்து வெளியே, தூக்கிப்போடப்பட்ட ஒரு மீனின் நிலையில் தான், இவர்கள் சிறைகளில் இருப்பார்கள். சிறையில் போடப்பட்ட இரண்டாவது நாளே குலன், சிறைக்கூட்டினுள் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டான்.



இப்போதெல்லாம், பூர்வீகக் குடிகளுக்கெனச் சிறைச்சாலைக்குள்ளேயே ‘ தனியான திறந்த சிறைகள்' அமைக்கப்பட்டுள்ளன!

 

அவளுக்கும், குலனுக்கும் இடையேயான காதலின் காரணமாகவே ‘மாயா' இப்போதெல்லாம் இங்கு வருகிறாள். அவளுக்குள்ளே, வெளியே சொல்ல இயலாத ஒரு ‘ரகசியம்' ஒன்று புதைந்து கிடக்கின்றது. அவளது, அம்மம்மாவுக்குக் கூடத் தெரியாத ‘இரகசியமாக' அவள் அதைத் தனக்குள் மிகவும் ஆழமாகப் புதைத்து வைத்திருக்கிறாள். குலனின் தற்கொலைக்குப் பின்னர் மாயா, அவளது அம்மாவுடன் வசிக்கவில்லை. இன்னுமொரு ‘காம்பில்' உள்ள சில நண்பிகளுடன் சேர்ந்து வசித்து வந்தாள். அதற்கான முக்கிய தேவையும் அவளுக்கிருந்தது. குலன் இறந்த சில வாரங்களிலேயே, அவனது  குழந்தை தனது வயிற்றில் வளர்வது மாயாவுக்குத் தெரியவந்தது.

 

பிறக்கப் போகும் குழந்தையைப்பற்றி, எல்லா அன்னையர்களும் சுமக்கின்ற கனவுகளையே மாயாவும் சுமந்தாள். அந்தக்குழந்தை அவளுக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்பட்டது போலவும் அவள் உணர்ந்தாள்.

 

வயிற்றில் நோவு, ஏற்பட்ட போது, தனியாகவே அந்த ‘பில்லா பொங்’ (Billabong) ஐ நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள். மாலை நேரமாகையால், உயர்ந்த மரக்கிளைகளைலிருந்து, கூக்கபரா (Kookaburra) பறவைகளின் ஒலி, அவளைப்பார்த்து, யாரோ எக்காளமிட்டுச் சிரிப்பது போல கேட்டது.’தென்றல்' அவர்களது வயிற்றைத் தடவிக் ‘கிச்சு கிச்சு' மூட்டுவதனால் தான், அவை அவ்வாறு சிரிப்பதாக அம்மம்மா இளமையில் கூறுவதுண்டு.

 

எவரது உதவியுமில்லாமலே, ஒரு அழகிய ஆண் குழந்தையொன்றை, அந்த சிறு குளக்கரையின் , உயர்ந்து வளர்ந்த புற்களின் நடுவில் பெற்றெடுத்தாள்.

ஓரளவுக்கு, அயர்ச்சி தெளிந்து மாயா விழித்துகொண்டபோது அந்தக்குழந்தையின் ‘முனகல் சத்தம்' அவளது காதில் கேட்டது. மெதுவாகக் கண்விழித்துக் குழந்தையைப் பார்த்தவளுக்குத் தனது கண்களையே நம்ப முடியவில்லை.  

 

மூக்கையும், தலைமயிரையும் தவிர, அந்தக் குழந்தையின் ‘தோற்றம்' முழுவதுமே, ஒரு ‘வையிட் பெல்லா’ வாகவேயிருந்தது! அடுத்ததாக அவள் செய்த காரியமே, அவளை இவ்வளவு நாளும் வாட்டிக்கொண்டிருக்கின்றது.

 

அவளது மூதாதையர் செய்து வந்தது போலவே, அந்தக்குழந்தையை, ஒரு நெருப்பெறும்புகள் வாழும் ‘மண் குவியல்' ஒன்றினுள் வைத்து விட்டு, தனது அம்மம்மா வாழும் ;காம்பை' நோக்கி நடந்து சென்று விட்டாள்.

குழந்தையின் அவலம், சிறிது நேரம் வரை அவளது காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தது. கண்களைத் துடைத்தபடியே. அந்தக் குழந்தைக்கு ‘மானசீகமாக' ‘ஜோர்ஜ்' என்ற பெயரையும் வைத்து விட்டிருந்தாள். அந்தக் குழந்தையின், கன்னத்தில் ஒரு ‘பூமராங் ' (boomerang) போன்ற கறுத்த நிற ‘மச்சம்' ஒன்றிருந்தது அவளுக்கு இன்னமும், தெளிவாக நினைவிருக்கின்றது. ‘ஜோர்ஜ்' ஐப் பற்றி, நினைத்துப் பார்க்காத நாட்களே இல்லையெனக் கூறலாம்!

 

இப்போதெல்லாம், அவள் ‘உலுறு'வுக்கு அடிக்கடி வருவதற்கான காரணமே, சில மாதங்களுக்கு முன்பு அங்கு வரும்போது கண்ட, சுருட்டைக் கறுத்தத் தலைமயிருடனும், அகன்ற மூக்குடனும், காணும் அந்த 'வெள்ளை' இளைஞனின் உருவம் தான். அவளும் அடிக்கடி வருவதனால், அவனும் அடிக்கடி அங்கு வருகிறான் என்பதையும் புரிந்து கொண்டாள். ஒரு வேளை, அந்தப்பகுதியிலேயே வசிப்பவனாக இருக்க வேண்டும். அவனது ஒரு கன்னத்திலும்,

'பூமராங் '  போன்ற ஒரு மெல்லிய கருமை நிறம் கலந்த 'மச்சம்'..!

 

அவள் வழக்கம் போல, மலை வாயை நோக்கித் தாயின் பெயரை, உரக்கக் கூறிக் கத்தியபோது, அவனும் உரக்கக் கூவுவது கேட்டது!

 

அதற்கு ‘மலை வாய்' உரத்த குரலில் அளித்த பதில்…..’மாயா…..”  !

 

 





காமாட்சி

posted May 26, 2013, 9:44 PM by வாடா மல்லிகை   [ updated May 26, 2013, 9:44 PM ]



 'லங்கா சாறி' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு நீலப்புடவை !. நெத்தியில் சின்னதாக ஒரு திருநீற்றுக் குறி ! தேங்காய் எண்ணெய் தடவி, எவ்வளவுக்குத் தலைமயிரை இழுக்கமுடியுமோ, அவ்வளவுக்கு இழுத்து முடிக்கப்பட்டதால்,பளிச்சென்று தெரியும் நெற்றி ! இவ்வளவு தான், காமாட்சியின் வெளித்தோற்றம்! அவளது முகத்தில், ஒரு சோகம் கலந்த ஏக்கம், எப்போதும் இழையோடிய படியிருக்கும். காமாட்சிக்கு ஒரு பத்துவயது மகள். மகளுக்குப் பெயர் கமலம். இவ்வளவும் தான் அவளது குடும்பம். அவளது கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும்.

 

காலையில் தோட்டக்காரர் வேலைக்குப் போகும் போது, காமாட்சியையும் அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள், வறண்டு, காய்ந்து போன, எரு  வரட்டிகளைத் தடியால் அடித்து நொருக்கித் தூளாக்குவது, மண்வெட்டிகளால் வெட்டப்பட்ட ‘அதர்களுக்கிடையில்' காவோலை, அல்லது பூவரசம் குழை போனறவற்றை நிரப்புவது, சிறு நாற்றுகளுக்கு, இடையில் முளைக்கும்  சிறு களைகளை, அகற்றுவது போன்ற வேலைகள், அவளுக்குக் கொடுக்கப்படும். பின்னர், பாடசாலையிலிருந்து மகள் திரும்பி வரமுன்பு, வீட்டுக்கு அவசரமாக வந்து விடுவாள். விடுமுறைக்காலங்களில், பொழுது போகாமல், வீட்டின் ‘போர்டிக்கோவில்' குந்தியிருந்து. புல்லு வளர்வதை அவதானித்துக் கொண்டிருக்கும் வேளைகளில்,அவள் நடந்து சென்றால், அவளைப் பற்றிய சிந்தனைகள் மனதில் உதிப்பதுண்டு. அவளும் தனக்கேயுரித்தான, ஒரு சிரிப்பை உதிர்த்த வண்ணம் நடந்து கொண்டேயிருப்பாள்! சில வேளைகளில், எப்படி, வாத்தியார்த் தம்பி? என்று ஒரு விடையொன்றை எதிர்பார்க்காத கேள்வியையும் கேட்டுவிட்டுச் செல்வாள். வாத்தியாரின் மகன், என்பதால் தான் அந்த' வாத்தியார் தம்பி' என்ற பெயர் எனக்கு வந்தது என நினைக்கிறேன்!

 

ஒரு சனிக்கிழமை மத்தியானம், தோட்டத்திலிருந்த வந்த காமாட்சி, வாத்தியார்த் தம்பி எனக்கொரு கடிதம், எழுதித்தர ஏலுமே? என்று கேட்டாள்.நானும் சரியெண்டு சொல்ல, தம்பியிட்ட இல்லாத பேப்பரா என்று சொலிச் சிரித்தாள். நானும், ஏனக்கா, உங்கட மகள் எழுதித்தர மாட்டாளா என்று கேட்டு வைக்க, அவளும் எல்லா விசயத்தையும் பிள்ளையளிட்டைச் சொல்ல ஏலாது தானே தம்பி என்ற போது, கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்து கொண்டேன்.கடிதம் பின்வருமாறு தொடங்கியது..

 

உ. சிவமயம்.

 

என்றும் என்மீது பட்சமுள்ள கணவனுக்கு,

 

இங்கு சுகம், உங்கள் சுகத்துக்கும் அந்தக் கலட்டிப்பிள்ளையார் அருள் புரிவானாக!.  

புனிதம் அக்காவின்ர மகள் போனமாதம் பெரிசாகி விட்டாள். பெரிசாக் கொண்டாடப் போகினம் போல கிடக்கு. ஏதாவது வாங்கிக் குடுக்க வேணும். நீங்கள் போன முறை அனுப்பின மணியோடர் கிடைத்தது. அதை மாத்திப் கமலத்துக்குக் கொஞ்சம் உடுப்பும், புத்தகங்களும் வாங்கினனான். பள்ளிக்குடம் போற பிள்ளை தானே. பழைய உடுப்போடை போனா, நமக்குத் தானே, சங்கேனம். நீங்களும், ஊருக்கு வாறதாய்க் காணேல்லை. (இதைச் சொல்லும்போது, தனது மூக்கை உறிஞ்சிக்கொண்டு, முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.) கனகம்மாவின்ர மூத்த மகள், ஆரோடையோ ஓடிப்போட்டாள் எண்டு ஊரில கதை அடி படுகுது. (இதைச் சொல்லிமுடிய, அவளே ’தம்பி, இந்தப் பரிசுகேட்டை  எழுதவேணாம் எண்டு வெட்டச் சொன்னள் .) . கடைசியா மூன்று, நாலு பேப்பர்கள் கிழிக்கப்பட்ட பின்பு, ஒரு மாதிரிக் கடிதம் முடிந்தது. விலாசம், கொழும்பில் களனிப் பக்கமாக இருந்த்து. இந்தக் கடிதம் எழுதல்களில் இருந்து, அவளது வாழ்வைப் பற்றியோ, கணவனைப்பற்றியோ பெரிதாக ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை.

 

இண்டைக்கு, அமாவாசை நுவைப்பு. பந்தத்துக்குப் போகப்போறன். நீயும் வாறதெண்டால், அம்மாட்டைச் சொல்லிப்போட்டு வாவன் என்ற படி, எனது அம்மாவின் தகப்பனார் ஆசை காட்டினார். சரியெண்டு சொல்லிப்போட்டு, பின்னேரம் போல கடலுக்கு வெளிக்கிட்டுப் போய்க் கடலுக்கிள்ளையும் இறங்கியாச்சு. அண்டைக்கெண்டு, கடுக்காய் நண்டுகளும், பெரிய கலவாய் மீனும் சந்திக்க, அப்புவின் முகத்தில வலு சந்தோசம். நாளைக்கு நல்ல கூழ் காச்சுவம், தம்பியையும் கூட்டிக்கொண்டு வா என்ற படி கரையை நோக்கி வந்தோம். அப்போது ஒரு மெல்லிய உருவம், தலையில் தலைப்பாகையைக் கட்டியபடி, பந்தத்தைப் பிடித்த படி, நடந்து கொண்டிருந்தது. என்னவோ, கொஞ்சம் ‘அமைப்பு' வித்தியாசமாக இருக்கவே, அப்புவைத் திரும்பிப் பார்த்தேன். அவரும், புரிந்து கொண்டவராக, அது நம்மட ‘காமாட்சி' என்ற படி, நடந்து கொண்டிருந்தார். அவரது முகத்தில், கவலையின் சுவடுகள் தோன்றி மறைந்தன. ஒரு பெருமூச்சும் வந்து போனதையும் அவதானித்தேன்., இந்த மர்மத்துக்கு, நாளைக்கு விடை காண வேண்டும், என்று மனதில், நினைத்த படி, அவருடன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்!

 

அடுத்தநாள், அப்பு வீட்டை போய்க் கூழ் காய்ச்சி முடியும்வரைக்கும், அப்புவும் காமாட்சியின் கதையைச் சொல்லவில்லை, நானும், சரியான நேரம் வரட்டும் என்று தருணம் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர், அப்புவிடம் மெதுவாக, அப்பு, ஏனப்பு, காமாட்சியின்ரை மனிசன் ஒரு நாளும் ஊருக்கு வாறதில்லை? கொழும்பிலை இருக்கிற ஆக்களெல்லாம் கோவில் திருவிழாக்களுக்கு வந்து போகினம் தானே? என்று கேட்க, அப்புவும்  ஒரு பெருமூச்சொன்றை எறிந்தவாறே, அவருக்குக் கொழும்பிலை வேற குடும்பம் இருக்கு என்று கூறியபடி, வாய்க்குள் கிடந்த மீன்  முள்ளைப் ,பெரிய சத்தத்துடன் காறித் துப்பினார். காமாட்சியின் மாமியாருக்குத் தனது மகன், வேற யாரோ ஒரு சிங்களப் பெண்ணுடன் குடும்பம் நடத்துவது முதலே தெரியுமாம். ஆனால், ஊரிலையிருக்கிற காணியும், வீடும், வேற ஆருக்கோ போறதை  மனுசிக்குப்  பொறுக்க ஏலாமல் போச்சுதாம். அது தான், மனுசி காமாட்சியைப் பிடிச்சு, அந்தப் பாவிக்குக் கட்டி வச்சுப் போட்டுது.  காமாட்சியும் கொழும்பு வரையும் போய், அழுது பாத்திட்டு, இப்ப தனிய வந்து குந்திக்கொண்டுருக்குது. அவனும், எப்பவாவது அஞ்சோ, பத்தோ, அனுப்பிறதெண்டு, காமாட்சி சொல்லுது. ஆனால், எனக்கெண்டால் அதில நம்பிக்கையில்லை. அவன் காசு அனுப்பிறதெண்டால், காமாட்சி , ஏன் தலைப்பாயைக் கட்டிக்கொண்டு, கடலுக்கை நிக்குது என்று சொல்லி முடித்தார்!!

 

அந்தக் கதையைக் கேட்டபிறகு எனக்கு காமாட்சியை நினைக்கப் பெரிய 'பாவமாக' இருந்தது. இப்படி எத்தனை பாவங்களைக் கண்டும் காணாதது மாதிரி நடந்து கொண்டிருக்கிறோம் என 'உள்மனது'  எள்ளி நகையாடினாலும், காமாட்சியின் மகளுக்காவது ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.  எப்பவாவது சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில், பாடம் சொல்லிக் கொடுப்பது, பள்ளிக்கூடப் புத்தகங்கள், கொப்பிகள் வாங்கிக் கொடுப்பது என்ற அளவிலேயே, அந்த உதவிகள் இருந்தன. பண உதவிகள் செய்ய நினைத்த போதும், காமாட்சியின் 'கெளரவம்' அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

 

சில நாட்களில், நானும் புலம் பெயர்ந்து விடக், காமாட்சியும் மெல்ல மெல்ல, எனது நினைவுகளில் இருந்து விலகிப் போய்க் கொண்டிருந்தாள். இரண்டு வருடங்களின் பின்பு, விடுமுறையில் ஊருக்குப் போனபோது, எனது உறவுகளுக்கெனச், சில பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொண்டேன். அப்போது, இரண்டு பேர் நினைவுக்கு வந்தார்கள். முதலாவதாக நினைவுக்கு வந்தவள் காமாட்சி. அடுத்ததாக, நான் வழக்கமாக மீன் வாங்கும், ஒரு நல்ல வயதான முதியவர். அடிக்கடி, இந்தக் குளிர் தன்னை வருத்துவதாக, தனக்குத் தானே சொல்லிக்கொண்டிருப்பார். எனவே காமாட்சிக்கு, ஒரு நல்ல சேலையும், அந்த வயதானவருக்கு ஒரு 'சுவெட்டரும்' வாங்கிக் கொண்டேன்!

 

ஊரில் வழக்கம் போலக், காமாட்சி, வாத்தியார்த் தம்பி, எப்ப வந்தனீங்கள்? என்று விசாரித்தாள். எங்களையெல்லாம், நினைவு வைச்சிருக்கிறீங்கள் தானே என்று கேட்டபடி இருக்க, நானும் வீட்டுக்குள்ளே போய் அந்தச் சேலைப் பாசலை, அவளிடம் கொடுத்தேன். அவள் கண்கள் ஆச்சரியத்தால் விரியத், தம்பி, எங்களுக்கு, ஒருத்தரும் இப்படி வாங்கித் தந்தது கிடையாதப்பு, என்று அழுதாள். அழுது முடிந்த பின்னர்,நான் இதைக்கட்டிக் கொண்டு, தோட்டத்துக்கா போறது என்று ஒரு விதமான விரக்தியுடன் சொல்லிச் சிரித்தாள். 

 

அதன் பின்னர் நான் காமாட்சியை, மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால், அம்மா எழுதிய கடிதமொன்றில், அங்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி எழுதியிருந்தார். காமாட்சியின் மகள் கமலம், பெரியபிள்ளை ஆகிவிட்டதால், அதை ஒரு கொண்டாட்டமாகக் கொண்டாடக் காமாட்சி விரும்பினாளாம். தனக்குக் கிடைக்காமல் போன வாழ்வைத் தனது மகள் மூலம் பார்க்க ஆசைப் பட்டாளாம். அந்த விழாவின் போது.காமாட்சியின் கணவரும் கொழும்பிலிருந்து வந்திருந்தாராம். கமலம், அவருடன் பேசவே இல்லையாம். அப்போது காமாட்சியும், 'அப்பா' வாங்கிக் கொண்டு வந்த சேலையைத் தான் உடுத்திக்கொண்டு வரவேண்டும் என்று கமலத்தைக் கட்டாயப் படுத்தவும், கமலம் மறுத்து விட்டாளாம். அது தான், நம்ம 'பண்பாடு' என்றும் காமாட்சி மகளுக்குச் சொன்னபோதும், கமலம், அந்த 'அப்பா' வாங்கிக் கொண்ட சேலையை உடுக்கப் பிடிவாதமாக மறுத்து விட்டாளாம். தனக்குக் கொண்டாட்டமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று ஒரு மூலையில் குந்திவிட்டாளாம்.

 

அப்ப, என்னத்தைக் கட்டிக் கொண்டு வரப்போறாய்? என்று காமாட்சி கேட்க, வாத்தியார் மாமா, வாங்கிக் கொண்டுவந்த சேலையைத் தான், என்று கூறி, பிடிவாதமாக அதையே கட்டிக் கொண்டாளாம்!

 

கடிதத்தைப் படித்ததும், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 'கமலம்'  நிச்சயமாக, இன்னொரு காமாட்சியாக மாறமாட்டாள் என நினைத்துக் கொண்டேன்!


ட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்.

posted May 26, 2013, 9:28 PM by வாடா மல்லிகை   [ updated May 26, 2013, 9:45 PM ]



விடிகாலையில், காகங்களின் சத்தம் கேட்டு விழித்தெழுந்த சேனாதி, கிணத்தடிக்குப் போய் முகத்தை அலம்பிவிட்டு, வீட்டுவாசலில் தொங்கிய திருநீற்று முட்டிக்குள் கையைவிட்டு எடுத்த திருநீற்றை முகத்தில் பூசியபடி, அப்பனே முருகா என்று உரத்தே சத்தம்போட்டார். அவர் கூப்பிடுவதும், முருகனிடமிருந்து பதில் வராததும் வழமையே எனினும், அவர் முருகனை அழைக்கும் உரத்த குரல், அவரது மனைவியாகிய சரசு என அழைக்கப்படும் சரஸ்வதியை நிச்சயம் நித்திரையிலிருந்து எழுப்பி விடும். அடுப்படிக்குப் போய், நேற்றே,அரைவாசியாய் எரிந்து முடிந்திருந்த ஒரு கங்குமட்டையிலிருந்து ஒரு துண்டுக்கரியை எடுத்துப் பல்லைவிளக்கிக்கொண்டு , பிள்ளையள் எழும்புங்கோவன் விடிஞ்சிட்டுது எண்ட படி, கேத்திலைத் தூக்கி அடுப்பில் வைத்துவிட்டுக் கிணத்தடியை நோக்கிப் போனாள்!

 

சேனாதியும், தனது முத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது மொரிஸ் மைனர் காரை நோக்கிச் சென்றார். அது அவருக்கு ஒரு குழந்தை மாதிரித் தான். அது தான் அவரது வருமானத்தின் பெரும்பகுதியை அவருக்கு ஈட்டித் தந்தது. மெல்ல அதை அன்போடு தடவிக்கொடுத்தவர், பக்கத்தில் நின்ற, தூக்குச் செம்பரத்தை மரத்திலிருந்து, மூன்று பூக்களைப் பிடுங்கி, அந்தக் காருக்குள் இருந்த முருகன், லட்சுமி, பிள்ளையார் ஆகியோருக்கு ஒவ்வொரு பூவாக வைத்தார். அதன் பின்னர், சிறிது திருநீறை எடுத்து, வண்டியைச் செலுத்தும் சக்கரத்தின் நடுவில் உள்ள வட்டத்தில், முருகா என்ற படி பூசினார்.

 

அதனைப் பார்த்துக்கொண்டிருந்த சரசுவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. ஒவ்வொரு நாளும், தனது கணவனின் இந்தச் செயலை, அவள் பார்த்துக் கொண்டிருக்கின்றாள், எவ்வளவு, மகிழ்ச்சியான காலங்கள் அவை என, அவளது மனது தனக்குள் நினைத்துக் கொண்டது. சேனாதி, ஓடிய அந்தக்கார், ஒருநாள் கூட, வேறொரு காருடனோ, வேறு எதனுடனுமோ மோதியது கிடையாது. தனது, இன்னொரு குழந்தையைப் போலத் தான், சேனாதி அந்தக் காரைப் பராமரித்தார். சேனாதிக்கும், மற்றவர்கள் தன்னை, ட்றைவர் சேனாதி என்று அழைக்கும்போது, புறக்டர் சேனாதி என்று அழைப்பது போல மிகவும் பெருமையாகவும் இருக்கும்!

 

அவளது நினைவுகள், கடந்த காலத்துச் சேனாதியை ஒரு கணம் நினைத்துப்பார்க்க, சரசுவின் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

 

சேனாதி, காரின் முன்பக்கத்தைத் திறந்து, எண்ணை, தண்ணி எல்லாம் ஒழுங்காக இருக்கின்றதா என்று சரி பார்த்த பின்னர், கார் முழுவதையும், ஈரத் துணியால் ஒருமுறை துடைக்க, அதுவும் பளபளவென்று, காலைச்சூரியனின் ஒளியில் மினு மினுத்தது.  பின்னர், காருக்குள் கிடந்த முதல் நாள் வீரகேசரிப் பேப்பரை எடுத்துக்கொண்டு சாய்மனைக்கதிரைக்கு வரவும், சரசுவும் முட்டைக் கோப்பியோடு வரவும் சரியாக இருக்கும்.  சுவரில் மாட்டப்படிருந்த ‘பெக்' கில் தொங்கிய சேட்டை எடுத்தவர், அதற்குள்ளிருந்த ‘சுவீப்' டிக்கட்டைக் கவனமாக எடுத்து, வீரகேசரிப் பேப்பரில் உள்ள, சுவீப் முடிவுகளுடன், ஒப்பிட்டுப் பார்த்த பின், ‘அட, மூண்டு நம்பரால இந்த முறை சறுக்கிப் போட்டுது' என்று கோப்பியுடன் நின்ற சரசுவைப் பாத்துச் சப்புக் கொட்டினார். அவர் ‘சுவீப்' டிக்கட் வாங்குவதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம், அவரது மூன்று பொம்பிளைப் பிள்ளைகள். அடுத்தது, அந்தச் சுவீப் டிக்கட்டின் முதலாவது பரிசு, ஒரு பென்ஸ் கார் என்பது. கடைசிக்காரணம், இவர் யாழ்ப்பாணச் சந்தையடியில் இருந்து காரை எடுக்கும் போது, இவரைக் காணும் சுவீப் டிக்கட் விற்பவன், போனாக் கிடையாது, பொழுது பட்டாக்கிட்டாது, என்று உரத்த குரலில் சத்தம் போடத் தொடங்குவதும் தான்!

 

சரி, இண்டைக்கு திங்கட்கிழமை எண்டது மறந்து போச்சுது என்று கூறியவர், கிழமை தெரியிறதுக்கு நான் என்ன கவுன்மேந்து வேலையா பாக்கிறன் என்று தனக்குத் தானே பதிலும் கூறிக்கொண்டார். இப்ப வெளிக்கிட்டாத்தான் 776 வாறதுக்குக் கொஞ்சம் முந்திப்போனால், போடிங்குக்குப் போற பெடியளைப் பிடிக்கலாம். இந்தப் பெடியளை ஏத்திக்கொண்டு போறதால அவருக்குக் கொஞ்சம் ‘லாபம்' அதிகமாக இருக்கும். பெரிய ஆக்களின்ர மடியளில, பெடியளை இருக்கவிடலாம் என்பதால், அதிக இடத்தை அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை. எனவே வருகின்ற முழுக்காசும் எக்ஸ்ட்ரா வருமானம் தான். வழியில, பொன்னர், போயிலைக்கட்டுக்களோட நிண்டதையும், காரை மறித்ததையும் கண்டார். உடனை அவருக்கு, அண்ணை, பின்னால பஸ் வருகுது என்று கூறியபடியே, விடிகாலைப் பயணிகளை ஏத்திக்கொண்டு போக இறுப்பிட்டியிலிருந்து வெளிக்கிட்டார். பொதுவாக, மீன், போயிலை போன்றவற்றை ஏத்துவது சேனாதிக்கு விருப்பமில்லை. சாமிப்படங்கள் இருக்கிறதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும், சேனாதியிடம் சில தொழில் தர்மங்களும் இருந்ததை மறுக்க முடியாது. பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களை, எந்த நேரத்திலும், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவதற்குச் சேனாதி ஒரு நாளும் காசு வாங்குவதில்லை. போகும் வழியில்,  வாற ஒவ்வொரு கோவிலடியிலும் , கண்ணைமூடி, நெத்தியையும் நெஞ்சையும் ஒருக்காத் தொட்டுக் கொள்ளவும் சேனாதி மறப்பதில்லை.

 

சேனாதியர் கார் ஓட்டுற விதமே அருமை. பாக்க வலு சந்தோசமாயிருக்கும். அந்தக் கோழி முட்டை மாதிரியிருக்கிற கியரின்ர நுனியைத் தொட்டுப்பாக்கச் சில வேளைகளில் ஆசை வருவதுண்டு. தம்பியென்ன, கடலுக்குள்ள எங்களைக் கவிழ்க்கிற பிளானோ, எண்ட அவரது கடுமையான தொனி, அந்த ஆசையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும். அதே போலத்தான், அவர் காரின்ர சிக்னலைப் போடும்போதும், காரின்ர கதவுக்குப் பக்கமாய், ‘பொப்' என்ற சத்தத்துடன், ஒரு சின்னத் தடி மாதிரி ஒண்டு, மேல உயர்ந்து பின்னர் கீழே போகும். அது வரப்போகும் நேரம் பார்த்துத் திடீரென அதை அமத்தும்  போது மட்டும் சேனாதிக்குப் பொல்லாத கோபம் வரும். எங்கட ரோட்டிலை, பஸ் ஓடினாலும், சேனாதியின்ர காருக்கு ஒரு தனி மவுசு இருந்தது. ஒண்டு, காரில, கெதியாப் போயிரலாம். மற்றது, காரில எப்பவும் நல்ல ‘லோட்' இருக்கிறபடியால, இந்தத் துள்ளலுகள் கொஞ்சம் குறைவா இருக்கும். அதோட கொஞ்சம் ஊர்ப் புதினங்களும், பயணிகளால், பகிரப்படுவதுண்டு. அப்போதெல்லாம், அவர், இவருடன் ஓடிப்போனார் என்ற கதைகள் அவ்வளவு விளங்காத காலம்.

‘தம்பி மார், பண்ணைப்பாலம் வருகுது. மணியண்ணையின்ர காரிலை, கையைக்காட்டிப்போட்டுப் போறார். போலீஸ்காரன் நிக்கிறான் போல கிடக்கு. எல்லாரும் ஒருக்காக் குனியுங்கோப்பு, என்று கூறினார். போலீஸ்காரனும், வெளியவந்து பாக்கிறதில்லை. தனது மேசையிலிருந்த படியே, கார்க் கண்ணாடிக்குள்ளால பாத்து ஆக்களை எண்ணுறதோட சரியென்ட படியால, சேனாதியும் ஒவ்வொரும் முறையும் தப்பிக் கொள்வார்.

 

யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பி வாற நேரம், அனேகமாக, கடைக்காரர் தங்கட கடைக்குச் சந்தையில சாமான் வாங்கி ஏத்துவினம். வாழைக்குலைகள், மரக்கறிகள்,உடுப்பு வகைகள் எண்டு நிறையச் சாமான் ஊருக்குப் போகும். அதோட, ஏதாவது கோவில் திருவிழா, கலியாணவீடு, செத்தவீடு எண்டால், சேனாதியின் காருக்கு நிரம்ப வேலையிருக்கும். பத்துமணிக்குப் பிறகு, பட பஸ், போனப்பிறகு, சனம் எவ்வளவு காசெண்டாலும் குடுத்து, ஊருக்குப் போக ஆயத்தமாக இருக்கும். அதோட, கொழும்புப் பயணகாரர் வாறபோதும், அவர்கள் சேனாதியை விரும்பி அழைப்பதுண்டு. கிழமையில, ஏழுநாளும் சேனாதிக்கு வேலையிருக்கும்.

 

ஒரு நாள் இரவு, ஒரு ஆறு  பெடியளவில, சேனாதியிட்ட வந்து, அண்ணை, உங்கட கார், எங்களுக்கு அவசரமாத் தேவைப்படுகுது, அலுவல் முடியத் திருப்பித் தந்திடுவம்  எண்டு கேட்டனர்.. அவர்கள் எல்லோருடைய கைகளிலும்,  துப்பாக்கிகள் இருந்தன. சேனாதிக்குப் பொதுவா, ஊரில எல்லாரையும் தெரியும். ஆனால், வந்த பெடியளைச் சேனாதி ஒரு நாளும் கண்டதுமில்லை. இல்லைத் தம்பிமார், எனக்குக் கார் தான் பிழைப்புக்கு வழி காட்டிறது, இதில்லா விட்டால், வீட்டில எல்லாரும் சிவபட்டினி கிடக்க வேண்டியது தான் என்று கூறவும்,.வந்தவர்கள், சேனாதியின் விளக்கத்தைக் கேட்பவர்களாக இல்லை.

அண்ணை, திறப்பைத் தாறீங்களோ அல்லது, வேற விதமா நாங்கள் ‘ஸ்டார்ட்' பண்ணுறதோ? எனக் கேட்கச், சரசுவும் பிள்ளையளும் அழத்தொடங்கி விட்டினம். சேனாதியும், மிகவும் தயக்கத்துடன் காரின் திறப்பைக் கொடுக்கவும், அவர்கள் காரை எடுத்துக் கொண்டு எல்லோரும் அதில் ஏறிக்கொண்டு போனதைப் பார்த்துக்கொண்டு, வாயடைத்துப் போன சேனாதி, அவர்கள் போன பின்பு தான் , தம்பியள், கார் கவனமப்பு என்ற வார்த்தைகளைத் துப்பினார்.

 

அதன் பின்பு, ஒரு மாதத்தின் பின்பு, அவரது கார் கோயிலடியில் நிற்பதாக, ஆரோ சொல்லக்கேட்டுப் போய்ப் பார்த்தார். அவரது காரை, அவராலேயே அடையாளம் காண முடியவில்லை. அதன் சில்லுகளும், காத்துத் திறக்கப்பட்டு, வெறுமையாகக் கிடந்தன. அந்தக்காரின் நிலையைப் பார்த்ததும், சேனாதியின் மனம் முற்றாக உடைத்து போய் விட்டது. அதை, ஒரு மாதிரிக்கட்டியிழுத்து, வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். அதன் ‘என்ஜின்' செத்துப்போயிருந்தது. அவரது மனமும் தான்.

 

இப்போது, கார் ஓடாமல் விட்டு ஐந்து வருடங்கள்  உருண்டோடி விட்டன

ஆனாலும், காலையில் எழுந்து, அதற்குப் பூவும், பொட்டும் வைப்பதை, அவர் இன்னும் நிறுத்தவேயில்லை.. ஒரு வேளை, அந்தக் காரின் ‘ஆன்மா' அவருக்குத் தெரிகின்றதோ, என்னவோ!

ஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்தநாளும்

posted May 26, 2013, 9:24 PM by வாடா மல்லிகை   [ updated May 26, 2013, 9:48 PM ]



வேலையால் வந்து தபால் பெட்டியைத் திறந்து பார்த்தவனுக்கு, இன்னும் இரண்டு   நாட்களில் அவனது பிறந்த நாள் வருகின்றது என்பது நினைவுக்கு வந்தது.. நீலத்திலும், சிவப்பிலும், கடித உறையில் போடப்பட்டிருந்த வரிக்கோடுகள் அது ஒரு வெளிநாட்டுக் கடிதம் என்பதைத் தெளிவாகக் காட்டின. வீட்டில் உள்ளவர்களுக்கும், சொந்தங்களுக்கும், அவனது பிறந்தநாள், தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்ட நிலையில், உலகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு ஜீவன் மட்டும் இன்றும் அவனது பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பது, அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சற்றே மகிழ்ச்சியுடன் கடிதத்தைக் கவனமாகத் திறந்தவன், அதனுள் இருந்த வாழ்த்து மடலை எடுத்துப் பிரிக்கையில், அதன் மீது தனது விரல்களை, மெதுவாக நகர்த்தினான். அப்போது, அவனது கையில் படிந்த வெண்மை நிறமான துணிக்கைகளை எடுத்து முகர்ந்து பார்க்கையில், அவனது நினைவுகள் பல வருடங்கள், பின்னோக்கி நகர்ந்தன!


அது ஒரு சற்றுக் குளிர்மையான காலைப்பொழுது. சகாரா பாலைவனத்திலிருந்து, தெற்கு நோக்கிப் பயணம் செய்த மெல்லிய மணல் துணிக்கைகள் வெண்ணிறத் துகள்களாகக் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை, என அந்த நாட்டு மக்களால் நம்பப்படுவதால், இதனை அவர்கள் ஒரு பாதிப்பாகக் கருதுவதில்லை. இது வரும் பருவ காலத்தைக் ‘ஹமட்டான்' என அழைத்துக் கொள்வதோடு சரி. அன்று சனிக்கிழமையாதலால், சற்று நேரம் மேல் மாடியிலிருந்து வீதியை அவதானித்துக் கொண்டிருந்தான். இரண்டு பேர், எதிர் எதிராக நடந்தபடி, ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு போனார்கள். உனது சுகம் எப்படி, உனது மனைவியின் சுகம் எப்படி, அவளது குழந்தைகளின் சுகம் எப்படி, உனது இரண்டாவது மனைவியின் சுகம் எப்படி, என்று ஒருவருடன் ஒருவன் கதைத்தபடி, எதிர்த் திசைகளில் சென்று கொண்டிருந்தது, சின்ன வயதில் பௌதீகத்தில் படித்த ‘தொப்ளரின் விளைவை' அவனுக்கு நினைவு படுத்தியது.


தூரத்தில் ஒரு தாய், தனது குழந்தையொன்றை முதுகில் கட்டியவாறு, தனது இரண்டு கைகளிலும், இரண்டு கோழிகளைத் தலைகீழாகத் தூக்கியபடி, அந்த மேட்டுப்பாதையில் வந்து கொண்டிருந்ததை அவதானித்தான். பொதுவாகக் குன்றின் மீது இருந்த அவனது வீட்டை நோக்கி, அவனது நண்பர்கள் தான் வருவதுண்டு. உள்ளூர் வாசிகள் பொதுவாக எட்டிப்பார்ப்பது அபூர்வமாகையால், சற்று ஆச்சரியத்துடன், அந்தத் தாயைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கியபடி அந்தத் தாய், தனது வீட்டுக்கதவைத் திறந்ததும், மனசு பக்கென்றது. நேற்று இரவு வீட்டுக்கு வந்து போன நண்பர்கள், போற வழியில் ஏதாவது இசக்குப் பிசகாக ஏதாவது செய்து தொலைத்து விட்டார்களோ, என்று எண்ணியவன், கீழே ஓடி வந்து, மரியாதைக்காகக் கதவைத் திறந்ததும், அந்தப் பெண், அப்படியே அவனது கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விடவும் சற்றுக் கலவரமடைந்து போனவன்,’மமா' என்று கூறியபடி அவளது கரங்களைப் பிடித்து அந்தப் பெண்ணைத் தூக்கிவிட்டான். அவனது கால்களில், அந்த நாட்டு வழக்கப்படி, பலர் விழுந்தெழும்புவது வழமை தான் எனினும், ஒரு தாய் அவனது காலில் விழுந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு கோழிகளையும், அவனிடம் கையளித்தவள், தனது மகனைக் கல்லூரியிலிருந்து கலைத்து விட்டதைப் பற்றிக் கூறினாள். அவன் படிப்பிப்பது, கணித பாடமென்பதாலும், அநேகமான ஆபிரிக்கர்களுக்குக் கணிதம், சூனியம் என்பதாலும், அவன் பலரை, வகுப்பிலிருந்து அடிக்கடி கலைத்து விடுவதுண்டு. மற்றவர்களைப் போல,' பாம்' மரங்களை வெட்ட விடுவது போன்ற தண்டனைகள், மரங்களுக்கேயன்றி, மாணவர்களுக்கு அல்ல என்று அவன் நம்புவதே, அதற்கான காரணமாகும். அவளது மகன் யாரென்று உடனே நினைவுக்கு வராததால், உள்ளூர் மொழியில், மகனது பெயரைக் கேட்டவன், தாய் பெயரைச் சொன்னதும் யாரென்று அவனுக்குப் புரிந்து விட்டது. அந்த மாணவனது, தகப்பன் ஒரு ‘ பிறிக் லேயர்' எனவும் தனது மகன், நன்றாகப் படிக்கவேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியவள், இந்தத் தடவை மட்டும், அவனை மன்னித்துக் கொள்ளும் படி கேட்டுக்கொண்டாள். அவள் வந்த விதமும், தனது மகனின் படிப்பில் அவள் காட்டிய  அக்கறையும் அவனுக்குக் கொஞ்சம் பிடித்துக்கொண்டது. எனவே, அன்று விடுமுறையானதால், அந்தப் பையனது தகப்பனைப் பார்க்க முடியுமா எனக் கேட்டான். ஆம், என்று கூறியவள், அங்கு தான் அண்மையில் ஒரு ‘சைட்' டில் அவர் வேலை செய்வதாகவும், அவனை அப்போதே, கூட்டிச் செல்வதாகவும் கூறினாள்.


கண்ணுக்கெட்டிய வரையும், எந்த விதக் கட்டிட வேலைகளும் நடப்பது போலத் தெரியவில்லை எனினும், அந்தத் தாயுடன் நடந்து சென்றான். ஓரிடத்தில், களிமண் குழைக்கப் பட்டுக், கட்டப்பட்டிருந்த தடிகளின் மீது, உருண்டைகளாக அவை அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவர்களில் ஒருவன் மட்டும், வெளியில் வந்து அவனது காலடியில் குனியவே, ‘பிறிக் லேயரைப்' பிழையாய் விளங்கிக் கொண்ட தனது முட்டாள் தனத்தை நொந்துகொண்டான்!


மறுநாள், அந்தப் பையன், ‘அஜிபோலா' வீட்டுக்கு வந்தான். அவனைக் குளித்து விட்டு உள்ளே வரும்படியும், கீழேயுள்ள அறையில் தங்கிக் கொள்ளும்படியும் கூறினான். நம்ம ஆக்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை செய்வதால், அவர்களின் ‘செல்வாக்கு' மூலம் தண்ணீர்த் தாங்கி அடிக்கடி நிரப்பப்படும்.

ஒரு வாளியில் மட்டும் தண்ணீரை நிறைத்தவன், கைகளில் உள்ள விரல்களை உபயோகித்து, காது, மூக்கு போன்ற பகுதிகளை, முதலில் கழுவியபின்பு, முழு உடம்பையும் கழுவத் தொடங்கினான். ஒரு ஐந்து நிமிடங்களில்,அவனது  குளிப்பு முடிந்ததைக் கண்டு, சற்று ஆச்சரியப் பட்டுப் போனதுடன், எவ்வளவு தண்ணீரை நாம் வீணாக்குகின்றோம் என்றும் ஒரு கவலையும் அவனுக்கு ஏற்பட்டது. அன்று காலையில்.சிற்றோடையொன்றில், குளித்துக்கொண்டிருந்த குழந்தையொன்றும், தலைக்கு ;ஒமோ;போட்டுக் குளித்துக் கொண்டிருந்ததுவும், அவனது மனதில் ஒரு வலியை ஏற்படுத்தியிருந்தது.  


காலப் போக்கில்,அவனுக்குக் கணிதத்தை, மெல்ல,மெல்லத் தான் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. பைபிளைப் போன்றோ, அல்லது  பூமிசாத்திரத்தைப்  போன்றோ, கணிதத்தைப் பாடமாக்கி எழுத முடியாமல் உள்ளது என்பது தான்,அஜிபோலாவின் பிரச்சனையாகவிருந்தது. அவன், உதாரணமாகச் செய்து காட்டுபவைகளை, கேள்வி,வேறு இலக்கங்களுடன் இருந்தாலும்,அப்படியே,எழுதிவிட்டு வரும், பழக்கம் அவனிடமிருந்தது. அந்த அடிப்படைச் சிந்தனையை, மாற்றியதும், அவனுக்கும் அஜிபோலாவுக்கும் இடையில் பிரச்சனைகள் வரவில்லை, காலப் போக்கில், அவன் தனது வீட்டுக்கே போவது குறைந்து விட்டது. அஜிபோலாவின் சமையல் அவனுக்கும் பிடித்துக்கொண்டது. இறைச்சி கொஞ்சம், மீன் கொஞ்சம், அவித்த முட்டை கொஞ்சம் என்று எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு ‘’டையினமயற் என எம்மவர்களால் அன்புடன் அழைக்கப்படும் மிளக்காய்த் தூளையும் போட்டு, மஞ்சள் நிறப் ‘பாம்' ஒயிலில் கொதிக்க வைத்தால், அதுக்குப் பெயர் ‘கறி' எனப்படும். தேவையான படி, மீனோ அல்லது இறைச்சியோ அல்லது முட்டையோ சாப்பிட்டுக் கொள்ளலாம். கறியும் ஒரு வாரம் வரைக்கும், பழுதடையாமல் இருக்கும்.


ஒரு நாள், அதிகாலையில் கல்லூரிக்குப் போனபோது, எல்லோரும் ஏசுநாதருக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு அடித்த, சுழல் காற்றில், ஒரு கட்டிடத்தின் கூரை தூக்கி எறியப்பட்டகற்குத் தான் நன்றி சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்குப் புரியாமல், பக்கத்திலிருந்தவரை ஏனென்று கேட்கப், பகலில் அந்தச் சுழல்காற்று வந்திருந்தால், மாணவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கக் கூடும். எனவே,அதனை இரவில் வர வைத்தற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லுகின்றார்கள் என்று விளக்கமளித்தார். என்ன மாதிரியெல்லாம் சிந்திக்கின்றார்கள் என அவன் தனக்குள்  நினைத்துக் கொண்டான். அன்றைய தினமும் ஒரு மாணவனை, வகுப்பில் தூங்கிக் கொண்டிருந்த படியால் துரத்தி விட்டவன் பின்னர், அந்த மாணவனுக்கு  ‘நித்திரை வருத்தம்' இருப்பதாக அறிந்து மனவருத்தப் பட்டான். ரெஸ்ரி'  என அழைக்கப்படும் ஒருவகை மாட்டிலையான்கள் கடிப்பதால் இது ஏற்படும். இவர்கள் மட்டுமல்ல,மாடுகளும் மேய்ந்தபடியே, பல மணி நேரங்கள் தூங்கி விடுவதைப் பிற்காலங்களில் பல தடவைகள்  அவன் அவதானித்துள்ளான்.


இனிக்கதைக்குத் திரும்பவும் வருவோம்,  உயர்தர வகுப்பில், மிகத்திறமையாகச் சித்தியடைந்த அஜிபோலா, பிற்காலத்தில் நல்ல வேலையில் இருந்தான். அவனும், அவனது தாயும், அவனது முன்னேற்றத்துக்கு அவனது 'உதவி' தான் காரணம் என்று நம்புகின்றார்கள். காலமும், அவனது பாதையை நகர்த்தி நீண்ட நாட்களாகி விட்டன. அஜிபோலா, தனது மகனுக்கும் அவனது பெயரை, வைத்திருப்பதாகச் சொல்லுகின்றான். வருடம் தவறாது, அவனது பிறந்தநாள் வாழ்த்தும், அவன் பல நாடுகள், மாறியபோதும், அவனைத் தேடி வந்து கொண்டிருக்கின்றது.


அதில் படிந்திருக்கும், சகாராவின் வெள்ளைத் துணிக்கைகளைத் தடவும் ஒவ்வொரு தடவையும், அவன் நேரில் வாழ்த்துவது போலவும், ஒரு விதமான அன்னியோன்னியமும் வந்து போவது போலவே அவன் உணர்கின்றான்!

யாழ் தேவிப் பயணமொன்று!

posted May 26, 2013, 9:16 PM by வாடா மல்லிகை   [ updated Jun 1, 2013, 1:20 AM ]


சுகுமாரனின் முகத்தில் அன்று மகிழ்ச்சி பரவியிருந்தது!

அன்றைக்குத் தான் தனது முதலாவது சம்பளத்தை, அப்பா எப்போதும் செய்வது போலவே, அம்மாவின் கையில் கொடுத்திருந்தான். அம்மாவும் அப்படியே பணத்தை வாங்கி வைத்து விடவில்லை. அதைக் கொண்டு போய்ச் சாமிப் படத் தட்டில் வைத்து, அதில் இருநூறு ரூபாவை எடுத்து, அவனிடம் திருப்பிக் கொடுத்தா. அதை உடனடியாக வாங்கிக்கொள்ளாமல், சிறிது நேரம் சிந்தித்தான். அப்போது தான், வீரகேசரிப் பேப்பரில் இருந்து, தலையைத் தூக்கிப் பார்த்த அப்பா, அவனுக்கு இன்னுமொரு நூறைக் கொடுத்துவிடன் என்று கூறினார். அவனது கண்கள், பனித்தன. இவ்வளவுக்கும் அவனது மாதச் சம்பளம் அப்போது, எண்ணூறு ரூபாய்கள் மட்டுமே. அதில் நூறு ரூபாவைத் தனது, தங்கையிடம் கொடுத்தவன், அடுத்த நாளைக்கான கொழும்புப் பயணத்தைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கினான்.புதிதாக, வேலையில் சேர்ந்தவர்களுக்கு, அந்த வங்கியினது, தலைமைக்காரியாலயத்தில், நடக்கவிருக்கும் பயிற்சிக்காகப் போக வேண்டியிருந்தது. அவனும், அவனது இன்னொரு நண்பனும் அடுத்த நாள் காலை, யாழ்தேவியில் போவது என முடிவு செய்திருந்தார்கள்!

'காங்கேசன் துறையிலிருந்து கொழும்பை நோக்கிச் செல்லும் 'யாழ்தேவி' கடுகதிப் புகையிரதம் இன்னும் சில வினாடிகளில், முதலாவது மேடைக்கு வரும். இதில் மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் முன்னுக்கும், இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் பின்னாலும், இணைக்கப் பட்டிருக்கும். இது சாவகச்சேரி, கொடிகாமம், பளை, ஆனையிறவு.. என அறிவித்தல் தொடர்ந்தது.

எதுக்கும் மூண்டாவது பெட்டியில ஏறுங்கோ. நாங்களும் தான் கொழும்புக்கு வாறம்! அதில கொஞ்சம், இடம் இருக்கும்! குரல் கேட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள், யாழ்தேவி கூவிய படி புகையிரத நிலையத்துக்குள் நுழைந்து விட்டது! மூன்றாவது பெட்டியும், எங்களுக்கு முன்னாலேயே வந்து நின்றது.

புகையிரதம் வந்ததும், பாய்ந்து விழுந்து கோர்னர் சீட் பிடிக்கிறதுக்கும், ஒரு திறமை வேணும். நாங்களும் விழுந்தடிச்சுக் கொண்டு ஏறிப் பார்த்தால், எல்லாக் கோணர் சீற்றுக்கள்ளையும், ஆக்கள் குந்திக்கொண்டிருக்கினம். ஆக்களைப் பார்த்தால், கொழும்புக்குப் போற மூஞ்சியள் மாதிரியும் தெரியேல்லை. கொஞ்ச நேரத்தில, பத்மினி எண்டு எங்களோட வேலை செய்யிற பிள்ளையும், வேறு ஒரு கிளையில வேலை செய்யிற, அவவிண்ட இன்னொரு சிநேகிதமும், ஆறுதலாக வந்து ஏற, அந்தக் கோணர் சீற்றுக்காரர் இரண்டு பேர் எழும்பி இடம் குடுத்துட்டி, இறங்கிப் போயினம். அவை இரண்டு பேரும் தங்கட அப்பாக்களாம். கோண்டாவில்லில் இருந்து இடம் பிடிச்சுக் கொண்டு வருகினமாம் என்று நாங்கள் கேட்காமலே, எங்களுக்குச் சொல்லிவிட்டு, அந்தக் கோணர் சீற்றுக்களில் அமர்ந்து கொண்டார்கள். எங்களுக்கும், வேறு வழியில்லாமல், கிடைத்த இருக்கைகளில் அமர்ந்து கொள்ளப் புகையிரதமும், மெல்ல மெல்ல நகரத் துவங்கியது.

புங்கங்குளம் தாண்ட முந்தியே, நீங்கள் தானே சுகுமார் என்று பத்மினி கேட்டா. ஓமோம், நீங்கள் தானே 'கேள்வியின் நாயகி' என்று சுகுமார் திருப்பிக் கேட்கக் கொஞ்சம் திகைத்துப் போன பத்மினி, வாயைத் திறக்க முன்னம், எனது நண்பன் ' இல்லை, எங்களுக்கு இந்தப் பயிற்சி வகுப்புகள், நடக்கேக்கை, நீங்கள் தான் அடிக்கடி, கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிற படியால, நாங்கள் உங்களுக்கு வைச்ச பேர் அது" என்று உதவிக்கு வந்தான். இவவின்ர பேர் மங்களா என்று அறிமுகப் படுத்திவிட்டு,'எப்படி உங்கட வேலைகள் போகுது, என்று, பத்மினி கதையைத் தொடங்க, பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் எங்களது பெட்டிகளை, மேலே வைக்க, இடம் பார்த்துக் கொண்டிருந்தோம். எல்லா இடத்தையும், முருங்கைக் காய்க் கட்டுகளும், பலாப் பழங்களும் ஏற்கெனவே பிடித்து விட்டன போல இருக்க, ஒரு மாதிரிக் கிடைத்த இடைவெளிகளுக்குள், எமது பெட்டிகளைத் திணித்து விட்டோம். பத்மினியின் நண்பியும், நீங்கள், சிங்களம் கதைப்பீங்களே, என்று கேட்டுத் தானும் ஊமையில்லை, என்று தன்னைக் காட்டிக் கொண்டா.

நண்பனும், என்னடாப்பா, இவளவை, அங்கினேக்கை கண்டால், நிமித்திக் கொண்டு போவாளுகள், இப்ப பார்த்தா, வலிய, வலிய வந்து கதைக்கிறாளுகள் என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டான். சரியடாப்பா, நாங்கள் இவளவையோட மினக்கடாம, வெளியாலை பாப்பம் என்று கூறிய படி, வெளியே பார்க்க, அப்போது தான் மழை பெய்து முடிந்ததால், வரணிப் பக்கத்தில் வளர்ந்திருந்த, ஆம்பல் பூக்கள் மிகவும் அழகாக இருந்தன. நிரை, நிரையாக வளர்ந்திருந்த தென்னை மரங்களும், எமது, கிராமங்கள் எவ்வளவு அழகானவை என்பதைப், பறை சாற்றிக் கொண்டிருந்தன.

வீட்டை உங்களுக்குக் கலியாணம், கிலியாணம் பேச இல்லையா? பத்மினியின் எதிர் பாராத இந்தக் கேள்வியால், கொஞ்சம் ஆடிப் போய்த் திரும்பிய போது, எங்களோடு பயணம் செய்த ஆச்சியும், தனது நாடியில் சுட்டு விரலை வைத்த படி, ஆச்சரியப் பட்டார்.
இல்லை, எங்களுக்கு வேற பிரச்சனைகள் இருக்கிற படியால, எல்லாத்தையும் முடிச்சுப் போட்டுதான் செய்ய வேணும். இப்ப, என்னத்துக்கு அவசரப் படுவான் என்று, சுகுமார் பதிலளிக்க, ஆம்பிளையள் எல்லாரும் இப்பிடியே நினைச்சால், பொம்பிளைப் பிள்ளையள் என்ன செய்யிறதாம்?

இதென்னடா, பிரச்சனையாப் போச்சு, என நினைத்துக் கொண்டிருக்க, அப்போது தான் கலியாணமான சோடி ஒன்று, மண மகனைச் சவூதிக்குத் திருப்பியனுப்புவதற்காகப் பயணம் செய்தது, அவர்களைப் பயணம் அனுப்ப வந்த மாப்பிள்ளையின் மாமிக்காரி, பிள்ளை சொல்லுறதிலையும் ஒரு நியாயம் இருக்குத் தானே தம்பியள் என்று துவங்கியது. இந்த ரயில் பயணங்களில் இப்படியான இலவச ஆலோசனைகளுக்குக் குறைவே கிடையாது என்பதைக் காட்டியது! புது மாப்பிள்ளையும், பட்டப் பகல் எண்டும் பாக்காம, ஏதோ அப்ப தான், முதன் முதலாப் பொம்பிளையைக் கண்டது மாதிரி, அடிக்கடி தனது அன்பைப் பகிரங்கப் படுத்திக் கொண்டிருந்தார்..

எங்களுக்குக் கொஞ்சம் பசிக்கவும் துவங்க, ஆனையிறவு உப்பளம் உதவிக்கு வந்தது. இஞ்சை பார் , எவ்வளவு உப்புக் குவிஞ்சு போய்க் கிடக்குது,என்று சொல்லியபடி வெளியில் பார்த்தான் சுகுமார். வீட்டில கட்டித் தந்த சாப்பாட்டை, எனது நண்பன் எடுத்தான். அவன் தான் எனக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தான். முட்டைப் பொரியலும், புட்டும், கருவாட்டுப் பொரியலின் மணமும்,கொஞ்ச நேரத்திற்கு எல்லாவற்றையும் மறக்க வைத்தது.

ஆனையிறவு தாண்டியதும், அழகிய வயல் நிலங்கள் பச்சைப் பசேலென்று தெரிந்தன. ஊரில்,புழுதி விதைப்பில, சின்னச் சின்ன வரம்புகளுடன், உயரம் குறைந்த வயல்களைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு, இந்த வயல்கள், ஒருவித கிழு கிழுப்பை ஊட்டின.

நாங்க என்ன சும்மாவா கேக்கிறம். சீதனம் தருவம் தானே! மீண்டும் பத்மினி!

இதென்ன கோதாரியாக் கிடக்கு, மச்சான். வேற பெட்டியில ஏறியிருக்கலாம் போல!

யாழ்தேவி, மிக மெதுவாக ஓடத்துவங்கியது.

தம்பி, இப்ப இது முறிகண்டியானைக் கடக்கிறது. யாழ்தேவிக்கும், முறிகண்டியானுக்குப் பயம் தான். அந்தப் புது மாமி, கேட்காமலேயே விளக்கம் தந்தா.

நாங்க சமைச்ச சாப்பாடு இருக்கு. தேவையெண்டால், வெக்கப் படாமல் கேழுங்கோ! மீண்டும் பத்மினியின் சீண்டலுடன், யாழ்தேவி மாங்குளத்தில் ஓய்வெடுத்தது!

வட, வடே!

கச்சான்...... கச்சான்...

இந்தச் சத்தங்களில், ஒரு விதமான சந்தம் மறைந்திருதது போல ஒரு உணர்ச்சி!

மச்சான், கொஞ்சம் கச்சான் வாங்கிக் கொடுப்பமடா, என்ன இருந்தாலும், எங்களை, நம்பித் தானே பயணம் வருகுதுகள்!

நண்பன், இளகிக் கொண்டு வருவதற்கான, முதலாவது அறிகுறி தெரிந்தது!

சுகுமாரும், இவளவையின்ர வாயைக் கொஞ்ச நேரமாவது, பிசியா வைச்சிருக்கிறதுக்காகவெண்டாலும் கச்சான் உதவும் என நினைத்து நண்பனின் ஆலோசனையை ஆமோதித்தான்.

புகையிரதம் வவுனியாவை, நோக்கி ஓடிக்கொண்டிருந்தது!

வவுனியா புகையிரத நிலையத்தினுள், ஒரு பெருமூச்சை விட்டவாறு யாழ்தேவி நுழைந்தது.

அநேகமானவர்கள், தங்கள் மதியச் சாப்பாடுகளை, இங்கேயே முடித்து விட அவசரப் பட்டனர். வவுனியா தாண்டினால், கையைக்காலை நீட்டிச் சாபிடுவது கொஞ்சம் கடினமாக இருக்கும்!

பல பெண்கள் போட்டிருந்த தாலிக் கொடிகள், இப்போது கணவர்களிடம் கை மாறின. சில புத்திசாலியான கணவர்கள், தங்கள் உள்ளாடைகளில், ஒரு விதமான இரகசியமான பொக்கட்டுகளைத் தைத்திருப்பார்கள் போலும். அவர்கள் நகைகளை வாங்கியதும்,யாழ்தேவியின் கழிப்பறைக்குள் போய் வந்த படி, இருந்தது அதனை உறுதிப் படுத்தியது. அதிகம் நகை போடாதவர்கள், சேலைத் தலைப்புகளை, இழுத்து மூடுவதன் மூலம், இயலுமான அளவுக்குத் தங்கள் நகைகளை, மறைத்துக் கொள்ள முற்பட்டனர்! ஏன் தான், இவற்றை அணிந்து வர வேண்டுமோ, எனச் சுகுமாரன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

வவுனியாவில் இருந்து, பேராதனைப் பல்கலைக்கழகம் போகும் மாணவர்களின் கூட்டமும் ஏறியது! மாணவப் பருவத்துக்கேயுரிய, அந்தப் பயமில்லாத துணிச்சல், அவர்களின் முகங்களில் எழுதியிருந்தது.

ஏறியவுடனேயே அவர்கள் தங்கள் அடையாளமான பைலாப் பாட்டுக்களைப் பாடத் துவங்கியது, வவுனியாவில் அவர்கள் சும்மாயிருக்கவில்லை என்பதையும் தெளிவாகக் காட்டியது. இனிப் பொல்காவலையில் இறங்கி, உடரட்ட மெனிக்கேயைப் பிடிக்கும் வரைக்கும், கல கலப்புக்குக் குறைவிருக்காது எனச் சுகுமாரன் நினைத்துக் கொண்டான். அவர்கள் ஏறியதிலிருந்து, பத்மினியும் அவளது தோழியும் ஒரு விதமான 'மவுன விரதம்; தொடங்கி விட்டது போல இருந்தது.

கண்டி நகர் கண்டு நாமும் வருகிறோமம்மா!
காணாத காட்சியெல்லாம் கண்டோமேயம்மா!


மதவாச்சி தாண்டியதும், இந்தப் பாடல், சூட மெனிக்கே பலாலா, யனவா மேயப்பே! என மாறிவிடும் என்பதும் சுகுமாருக்குத் தெரிந்திருந்தது!

மால் மருகா எனும், வேல்முருகா நீயே...
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே...
வருவாய் வேல்முருகா.......
கதிர்மலைக் கந்த வேளே!
காப்பது நீ, ஐயா!.....


அவர்களது, பாடலில் இடைக்கிடை முருகப் பெருமானும் வந்து தலையைக் காடிவிட்டுப் போனார்.

யாழ்தேவி, வவுனியாவை விட்டுப் புறப் பட்டு மதவாச்சி வரை, ஆட்டமும் பாட்டும் தொடர்ந்தது. பின்பு களைத்துப் போய்,, அவர்கள் முன்னூற்றி நாலு, விளையாடத் துவங்கியிருந்தார்கள்!

அப்போது, அவர்களில் ஒருவன், விரிவுரையாளனாக இருக்க வேண்டும் என்று, அவர்களுக்கிடையில் நடந்த உரையாடல்களில் இருந்து தெரிந்தது, தனது கலியாண மோதிரத்தைக் கழட்டி, அதைப் பணயமாக வைத்து விளையாடப் போவதாகக் கூறவும்,, யாழ்தேவியில் பயணம் செய்த ஒரு பெரியவர், யாரும் எதிர்பாராத மாதிரி,
'தம்பிமார், நீங்க என்னத்தையும் வைச்சு விளையாடுங்க, ஆனால் அந்த மோதிரத்தை மட்டும் வைச்சு விளையாட விட மாட்டன் சொன்னார்.

அப்பு, உங்களுக்கு என்ன பிரச்சனை, எனச் சாதாரணமாகத் தொடங்கிய வாக்குவாதம் பெரிய சத்தங்களுடன் தொடர்ந்தது.

அப்புவும், தம்பி, நீங்கள் ஆரு பெத்த பிள்ளையளோ எனக்குத் தெரியாது. ஆனால், கலியாண மோதிரத்தை வைச்சு விளையாட மட்டும் விட மாட்டன் என்று பிடிவாதம் பிடித்தார்.

இறுதியில், அந்த மாணவர்களுக்கே, தாங்கள் செய்வது பிழையென்று தெரிந்ததோ, அல்லது பெரியவரின் பிடிவாதத்துக்குப் பயந்தார்களோ, அந்த மோதிரத்தை வைத்து விளையாடுவதை நிறுத்தி விட்டார்கள். இப்போது யாழ்தேவியும், அனுராதபுரம், புகையிரத நிலையத்தினுள் நுழைந்தது. மதவாச்சியில் இருந்து, வெளியில் தெரிந்த இடங்களில் பெரிய மாற்றங்கள் தெரிந்தன. மரங்களும், வயல்களுமாகப் பச்சைப் பசேலென்று வெளிகள் இருந்தன. கல்வீடுகள் மறைந்து, காட்டுத் தடிகள் கொண்டு கட்டப் பட்டு, அவற்றின் மீது மண்ணுருண்டைகள் அடுக்கப் பட்டு, கிடுகளால் வேயப்பட்ட கூரைகள் அதிகம் காணப் பட்டன. பனையோலை வேலிகள், முற்றாகவே மறைந்து போயின. இடைக்கிடையே, ஓடு போடப்பட்ட கல்வீடுகளும் காணப் பட்டன. புத்தளம், கற்பிட்டி போகவேண்டியவர்கள், அனுராதபுரத்தில் இருந்து, பஸ் எடுப்பதற்காக, இறங்கிப் போயினர்.

இதுவரை, காலை நீட்டி அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும், கொஞ்சம் ஒடுங்கிப் போய், ஒதுக்கமாக அமர்ந்து கொண்டார்கள். அவ்வாறு, நகர்ந்து கொள்ளாமல், இருந்தவர்களை, மாத்தயோவ், பொட்டக், அங்கன்ன க்கோ .... என்ற சத்தங்கள், நகர வைத்தன.

வட, வடே.... எஸ்ஸோ வடே....... என்ற குரலில், வடை விற்பவர்களில் தொனியும் மாறியிருந்தது. மொத்தத்தில், கடவுச் சீட்டு இல்லாமல், இன்னொரு நாட்டுக்குள் பிரவேசிப்பது போலவே இருந்தது.

யாழ்தேவி வழமைக்கு அதிகமான நேரம், அனுராதபுரத்தில் தரித்து நின்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், நோக்கிச் செல்லும்,உத்தரதேவிக்காகக் காத்திருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.உத்தர தேவியைக் கண்ட மகிழ்சியில், யாழ்தேவி மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

இப்போது, வெளியில் காணப்பட்ட மாடுகளும், குறையத் தொடங்க, சேற்று நிலங்களில், எருமைகள் அதிகம் படுத்திருந்தன. இடையிடையே, தண்டவாளங்களில், குறுக்கிடும் சிற்றோடைகளில், பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். தண்டவாளங்களில், இரைமீட்கும் இந்த எருமைகளைத் தூக்கி எறிவதற்காக, யாழ்தேவியின் முன்னால், பாரிய இரும்புத் தகடுகள் பொருத்தப் பட்டிருந்தன. யாழ்தேவி, இரத்தம் தோய்ந்த முகத்துடன், கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்துனுள், நுழைந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

பொல்காவலை, வரும் வரைக்கும், கலகலப்புக்குக் குறைவிருக்கவில்லை, பத்மினியினதும், அவவின்ர தோழியினதும் வாய்கள் கூட, மவுனமாய் இருந்தது, கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.பொல்காவலையில், மாணவக்கூட்டம் இறங்கியதும், யாழ்தேவியின் அமைதி முடிவுக்கு வந்தது, வெளியில், உயர்ந்து வளர்ந்திருந்த, ரப்பர் மரங்களும், தென்னைகளும், ஈரப் பலாக்காய் மரங்களும், ஒரு புத்துணர்ச்சியை ஊட்டின.

கொழும்பிலை எங்க தங்கப் போறீங்கள்? மீண்டும் பத்மினியின் சீண்டல்.

வேற எங்கை, கொச்சிக்கடையில் தான்!

நாங்களும், கொச்சிக்க்கடை தான்! 

கொச்சிக்கடை,என்னவோ 'திருநெல்வேலி' மாதிரியும், ஏதோ யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி மாதிரியும், எங்கள் பேச்சில் புகுந்து விளையாடியது.

பொல்காவலையில் இருந்து, புறப்பட்ட யாழ்தேவி, எந்த விதத் தடங்கலும் இன்றி,, றாகம, வரையும் ஓடியது. றாகம, ஒரு முக்கிய சந்தியாதலால், யாழ்தேவியின் இரு பக்கமும், கைகாட்டி மரங்களாலும், சமிக்ஞை விளக்குகளாலும், நிறைந்திருந்தது, மிகவும் அழகாக இருந்தது. 

இங்கிருந்து ஏறியவர்கள், அனேகமாக முஸ்லிம்களாக இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த தொப்பிகளும், பெண்கள் போட்டிருந்த உடைகளும், அவர்களைத் தனியாக இனம் காட்டின. இதுவே, மீண்டும் தமிழில் சத்தம் போட்டுக் கதைக்கக் கூடிய, துணிச்சலைப் பலருக்குக் கொடுத்திருக்க வேண்டும், எனச் சுகுமாரன் நினைத்துக் கொண்டான்.

பொல்காவலை,தாண்டியதும், குருநாகலையில் இருந்து, கொழும்பு வரை, குறிப்பாக ஒன்றையும் காணவில்லை, புத்தர் சிலைகளும், புத்தரின் பெரிய வீடுகளும் தான் அதிகமாகக் காணப் பட்டன. இலங்கையின் இரண்டாவது பெரிய ஆறான களனியாறு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதன் கரையில் வளர்ந்திருந்த, மூங்கில்கள், ஆற்றை நோக்கி, தலை சாய்த்திருந்தது, மிகவும் அழகாக இருந்தது. 'அதுவரை, 'தொண்டைமானாற்றையும், வழுக்கியாறையும் பார்த்திருந்த , சுகுமாருக்கு இது விந்தையாக இருந்ததில், வியப்பேதும் இல்லை.

களனியில் இருந்தே, தமிழ் ஆக்கள், இறங்கத் தொடங்கியிட்டினம்!

கொழும்புக் கோட்டையை, யாழ்தேவி சென்றடையப் பிற்பகல் இரண்டு மணியாகி விட்டது!

சுகுமாருக்கும்,நண்பனுக்கும் கொழும்பு சூனியமாகத் தெரிந்தது. இதுவரை, நெஞ்சில் இருந்த துணிவெல்லாம், பனிபோல உருகியோடி விட, பத்தாதக்குப் பக்கத்தில இரண்டு பொம்பிளைப் பிள்ளையளும், அப்ப கொச்சிக்கடைக்குப் போவமே எண்டு கேட்க, நூற்றி இரண்டாம் நம்பர் பஸ்ஸில் ஏறி டிக்கட் கேட்கக் போட்டு வந்த ஒரு பஸ்ஸில் ஏற, கொண்டக்டரும், மாத்தையா, டிக்கட் ஹத்தறத? என்று கேட்டான்!

'ஒவ்; என்று கூறியபடி, அவனிடம், இருபது ரூபாவைக் கொடுத்து விட்டுச் சுகுமாரன், மிச்ச்சகாசுக்கு, வெயிட் பண்ணினான்.

கொண்டக்டர் இது மாதிரி, எத்தனை பேரைப் பார்த்திருப்பான்!
'பயிண்டக்கொட இத்துறு சல்லி தென்னம், மாத்தையா என்றான்.

அதோடு நிப்பாட்டாமல், கலைக்கிற மாதிரி,
ஒக்கொம இஸ்ஸறட யண்ட.... எண்டு சத்தம் போட்டுக் கத்தவே எல்லாரும் முன்னுக்குப் போனார்கள்.

சுகுமாரது இப்போதைய பிரச்சனை எல்லாம். மிச்சக் காசை எப்பிடிச் சிங்களத்திலை, கேக்கிறது, எண்டு தான்! 

முருகனும் சாதகக் குறிப்பும்

posted Aug 7, 2012, 5:07 PM by வாடா மல்லிகை   [ updated Aug 7, 2012, 5:07 PM ]


கந்தையர், வழக்கத்தை விடக் கொஞ்சம் 'பிசியாக' இருந்தார்.
'வதனா விலாசின்' மேலே கட்டப்பட்டிருந்த, ஒரு விதமான மாடியிலிருந்து, தற்காலிக படிகளைத் தூக்கிவைத்து, அதன் வழியே ஒரு விதமான,தனக்கேயுரித்தான லாவகத்துடன் கீழே இறங்கியவர், படிகளை எடுத்துச் மறைவான சுவரொன்றில், சாத்தியதும், மேலேயொரு, மாடி இருப்பதற்கான, எந்த வித அடையாளமும், அங்கு காணப் படவில்லை!
மள மளவென்று, காலைக்கடன்களை முடித்தவர், மீன்கடைக்குப் போன பெடியன், வந்திட்டானா என்று கடைக்கண்ணால் பார்த்து உறுதிப் படுத்திய பின்பு, முன்னாலிருந்த கடைக்குப் போய், ஒரு மல்லிகைப் பூமாலையை, வாங்கிக் கொண்டு வந்து, ஒரேயடியாகப், புத்தர், பிள்ளையார், முருகன்,லட்சுமி, அரபிக்கில் எழுதப் பட்ட படம், எல்லாத்தையும், கவர் பண்ணி, அதைப் போட்டார். பிறகு, ஊதுபத்தியைக் கொழுத்தி வைத்தவர், 'முருகா, முருகா, என்று, இரண்டு தரம் கூறியபடி, அன்றைய 'வீரகேசரிப் பேப்பரைத் திறக்கவும், தேத்தண்ணி குடிக்கிற ஆக்கள், வரத்துவங்கவும், சரியாக இருந்தது.
டேய், தம்பி, அந்தக் கயித்தைக் கொழுத்தி விடப்பு! என்று ஆரோ சிகரட் வாங்கி விட்டு, நெருப்புக் கேட்ட போது, சத்தம் போட்டார்!
ஆ, ஐயா வாங்கோ, அப்பு வாங்கோ! என்று தன்னையறியாமலே, வழக்கம் போல, வாய் திருவாய் மலர்ந்து கொண்டிருந்தது.
ம்ம்.... காலம் என்ன மாதிரி, ஓடிபோச்சுது, என நினைத்தவருக்குக், கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.
இருக்காதா, பின்னே?
ஒரு 'பழையகாட்' சாரத்தோடையும், ஒரு 'மில்க் வைட்; சவர்காரக் கட்டியோடையும் தானே, ஊரை விட்டு வெளிக்கிட்டனான். இண்டைக்கு, ஒரு சாப்பாட்டுக் கடையும், நாலாம் குறுக்குத் தெருவில, ஒரு பலசரக்குக்  கடையும்   இருக்குதெண்டா, எல்லாம் அந்த முருகன் தந்தது தானே!
மீண்டுமொரு முறை, முருகனைப் பார்த்து,இரண்டு கன்னங்களிலும், போட்டுக் கொண்டவர், கடைக்குப் பின்னுக்குப் போய்,
டேய், தம்பி, அந்தப் பழைய இட்டலியளை, எறிஞ்சு போடாதை! உழுந்து வடைக்கிள்ள போட நல்லாயிருக்கும், என்று மெதுவாகக் கூறியபடி, சமையல் பகுதியை நோட்டமிட்டார்!
தம்பியள், அந்த வெந்தயக் குழம்பையும், ஊத்திப் போடாதேயுங்கோ!
வெந்தயக் குழம்பு, பழுதாகாது, பிள்ளையள். இன்டைக்கு, வைக்கிற குழம்போட, சேர்த்து விடுங்கோ, என்ற படி, எனக்கேல்லோ தெரியும், இந்தக் கடை துவங்கின காலத்துக் குழம்பு, இண்டைக்கும் இருக்கென  நினைத்தபடி,கடைக்கு முன்னால், ஓடி வந்தார்!  
அப்போது, ஊரிலிருந்து, மனுசி எழுதின விசயம், நினைவுக்கு வர, கடைப் பெடியனைக் கூப்பிட்டுத்,
;தம்பி, ஒருக்கா வெள்ளைவத்தைக்கு ஓடிபோய்ப். புறோக்கர் ஆறுமுகத்தை, ஒருக்காக் கூட்டிக் கொண்டு வாப்பு, என்று கலைத்து விட்டவர், தொடர்ந்து, கல்லாப் பெட்டியில், இருந்த படியே, நினைவுகளில் மூழ்கிப் போனார்!
ஆனால், வாய் மட்டும், ஐயா வாங்கோ! அம்மா வாங்கோ! என்ற படி இருந்தது!
'இவள் வதனாக்கும், ஒரு கல்யாணத்தைப் பாத்துச் செய்து விட்டால், கடையைப் பெடியளிட்டைக் குடுத்துட்டு, இந்தியாவுக்குப் போய், என்ர 'முருகனைப்' பாத்திட்டு வந்திட்டனெண்டாக்  கண்ணை மூடினாலும், பறுவாயில்லை!
மத்தியானச் சாப்பாட்டுக்கு, ஆக்கள் வரத் துவங்கீற்றினம்!
அதாரது, பாங்கரையாவா! என்ன ஊருக்குப் போயிற்று வந்தனீங்க போல!
பதிலை, எதிர்பாராத நலம் விசாரிப்புகள்!
அதே நேரம், ஆரோ நண்டு சாப்பிட்டவர், நண்டுக்காலைக் கடிக்க முடியாமல், கூப்பிட்டார்!
டேய், தம்பி, அந்த ஐயாவின்ர, காலை ஒருக்கா உடைச்சு விடப்பு!
என்றவர், புறோக்கர் ஆறுமுகம், தூரத்தில் வருவதைக் கண்டு கொண்டார்!
'முருகா, முருகா! என்று மீண்டும் முருகனைக் கூப்பிட்டார்!
நான், நினைச்ச விசயம் சரிவந்திட்டுதெண்டால், உனக்குத் தங்கத்தால 'பாதம்' செய்து போடுவன், என்று மனதுக்குள், நேர்த்தியும் வைத்து விட்டார்!

0000000     0000000    0000000    0000000    000000    0000000    0000000    0000000    0000000    0000000    0000000 

வாங்க, ஆறுமுகத்தார்!

இண்டைக்கு நல்ல நாளாக் கிடக்கு! கன நாளா, நினைச்சு வைச்சிருக்கிற, ஒரு விசயத்தை, முடிச்சிடலாம் என நினைக்கிறன், எண்டவர் முருகனை, மீண்டும் பார்க்க, முருகனும் சிரித்த மாதிரி இருந்தது!
புறோக்கருக்கு, முதலே விசயம் விளங்கி விட்டது.
ஆனால், எதற்கும், கந்தையற்றை வாயால வரட்டுமே, என்று பொறுமை காத்தார். அதே நேரம், பக்கத்தில இருந்த, கண்ணாடியில பார்த்து, வெயிலில் கரைந்து போன சந்தனப் பொட்டைச் சரிப்படுத்தினார்.  
நான், நேர விசயத்துக்கு வாறன், ஆறுமுகம்.
என்ர ஒரே  பெட்டை, வதனிக்கு, நீ ஒரு இடம் பாக்க வேணும்!
சரி, என்ன மாதிரி எண்டு சொல்லுங்க. நான் என்ர 'டேட்டா பேசில' பாத்துச் சொல்லுறன்.
அதெல்லாம், வேணாம் ஆறுமுகம். உனக்குப் பிரச்சனையில்லாம, நானே பாத்து வைச்சிட்டன். இவள், விசாலாட்சி இருக்கிறாளெல்லோ? அவளின்ர  பெடியன், நல்ல பெடியனாம். 'ஹட்டன் நேசனல் பாங்கில' உதவி மனேச்சராம்.
அதை ஒருக்காப் பாத்து முடிச்சு விடன்!
ஆறுமுகத்தார், ஒரு நிமிடம் பேசவில்லை!
இல்லப் பெடியனுக்குப் 'பத்தில வியாழன்' வாற நேரம் என்று, இழுத்தார்.
அதுக்கென்னடாப்பா,   படிச்ச பெடியன், வெளிநாடு, கீடு போகப் போறான்போல! நாடு கிடக்கிற நிலையில, அதுகும் நல்லதுக்கு தான், என்றவர், மீண்டும், முருகனைக் கூப்பிட்டார்.
இல்லை, அதுக்கில்லை... புறோக்கர் இழுத்தார்.
இஞ்சை பார், நான் நினைச்சுட்டன்! இதை முடிச்சுத் தந்தா, உனக்குப் பத்தாயிரம்!
சரி, சாதகத்தைத் தாங்கோ! என்று இரண்டு கையையும், நீட்டி வாங்கிக் கொண்டார், ஆறுமுகத்தார்!
இந்த முறை, முருகா, என்றது, கந்தையரில்லை, ஆறுமுகத்தார்!

0000000     0000000    0000000    0000000    000000    0000000    0000000    0000000    0000000    0000000    0000000   

அவரது, மனதில் ஒரு பெரிய திட்டம் உருவாகி விட்டது!

அவருக்கும், உள்ளூரக் கந்தையரில ஒரு பொறாமையும் உண்டு!
ஊரில, தாங்கள் வசதியாக இருக்கேக்கை, ஒன்றுமில்லாமல் கிடந்ததுகள் எல்லாம், இண்டைக்குக் கடையும், விலாசமும்!
தனக்குள், கறுவிக்கொண்டவர், நேர தனது, சாத்திரி நண்பனிட்டைப் போய், எனக்கு ஒரு சாதகம், எழுத வேணும்!
சாத்திரி, என்ன பகிடியா விடுகிற ஆறுமுகம்? எனக் கேட்க, ஆயிரம் ரூபாய்களைத் தூக்கி மேசையில் போட்டார், ஆறுமுகம்!
சரி... நல்லதுக்குத் தானே, என்ற படி, பணத்தை எடுத்துக் கொண்டார் சாத்திரியார்!
'அடுப்பில, அவிக்கேக்க, கவனமா அவிக்க வேணும், என்ற படி, 'முருகா' என்றவர், அன்றைக்குப் பின்னேரமே யாழ்ப்பாணத்துக்குப், பஸ் பிடித்தார்.

விடியக் காலமையே, யாழ்ப்பாணம் போனவர், நேரே விசாலாட்சி, வீட்டை தான் போனார்.
தனது, மூத்த மகளின்ர, பிள்ளையை, முழங்காலில் வைத்து, நல்லெண்ணை தடவிக் கொண்டிருந்த விசாலாட்சி, பிள்ளையைத் தடுக்கில குப்புறப் போட்டுவிட்டு, எழுந்தவள்,
நான் நினைச்சனான், காகம் கத்தேக்கையே, நீங்க தான் வருவீங்க எண்டு சொல்லிய படியே, அண்ணை என்ன மாதிரி? என்று கேட்டாள்!
'எல்லாம் பழம் தான். என்று சிரித்த படியே சொன்ன ஆறுமுகத்தார், தேத்தண்ணியைப் போடன், என்ற படி திண்ணையில் அமர்ந்தார்!
அப்ப அந்தச் செவ்வாய்ப்  பிரச்சனை?
அதெல்லாம் தொண்ணூறு வீதம் பொருத்தம் என்றவர், இனி இதைப் பற்றி மூச்சு விடக் கூடாது, என்று வாயில் விரலை, வைத்துக் காட்டினர்!
மீண்டும், முருகா! என்றொரு குரல்!
இந்த முறை, விசாலாட்சி!


குருமூர்த்தி

posted Aug 1, 2012, 6:55 PM by வாடா மல்லிகை   [ updated Aug 1, 2012, 6:55 PM ]


நீண்ட காலங்கள் கடந்து போய்விட்டாலும், குருமூர்த்தியின், முகம் மட்டும் இன்னும் மனத்திரையை விட்டு அகன்ற பாடாயில்லை. இவ்வளவுக்கும் குருமூர்த்தி, ஒரு பிரபலமான மனிதனோ, அல்லது எம்மால் ஏற்றுக்கொள்ளப் பட்ட தேச வழமைகளின் படி, ஒரு சாதாரண மனிதனோ கூட அல்ல.
சுத்தமான, கலப்படமில்லாத தமிழில் சொன்னால், ஒரு விசரன்.
நடராசா அண்ணையின்ர, கன்ரீனுக்கு  முன்னால, இருந்த மரத்துக்குக் கீழ, இருந்த படி, ஒரு இருபது பக்க, அப்பியாசக் கொப்பியில், ஏதாவது எழுதியபடி இருப்பான். ஆனால், வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியதை, நாங்கள் ஒருவரும் கேட்டது, கிடையாது. ஒரு வேளை, ஊமையாக இருக்கலாம் போலும் என நாங்கள் நினைத்து, அவனை, நாங்கள் கரைச்சல் படுத்துவதும் கிடையாது!

அன்றைக்குச் சனிக்கிழமை!
விடியக் காலமையே, கே.எஸ்.எஸ், அவர் தான் எங்கட போர்டிங் மாஸ்டர், நடந்து வந்தது, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் எங்களுக்கு இருந்தது!
ஏதாவது, பெரிய விசேசம் எண்டால் தான், அவர் அப்படி வருவதுண்டு. கையில். பிரம்பொண்டும், மறைந்தபடி இருந்தது!

எங்கடா, அந்த மூதேவி?
ஆரு, சேர்?
அவன் தான்ரா, அந்தக் கழுவாஞ்சிக் குடியான்!
விடுதியின் மேல் தட்டுக்கு, வேர்க்க, விறுவிறுக்க ஓடிப்போனால், ;கிங்க்ஸ்ரன்' என எம்மால், செல்லமாக விழிக்கப்படும், கழுவாஞ்சிக் குடியான், மூன்று தடித்த. காச்சட்டைகளைப் போட்டபடி, ஏற்கெனவே ஆயத்தமாக நின்றார்!

என்ன நடந்தது, கிங்க்ஸ்ரன்?
மச்சான், ராத்திரி ரீகலுக்குப் படம் பார்க்கப் போகேக்கை, இருட்டுக்குள்ள போய், ஒரு கதிரையில இருந்திட்டன். பக்கத்தில, ஒரு கிழடொண்டு இருந்து படம் பாத்தது! படத்தில, வந்த பகிடிக்குச் சிரிக்காம இருந்துது, மச்சான்!
நான், ஒரு பகிடி வாற நேரம், அதுகின்ர துடையில தட்டி,
அப்பு!  இது பகிடி, எண்டு சொல்லிப் போட்டன்!
பிறகு, இன்டர்வலுக்கு வெளிச்சம் வரேக்க பாத்தா, அது நம்மட சுப்பரடா!
அதற்கு மேல், எமக்கு மேலதிக விளக்கம் வேண்டியிருக்கவில்லை!

ஒரு மாதிரித் 'தேவாரம்' பாடித் தேத்தண்ணியும், குடிச்சிட்டு, கன்ரீனடிக்குப்   போனால், குருமூர்த்தி ஒரு காகிதத்தை நீட்டினான். அதில், இப்படியான, பகிரங்கத் தண்டனைகள், எதிர்மறையான விளைவுகளைத் தரும்' என எழுதியிருந்தது! அது தான், அவன் ஒரு விசரனல்ல, என என்னை நம்ப வைத்தது.
பின்பு, கணிதத்தில் வரும், இரு படிச்சமன்பாடுகள், சினை காணுதல், போன்றவற்றில் வரும் கடுமையான, கணக்குகளைக் கொடுத்தால், செய்து தருவான். அவனுக்குள், மறைந்திருந்த நகைச் சுவை, உணர்வும் சில எதிர் பாராத நேரங்களில், வெளிப்படுவதுண்டு.
ஒரு முறை, குருமூர்த்தி, சில சமன்பாடுகளைத் தந்து, 'பரவளைவு' கீறும்படி சொன்னான். நாங்களும், கீறிக் கொண்டு போய்க் காட்ட, ஒருவன் கீறிய 'பரவளைவைப்' பார்த்துக் குருமூர்த்தி, விழுந்து, விழுந்து சிரித்தான்! குருமூர்த்தியைச் சிரிக்கப் பண்ணியதைக் கண்டு, எங்களுக்கு மிகவும் சந்தோசம், எண்டாலும் கொஞ்சம் பயமும் பிடித்துக் கொண்டது!
பின்பு ஒரு பேப்பரில, 'கிழவியளின்ர மாதிரிக் கிடக்கு' என்று எழுதிக்காட்ட நாங்களும், சிரித்து வைத்தோம், ஆனால், அப்போது, அந்தப் பகிடி வடிவாக விளங்கியிருக்கவில்லை!

நாட்கள் போக, குருமூர்த்தியும், எங்களுக்கு வேண்டப் பட்டவனாகி விட்டான்!
அட்சர கணிதத்திலிருந்து , ஆவர்த்தனப் பாகுபடு வரை, அவன் அறிந்திருந்தான்!
நாங்களும், நாளடைவில், நடராசா அண்ணையின்ர 'லைற் ரீ' வாங்கிக் குடுத்தால், வாங்கிக் கொள்வான்! அதுக்கு மேல, எங்கட அந்த நேரப் பொருளாதாரமும், இடம் கொடுக்காது!  

சில வேளைகளில், மிஞ்சிய சாப்பாட்டை, 'பண்டா' கொண்டு வந்து கொடுத்தால் மட்டும், குருமூர்த்தி சாப்பிடுவான்.
'பண்டா' ஒரு சகல கலா வல்லவன். விடுதிச் சமையல், தொடக்கம், 'வாட்டர் பம்ப்' வேலை செய்யாவிட்டால், பைப்புக்குள் தண்ணீர் விட்டு, ஸ்டார்ட்' பண்ணுவது, மற்றும் காவல் வேலை, வரை செய்வான்! அவனுக்கும், குருமூர்த்திக்குமிடையே , ஒரு விதமான பிணைப்பு, எப்போதும் இருந்தது!

எங்களுக்கும், பண்டாவுக்கும் இடையில், ஒரு 'ரகசியமும்; இருந்தது!
விடுதியில், சாப்பாடு சரியில்லா விட்டால், ஒளிச்சு 'மொக்கங்கடை' போனால். பண்டா, ஒருவருக்கும் தெரியாமல், கேற்றைப் பூட்டாமல் விட்டிருப்பான். நாங்கள் திரும்பி வந்ததை, உறுதிப் படுத்தியபின், எனக்கு நித்திரை வாறான்' என்று கூறியபடி படுக்கப் போவான்.  

ஒருநாள், பண்டாவின் நெருங்கிய உறவினர் ஆரோ, செத்துப் போய் விட்டதாகத் தகவல் வந்து, பண்டா போகவேண்டி வந்து விட்டது.
அவனிடம், பணம் இருக்கவில்லை. 'பண்டா' ஒரு நாளும், சேமித்து வைத்ததில்லை. எங்களிடமும், காசு அதிகமாக இருப்பதில்லை.
போர்டிங் மாஸ்டராலும், ஒரு 'ரிற்றேன் ரிக்கற் ' மட்டும் தான் குடுக்க முடிஞ்சுது.
அண்டைக்கு இரவு, பண்டா வழக்கம் போல, குருமூர்த்தியிடம், இரவுச் சாப்பாடு, கொண்டு போனான்.
'பண்டா, ஊருக்குப் போய் வாறது' எண்டு தனது தமிழில் குருமூர்த்தியிடம் சொன்னான்.

குருமூர்த்தியும், பண்டாவிடம், ஒரு என்வலப்பைக் கொடுத்து விட்டுச் சிரித்தான்.
அதனுள்ளே, முன்னூறு ரூபாய்' நோட்டுக்களாக இருந்தது.
அன்று தான், பண்டா, வாய்விட்டு அழுததை, முதன் முதலாகக் கண்டேன்!

1-10 of 13