அந்த வேப்ப மரத்தின் நிழலில், சாக்குக்கட்டிலில் படுத்திருந்த சந்திரனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது! ஒரு நீண்ட காலச் சொகுசு வாழ்க்கை அவனது உடலை இன்னும் மாற்றிவிடவில்லை என நினைத்தபோது, தனது உடலைப்பற்றிக் கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது! பல வருடங்களுக்கு, முன்பும் இதே இடத்தில். பல தடவைகள் மதியச் சாப்பாட்டின் பின்பு படுத்து உறங்கியிருக்கிறான்! அப்போது, அருகே இருந்த தென்னம் பிள்ளையில், எட்டிப்பிடிக்கலாம் போலச் செவ்விளனிக் குலைகள் தொங்கும்! அவற்றின் அழைகைப் பல முறை பார்த்து வியந்திருக்கிறான்! ஒரு கவிஞனாக இருந்திருந்தால், அவனது அந்த வயதின் கற்பனைகள், அளவில்லாத, அர்த்தமில்லாத ஆயிரம் கவிதைகளையாவது புனைந்திருக்கும் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை! இப்போது அந்தத் தென்னம்பிள்ளை, தென்னை மரமாகி, ஏறிக் கூடப் பறிக்க முடியாத அளவுக்கு மேலே போய்விட்டது! அதனைப் போலவே, அந்த நேரத்தில் அருகில் இருந்தன போலவும், அவனால் இலகுவாக அடைந்திருக்கலாம் போலவும் இருந்த பல , அந்தத் தென்னைமரத்துத் தேங்காய்களைப்போலவே வெகு உயரத்துக்குப் போய் விட்டன!
அப்போது, வேப்பமரத்திலிருந்து காகம் ஒன்று பிடுங்கிப்போட்ட ஒரு வேப்பம்பழம் அவன் மேலே வந்து விழுந்தது! முந்திய சந்திரனாக இருந்திருந்தால், ‘யக்' என்று கூறியபடி,அதைத் தூக்கி எறிந்திருப்பான்! அத்துடன் ஒரு மூன்று ‘திசுக்களாலாவது' துடைத்து எறிந்து, அந்தக்காகத்தையும் நாலு ‘கெட்ட' ஆங்கில வார்த்தைகளால் திட்டித் தீர்த்திருந்தால் தான் அவனது ஆத்திரம் அடங்கியிருக்கும்! ஆனால் இப்போது, அவனது மனம் காகத்தின் பக்கமும் நியாயம் இருக்கின்றது என்ற விதத்தில் சிந்திக்கத் தொடங்கியது! நாலு பக்கமும் திரும்பிப் பார்த்துத் தன்னை ஒருவரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியவனுக்கு, அந்தப் பழத்தை வாயில் போட்டுச் சுவைக்கும் ஆசையும் வந்து விட்டது! அதனை வாயில் போட்டு உமிழ்ந்த போது, அந்த வேப்பங்கிளையில் ‘அன்ன ஊஞ்சல்' ஆடிய நினைவுகளும் பழைய நண்பர்களின் நினைவுகளும் வந்து போயின! எப்பவுமே ஒரு விதமான ‘அழுத்தநிலையில்' இருக்கும் அக்கரையின் மன நிலைக்கும், எந்த வித ‘அழுத்தமும்' இல்லாத இக்கரையின் மன நிலைக்கும் ஒரு நீண்ட இடைவெளி இருப்பது இப்போது தான் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது!
ஒரு ஆசிரியக் குடும்பமாக இருந்த அவனது பெற்றோரினால், அவனையும், அவனது சகோதரர்களையும், எவ்வாறு அவர்களது சம்பளத்தில் வளர்த்தெடுக்க முடிந்தது மட்டுமன்றி, படிப்பித்துக் கரையேற்றவும் முடிந்தது என்பது இன்னும் கூட அவனுக்குப் புரியாத புதிராகத் தான் இருந்தது! அது மட்டுமன்றி, உறவுகள், சொந்தங்கள் என்று ஒருவருடனும், பிரச்சனைகள் இல்லாமல் அவர்களால் எவ்வாறு வாழ முடிந்தது என்பதும் கூட அவனுக்கு இன்னும் விளங்கின பாடாயில்லை ! என்ன காரணமாக இருக்கலாம் எனக் காரணங்களைத் தேடியபோது, அவர்களிடம் ‘பகட்டு' என்பது இருக்கவில்லை என்பதும், ஏதாவது ஒரு அவசியமில்லாத தேவை வரும்போது, ‘அடுத்த சம்பளம்' வரட்டும் என, இலகுவாக அவர்களது தேவைகளைத் தள்ளி வைக்கும் மனப்பாங்கும் தான் காரணமாக இருக்கலாம் என்றும் நினைத்துக்கொண்டான்! ஒரு வேளை, அடுத்த சம்பளத்தில் மட்டுமல்ல, அதற்கடுத்தடுத்த சம்பளங்களிலும் வேறு தேவைகள் வரும்போது, இன்னொரு சம்பளத்துக்கு அந்தத் தேவையைத் தள்ளிப்போடுவது அவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கவில்லை! மற்றது, அவர்களிடமிருந்த, சந்தேகத்துக்கிடமில்லாத ‘தெய்வ நம்பிக்கை' யும் ஒரு காரணமாக இருக்கலாம்!
என்ன வாத்தியார், பொம்பிளைப் பிள்ளையள் எல்லாம் வளர்ந்து கொண்டு வருகுதுகள், ஏதாவது திட்டமேதும் இருக்கா எண்டு யாராவது சீண்டினால், ‘படைத்தவன் படியளப்பான்' என்ற படி கதையை முடிக்க அவர்களால் முடிந்திருக்கிறது! என்ன, இந்த மனுசனுக்குப் புத்தி, கித்தி ஏதும் பிசகி விட்டதா எனத் தாயார் சொல்லும்போது, சந்திரனும் அப்படித்தான் யோசித்திருக்கிறான்! ஆனால், இறுதியில் ஏதோ ஒரு விதத்தில் படைத்தவன் படியால் அல்ல, சாக்கு மூட்டையாலேயே அளந்தது வேற கதை!
ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo
அவனது ஆரம்ப கால வாழ்க்கையை திரும்ப நினைத்துப்பார்க்கும் போது அவனுக்கே வெட்கமாக இருந்தது! எவ்வளவு ‘சின்னப்பிள்ளைத் தனமாக' அவனும் உருத்திரனும் நடந்திருக்கின்றார்கள் என நினைக்கச் சிரிப்புத் தான் வந்தது! தன்னை மறந்து அவன் வாய் விட்டுச்சிரிக்கவும், தூரத்தில் படுத்திருந்த நாய், தன்னை யாரோ மல்லுக்குக் கூப்பிடுகின்றார்கள் என நினைத்து, உடலைச் சிலிர்த்தது! இங்கிலாத்துக்குப் போக வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டதே, அவனது நண்பன் உருத்திரனால் தான்! உருத்திரனது தமையன், ஏற்கெனவே இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தான்! அவன் அனுப்புகின்ற ‘பிறை நைலோன்' சேட்டுக்களை இவன் கல்லூரிக்குப் போட்டுக்கொண்டு வந்து காட்டுகின்ற எடுப்புக்களும், அவனது தமையன் ஊருக்கு வரும்போது, அவருக்கு நடக்கின்ற அரச மரியாதைகளும், அவனது தமையனது வாயிலிருந்து வழுக்கி விழுகின்ற ஒரு விதமான ஆங்கிலமும் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும்!
சரி, கதையை வளத்திக்கொண்டு போகாமல், சந்திரனும் உருத்திரனும் லண்டனுக்கு வந்து சேர்ந்து, இருவரும் ஒரு தெரிந்த நண்பரின் வீட்டில்,ஒரு அறையை வாடகைக்கு எடுத்துப் படிக்கத் தொடங்கினார்கள்! நண்பரும், தன்னிடமுள்ள ‘ மைக்கிரோ வேவை' இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்! அது என்னவோ ஒரு குமர்ப்பிள்ளை மாதிரியும், நாங்கள் தேவையில்லாமல் அதற்குக் கிட்டப்போகக் கூடாது எண்ட மாதிரியும் சொல்லியிருந்தார்! அதே நேரம், முன் பின் பழக்கமில்லாத லண்டன் குளிர் அவர்களை ஒரு பக்கம் வாட்டியெடுத்தது! நண்பர் வீட்டில், ‘சென்ட்ரல் ஹீற்றிங்’ இருந்தாலும் இவர்களிருந்த அறையான் மட்டும் கொஞ்ச நேரத்திலை தானாய் நிண்டு போயிரும்! சந்திரனும், உருத்திரனும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்த படி ஒரே கட்டிலில் படுப்பதால் கொஞ்சமாவது அந்தக்குளிரிலிருந்து தப்பிப்பிழைக்கக் கூடியதாயிருந்தது! இருவருக்கும், ஊரில் பல ‘பொறுப்புக்கள்' இருந்ததாலும், ‘வீட்டுக் கந்தோர்’ விசயத்தையும் கவனமாகக் கையாள வேண்டிய தேவை இருந்ததாலும், இருவருக்கும் கையில் ‘ காசு' மிஞ்சுவதில்லை! உருத்திரனின் அண்ணன்காரனின் நிலையும் இவர்களைப் போலத் தான் இருந்தது, அங்கு வந்த பின்னர் தான் புரிந்தது!
கொஞ்சம் தூரத்திலை போய் வேலை செய்தால், கொஞ்சம் உழைக்கலாம் என எண்ணிய உருத்திரன் மச்சான் ஒரு கார் வாங்கினால் என்னடா எண்டு சந்திரனுக்கு ஆசையை ஊட்டினான்! ஆனால் இருவருக்கும் கார் ஓடத் தெரியாது என்பது அப்போது பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை! இரண்டு பேரிட்டையும், இருந்த காசெல்லாத்தையும் சேர்த்து ஒரு ‘டற்சன் செர்ரி' ஒண்டும் வாங்கின பிறகு, உருத்திரனின் அண்ணனின், ‘பிறந்த தினத்தை’, மனப்பாடமாக்கி வைத்து இருவரும் ஓடக்கூடியதாக இருந்தது! கொஞ்சக்காலம் ஓடின பிறகு, பின்னால வாற, கோண் சத்தங்கள், நீட்டப்படுகின்ற நடுவிரல்கள் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாய்க் குறைஞ்சு போக, ஒரு மாதிரி இருவரும் சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எடுத்தாச்சு! அந்தக் கார் ஒரு ராசியான கார் தான்! போனட்டைத் திறந்து பார்த்தால் உள்ளுக்குள்ள கனக்க ஒண்டும் இருக்காது! அதுக்கு எண்ணெய், தண்ணி பார்க்கிறதெல்லாம் உருத்திரனும், சந்திரனும் தான்!
ஒரு நாள், உருத்திரன் ஒரு சேர்விஸ் ஸ்ரேசனில வேலை செய்யிற நேரம், விடியக்காலமை ஆரோ ஒருத்தன் தன்னுடைய புதிய ஹொண்டா கார் ஒண்டைக் கொண்டுவந்து கழுவியிருக்கிறான்! அப்போது, அவன் போனட்டையும் திறந்து, அதுக்குள்ளையும் ஹோஸ் பைப்பால, தண்ணியை அடிச்சுக் கழுவியிருக்கிறான்! அதைப்பாத்த உருத்திரனுக்குப் பொறுக்க முடியவில்லை! வேலை முடியத் தன்ர காரையும் அதே மாதிரிக் கழுவ, மிச்சம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்!
இன்னொரு முறை, வீட்டிலிருக்கும் போது, முன்வீட்டு கிழவியொண்டு,தன்ர மகனோடு சேர்த்து ஒரு பெரிய தொலைக்காட்சிப் பெட்டியொன்றைக் கொண்டு வந்து வெளியில வைத்து விட்டுச் செல்வதை இரண்டு பேரும் அவதானித்தார்கள். அதை ஆரெண்டாலும் எடுக்கலாம் என்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை! அந்தக் காலத்திலை ‘கலர் டிவி' என்பது பெரிய நினைக்கேலாத சாமான்! ஊரிலையே இரண்டு பேரும், சுப்பிரமணியம் பூங்காவுக்குப் போய், தேரில சாமி இருக்கிற மாதிரி ஒரு உயரமான இடத்தில இருக்கிற டிவி யைத் தான் பார்த்திருக்கிறார்கள். அதில மேலிருந்து கீழ் நோக்கியோ, அல்லது கீழிருந்து மேல் நோக்கியோ கோடுகள் ஓடினது மட்டும் இன்னும் நினைவில இருக்குது! நல்ல இருட்டினாப்பிறகு, ஒரு மாதிரி அந்த டிவியைக் கொண்டு வந்து வீட்டில வைச்சாச்சு! அதில, ஜைரோ போஸ்ட் எண்டு ஒரு தபால் வந்கியின்ர விளம்பரம் ஒன்று போகும்! அப்போது ஒரு சிங்கம் ஒன்று மிகவும் வேகமாக ஓடிவரும்! எங்களது டிவியில் அந்தச் சிங்கத்துக்குப் பதிலாக ஒரு பூனைக்குட்டி ஒன்று 'கர்ச்சித்தபடி' ஓடிவரும்! கொஞ்ச நாளையில, இருவருக்கும் அது பூனைக்குட்டி தானோ என்ற சந்தேகமும் வராமலில்லை!! எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்த ஒரு நாளில், வீட்டுக்காரனின் பேரில் ஒரு கடிதம் வந்தது! அதில் அந்த வீட்டில் இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கின்றன என்றும் அதில் ஒன்றுக்கு மட்டும் ‘ லைசன்ஸ்' இருக்கெண்டும் மற்றதுக்குப் பணம் கட்டச் சொல்லியும் அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது! எவ்வளவு பணம் கட்ட வேண்டுமெனக் கேட்ட இருவருக்கும், தொகையைக் கேட்டதும் தலை சுற்றத் தொடங்கி விட்டது! வீட்டுக்காரர் தான் போட்டுக்கொடுத்திருப்பார் என்று இருவரும் நினைத்துக் கொண்டு, ஒருவருமில்லாத நேரம் இருவருமே அதைத் தூக்கிக் கொண்டு போய் முந்தியிருந்த இடத்திலேயே வைத்து விட்டார்கள்!
இதே போலவே உருத்திரனுக்கு இன்னுமொரு ‘ஐடியா’ வந்தது! இந்த நேரத்தில் இருவருமே ஒரு இரண்டாம் மாடியிலுள்ள ஒரு சின்ன ‘பிளாற்றுக்கு' மாறியிருந்தார்கள்! ஒரு நாள், வேலை முடிந்து வரும்போது, ஒரு பிறீசர் ஒன்று வீதிக்கரையோரத்தில் கேட்பாரற்றுக் குந்திக்கொண்டிருந்தது! முந்திய டிவி அனுபவம் இருந்த படியால், அதை ஒரு மாதிரிக் காவிக்கொண்டு வந்தால், ஒவ்வொரு கிழமையும் மீன் கடைக்குப் போகத் தேவையில்லை என்ற வழியில் சிந்தித்தான்! ஏனெனில், அவர்களுக்குப் பிடித்த ‘ டொக்ரர் பிஷ்' (ஒட்டி அல்லது ஓரா) தனிய ‘பில்லிங்ஸ் கேற்’ சந்தையில மட்டும் தான் விலைப்படும்! ஆரோ ஒரு வெள்ளைக்காரன் ஒட்டி மீன் முள்ளுக்குத்தின கடுப்பில அந்தப் பேரை வைச்சிருக்க வேணும்! அந்த ‘பிரீசரை’ ஒரு மாதிரி இழுத்துக்கொண்டு வந்து, ஒரு ‘கிறேன்' பிடிச்சு ஜன்னலுக்குள்ளால எத்தி, வீட்டை கொண்டு வந்தாச்சு! , இரண்டு பேரும் ஒரு மாதிரி, ஆறுதல் மூச்சு விட்ட நேரம்! நெடுக மீன் சாப்பிடற படியால், இரண்டு பேருக்குமே ‘ஊரில' இருக்கிற மாதிரி ஒரு உணர்வு! வாற போற ஆக்களும், தங்கட பங்குக்குக் 'கன காசு வந்திருக்குமே' எண்டு சொல்ல இரண்டு பேருக்கும் நல்ல புழுகம்! எல்லாமே, நல்லாய்ப் போய்க்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள், அவர்களது மின் கட்டண பில் வந்தது! வழமையா வாறதிலும் பார்க்க மூண்டு மடங்கு! தெரிஞ்ச ஆங்கிலத்தை வைச்சு, மின் சப்பிளை பண்ணுற கொம்பனியோட ஒரே சண்டை! அவனுக்கும் ஒண்டும் வடிவா விளங்கையில்லைப் போல! சரி, வாற முறை பார்க்கலாம் என்று சொல்லிப்போட்டு விட்டிட்டான்! இரண்டாவது ‘பில்' முந்தினதை விட இரண்டு மடங்காக இருந்தது! இந்த முறை ‘சண்டை' உச்சத்தில போக, மின் சப்பிளை பண்ணிற கொம்பனி ஆக்கள் நேரிலேயே வந்திட்டாங்கள்! இங்கை ஏதாவது 'புதிசா' வாங்கினீங்களோ எண்டு அவன் கேட்க, இவர்கள் இரண்டு பேரும் தலைகளை ஒரே நேரத்தில், இடமிருந்து வலமாக ஆட்டத் தற்செயலாக அவர்களது கண்கள் 'பிறீசரைப் பார்த்ததும், அவர்கள் கண்களில் அலாதியான ஒரு மலர்ச்சி ஏற்பட்டது! 'யூரேக்கா' ! பிறகென்ன, இரண்டு பெரும் பிறீ சருக்குப் பிரியாவிடை கொடுக்க வேண்டி வந்திட்டுது!
|
சிறுகதைகள் >