காமாட்சி

posted May 26, 2013, 9:44 PM by வாடா மல்லிகை   [ updated May 26, 2013, 9:44 PM ]


 'லங்கா சாறி' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு நீலப்புடவை !. நெத்தியில் சின்னதாக ஒரு திருநீற்றுக் குறி ! தேங்காய் எண்ணெய் தடவி, எவ்வளவுக்குத் தலைமயிரை இழுக்கமுடியுமோ, அவ்வளவுக்கு இழுத்து முடிக்கப்பட்டதால்,பளிச்சென்று தெரியும் நெற்றி ! இவ்வளவு தான், காமாட்சியின் வெளித்தோற்றம்! அவளது முகத்தில், ஒரு சோகம் கலந்த ஏக்கம், எப்போதும் இழையோடிய படியிருக்கும். காமாட்சிக்கு ஒரு பத்துவயது மகள். மகளுக்குப் பெயர் கமலம். இவ்வளவும் தான் அவளது குடும்பம். அவளது கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும்.

 

காலையில் தோட்டக்காரர் வேலைக்குப் போகும் போது, காமாட்சியையும் அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள், வறண்டு, காய்ந்து போன, எரு  வரட்டிகளைத் தடியால் அடித்து நொருக்கித் தூளாக்குவது, மண்வெட்டிகளால் வெட்டப்பட்ட ‘அதர்களுக்கிடையில்' காவோலை, அல்லது பூவரசம் குழை போனறவற்றை நிரப்புவது, சிறு நாற்றுகளுக்கு, இடையில் முளைக்கும்  சிறு களைகளை, அகற்றுவது போன்ற வேலைகள், அவளுக்குக் கொடுக்கப்படும். பின்னர், பாடசாலையிலிருந்து மகள் திரும்பி வரமுன்பு, வீட்டுக்கு அவசரமாக வந்து விடுவாள். விடுமுறைக்காலங்களில், பொழுது போகாமல், வீட்டின் ‘போர்டிக்கோவில்' குந்தியிருந்து. புல்லு வளர்வதை அவதானித்துக் கொண்டிருக்கும் வேளைகளில்,அவள் நடந்து சென்றால், அவளைப் பற்றிய சிந்தனைகள் மனதில் உதிப்பதுண்டு. அவளும் தனக்கேயுரித்தான, ஒரு சிரிப்பை உதிர்த்த வண்ணம் நடந்து கொண்டேயிருப்பாள்! சில வேளைகளில், எப்படி, வாத்தியார்த் தம்பி? என்று ஒரு விடையொன்றை எதிர்பார்க்காத கேள்வியையும் கேட்டுவிட்டுச் செல்வாள். வாத்தியாரின் மகன், என்பதால் தான் அந்த' வாத்தியார் தம்பி' என்ற பெயர் எனக்கு வந்தது என நினைக்கிறேன்!

 

ஒரு சனிக்கிழமை மத்தியானம், தோட்டத்திலிருந்த வந்த காமாட்சி, வாத்தியார்த் தம்பி எனக்கொரு கடிதம், எழுதித்தர ஏலுமே? என்று கேட்டாள்.நானும் சரியெண்டு சொல்ல, தம்பியிட்ட இல்லாத பேப்பரா என்று சொலிச் சிரித்தாள். நானும், ஏனக்கா, உங்கட மகள் எழுதித்தர மாட்டாளா என்று கேட்டு வைக்க, அவளும் எல்லா விசயத்தையும் பிள்ளையளிட்டைச் சொல்ல ஏலாது தானே தம்பி என்ற போது, கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்து கொண்டேன்.கடிதம் பின்வருமாறு தொடங்கியது..

 

உ. சிவமயம்.

 

என்றும் என்மீது பட்சமுள்ள கணவனுக்கு,

 

இங்கு சுகம், உங்கள் சுகத்துக்கும் அந்தக் கலட்டிப்பிள்ளையார் அருள் புரிவானாக!.  

புனிதம் அக்காவின்ர மகள் போனமாதம் பெரிசாகி விட்டாள். பெரிசாக் கொண்டாடப் போகினம் போல கிடக்கு. ஏதாவது வாங்கிக் குடுக்க வேணும். நீங்கள் போன முறை அனுப்பின மணியோடர் கிடைத்தது. அதை மாத்திப் கமலத்துக்குக் கொஞ்சம் உடுப்பும், புத்தகங்களும் வாங்கினனான். பள்ளிக்குடம் போற பிள்ளை தானே. பழைய உடுப்போடை போனா, நமக்குத் தானே, சங்கேனம். நீங்களும், ஊருக்கு வாறதாய்க் காணேல்லை. (இதைச் சொல்லும்போது, தனது மூக்கை உறிஞ்சிக்கொண்டு, முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.) கனகம்மாவின்ர மூத்த மகள், ஆரோடையோ ஓடிப்போட்டாள் எண்டு ஊரில கதை அடி படுகுது. (இதைச் சொல்லிமுடிய, அவளே ’தம்பி, இந்தப் பரிசுகேட்டை  எழுதவேணாம் எண்டு வெட்டச் சொன்னள் .) . கடைசியா மூன்று, நாலு பேப்பர்கள் கிழிக்கப்பட்ட பின்பு, ஒரு மாதிரிக் கடிதம் முடிந்தது. விலாசம், கொழும்பில் களனிப் பக்கமாக இருந்த்து. இந்தக் கடிதம் எழுதல்களில் இருந்து, அவளது வாழ்வைப் பற்றியோ, கணவனைப்பற்றியோ பெரிதாக ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை.

 

இண்டைக்கு, அமாவாசை நுவைப்பு. பந்தத்துக்குப் போகப்போறன். நீயும் வாறதெண்டால், அம்மாட்டைச் சொல்லிப்போட்டு வாவன் என்ற படி, எனது அம்மாவின் தகப்பனார் ஆசை காட்டினார். சரியெண்டு சொல்லிப்போட்டு, பின்னேரம் போல கடலுக்கு வெளிக்கிட்டுப் போய்க் கடலுக்கிள்ளையும் இறங்கியாச்சு. அண்டைக்கெண்டு, கடுக்காய் நண்டுகளும், பெரிய கலவாய் மீனும் சந்திக்க, அப்புவின் முகத்தில வலு சந்தோசம். நாளைக்கு நல்ல கூழ் காச்சுவம், தம்பியையும் கூட்டிக்கொண்டு வா என்ற படி கரையை நோக்கி வந்தோம். அப்போது ஒரு மெல்லிய உருவம், தலையில் தலைப்பாகையைக் கட்டியபடி, பந்தத்தைப் பிடித்த படி, நடந்து கொண்டிருந்தது. என்னவோ, கொஞ்சம் ‘அமைப்பு' வித்தியாசமாக இருக்கவே, அப்புவைத் திரும்பிப் பார்த்தேன். அவரும், புரிந்து கொண்டவராக, அது நம்மட ‘காமாட்சி' என்ற படி, நடந்து கொண்டிருந்தார். அவரது முகத்தில், கவலையின் சுவடுகள் தோன்றி மறைந்தன. ஒரு பெருமூச்சும் வந்து போனதையும் அவதானித்தேன்., இந்த மர்மத்துக்கு, நாளைக்கு விடை காண வேண்டும், என்று மனதில், நினைத்த படி, அவருடன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்!

 

அடுத்தநாள், அப்பு வீட்டை போய்க் கூழ் காய்ச்சி முடியும்வரைக்கும், அப்புவும் காமாட்சியின் கதையைச் சொல்லவில்லை, நானும், சரியான நேரம் வரட்டும் என்று தருணம் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர், அப்புவிடம் மெதுவாக, அப்பு, ஏனப்பு, காமாட்சியின்ரை மனிசன் ஒரு நாளும் ஊருக்கு வாறதில்லை? கொழும்பிலை இருக்கிற ஆக்களெல்லாம் கோவில் திருவிழாக்களுக்கு வந்து போகினம் தானே? என்று கேட்க, அப்புவும்  ஒரு பெருமூச்சொன்றை எறிந்தவாறே, அவருக்குக் கொழும்பிலை வேற குடும்பம் இருக்கு என்று கூறியபடி, வாய்க்குள் கிடந்த மீன்  முள்ளைப் ,பெரிய சத்தத்துடன் காறித் துப்பினார். காமாட்சியின் மாமியாருக்குத் தனது மகன், வேற யாரோ ஒரு சிங்களப் பெண்ணுடன் குடும்பம் நடத்துவது முதலே தெரியுமாம். ஆனால், ஊரிலையிருக்கிற காணியும், வீடும், வேற ஆருக்கோ போறதை  மனுசிக்குப்  பொறுக்க ஏலாமல் போச்சுதாம். அது தான், மனுசி காமாட்சியைப் பிடிச்சு, அந்தப் பாவிக்குக் கட்டி வச்சுப் போட்டுது.  காமாட்சியும் கொழும்பு வரையும் போய், அழுது பாத்திட்டு, இப்ப தனிய வந்து குந்திக்கொண்டுருக்குது. அவனும், எப்பவாவது அஞ்சோ, பத்தோ, அனுப்பிறதெண்டு, காமாட்சி சொல்லுது. ஆனால், எனக்கெண்டால் அதில நம்பிக்கையில்லை. அவன் காசு அனுப்பிறதெண்டால், காமாட்சி , ஏன் தலைப்பாயைக் கட்டிக்கொண்டு, கடலுக்கை நிக்குது என்று சொல்லி முடித்தார்!!

 

அந்தக் கதையைக் கேட்டபிறகு எனக்கு காமாட்சியை நினைக்கப் பெரிய 'பாவமாக' இருந்தது. இப்படி எத்தனை பாவங்களைக் கண்டும் காணாதது மாதிரி நடந்து கொண்டிருக்கிறோம் என 'உள்மனது'  எள்ளி நகையாடினாலும், காமாட்சியின் மகளுக்காவது ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.  எப்பவாவது சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில், பாடம் சொல்லிக் கொடுப்பது, பள்ளிக்கூடப் புத்தகங்கள், கொப்பிகள் வாங்கிக் கொடுப்பது என்ற அளவிலேயே, அந்த உதவிகள் இருந்தன. பண உதவிகள் செய்ய நினைத்த போதும், காமாட்சியின் 'கெளரவம்' அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

 

சில நாட்களில், நானும் புலம் பெயர்ந்து விடக், காமாட்சியும் மெல்ல மெல்ல, எனது நினைவுகளில் இருந்து விலகிப் போய்க் கொண்டிருந்தாள். இரண்டு வருடங்களின் பின்பு, விடுமுறையில் ஊருக்குப் போனபோது, எனது உறவுகளுக்கெனச், சில பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொண்டேன். அப்போது, இரண்டு பேர் நினைவுக்கு வந்தார்கள். முதலாவதாக நினைவுக்கு வந்தவள் காமாட்சி. அடுத்ததாக, நான் வழக்கமாக மீன் வாங்கும், ஒரு நல்ல வயதான முதியவர். அடிக்கடி, இந்தக் குளிர் தன்னை வருத்துவதாக, தனக்குத் தானே சொல்லிக்கொண்டிருப்பார். எனவே காமாட்சிக்கு, ஒரு நல்ல சேலையும், அந்த வயதானவருக்கு ஒரு 'சுவெட்டரும்' வாங்கிக் கொண்டேன்!

 

ஊரில் வழக்கம் போலக், காமாட்சி, வாத்தியார்த் தம்பி, எப்ப வந்தனீங்கள்? என்று விசாரித்தாள். எங்களையெல்லாம், நினைவு வைச்சிருக்கிறீங்கள் தானே என்று கேட்டபடி இருக்க, நானும் வீட்டுக்குள்ளே போய் அந்தச் சேலைப் பாசலை, அவளிடம் கொடுத்தேன். அவள் கண்கள் ஆச்சரியத்தால் விரியத், தம்பி, எங்களுக்கு, ஒருத்தரும் இப்படி வாங்கித் தந்தது கிடையாதப்பு, என்று அழுதாள். அழுது முடிந்த பின்னர்,நான் இதைக்கட்டிக் கொண்டு, தோட்டத்துக்கா போறது என்று ஒரு விதமான விரக்தியுடன் சொல்லிச் சிரித்தாள். 

 

அதன் பின்னர் நான் காமாட்சியை, மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால், அம்மா எழுதிய கடிதமொன்றில், அங்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி எழுதியிருந்தார். காமாட்சியின் மகள் கமலம், பெரியபிள்ளை ஆகிவிட்டதால், அதை ஒரு கொண்டாட்டமாகக் கொண்டாடக் காமாட்சி விரும்பினாளாம். தனக்குக் கிடைக்காமல் போன வாழ்வைத் தனது மகள் மூலம் பார்க்க ஆசைப் பட்டாளாம். அந்த விழாவின் போது.காமாட்சியின் கணவரும் கொழும்பிலிருந்து வந்திருந்தாராம். கமலம், அவருடன் பேசவே இல்லையாம். அப்போது காமாட்சியும், 'அப்பா' வாங்கிக் கொண்டு வந்த சேலையைத் தான் உடுத்திக்கொண்டு வரவேண்டும் என்று கமலத்தைக் கட்டாயப் படுத்தவும், கமலம் மறுத்து விட்டாளாம். அது தான், நம்ம 'பண்பாடு' என்றும் காமாட்சி மகளுக்குச் சொன்னபோதும், கமலம், அந்த 'அப்பா' வாங்கிக் கொண்ட சேலையை உடுக்கப் பிடிவாதமாக மறுத்து விட்டாளாம். தனக்குக் கொண்டாட்டமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று ஒரு மூலையில் குந்திவிட்டாளாம்.

 

அப்ப, என்னத்தைக் கட்டிக் கொண்டு வரப்போறாய்? என்று காமாட்சி கேட்க, வாத்தியார் மாமா, வாங்கிக் கொண்டுவந்த சேலையைத் தான், என்று கூறி, பிடிவாதமாக அதையே கட்டிக் கொண்டாளாம்!

 

கடிதத்தைப் படித்ததும், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 'கமலம்'  நிச்சயமாக, இன்னொரு காமாட்சியாக மாறமாட்டாள் என நினைத்துக் கொண்டேன்!


Comments