ஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை !

posted Apr 26, 2014, 6:21 PM by வாடா மல்லிகை   [ updated Apr 28, 2014, 9:15 PM ]

அன்றைய காலைப் பொழுதின் விடியலிலேயே , பாலைவனமொன்றின் சகல குணாதிசயங்களும் கலந்திருந்தன. கண்களைத் திறந்து பார்க்கக் கூட இயலாத அளவுக்கு, அதன் பிரகாசம் இருந்தது. நீண்ட ஒரு கருநிற மலைப்பாம்பொன்றின் வளைவுகளுடன், அந்த நெடுஞ்சாலை நீண்டு கிடந்தது. முதல் நாள் இரவின் ‘கடுங்குளிர்', மெல்லிய நீர்ப்படலமொன்றை, அந்த வீதியின் மீது தடவியிருந்தது. வரப்போகும் ‘வெயிலின்' கடுமையுணர்ந்த கங்காருக்கள், வீதியின் இரு பக்கங்களிலும் பரந்திருந்த, மஞ்சள் நிறமான கோரைப்புற்களின் மறைவுகளிலிருந்து, வீதியில் படிந்திருந்த நீரைத் தங்கள் நாக்குகளினால், மெல்ல மெல்ல நக்கி எடுப்பதற்காக வந்து கொண்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால், அன்றைய பொழுது தாகத்துடனேயே கழிந்து விடக்கூடும். முந்திய இரவுகளில், அந்த நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, வாகனங்களினால் கொல்லப்பட்டு வீதியோரங்களில் கிடந்த தங்கள் உறவுகளுக்காக, ஒரு நிமிட அஞ்சலி செலுத்தவும் நேரமில்லாத ‘அவசரம்' அவற்றுக்கு இருந்தது! அந்த இறந்து போன, கங்காருகளின் ‘கருப்பைப் பைகளில்’ சில ‘குட்டிகள்' இன்னும் குற்றுயிருடன் இருக்கவும் கூடும்!   

 

அந்தப் பாதையில் தான் ‘மாயா' (Maya) தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தாள். ‘கார்' என்ற வகையினுள் அதனை ‘அடக்கி விட' முடியாது. இப்பகுதியில் 'கார்' என்று அழைக்கப்படுவது நான்கு சில்லுகளும், ஆகக்குறைந்தது இரண்டு கதவுகளையுமாவது கொண்ட, வீதியில் ஓடக்கூடிய ஒரு 'வாகனம்' என்பது தான் அதிகமாகப் பொருந்தும் .பொதுவாக ஒரு தேசத்தின் வீதிக் கட்டுப்பாடுகளையும், சட்டங்களையும் நடை முறைப்படுத்துபவர்கள் போக விரும்பாத பகுதி அது. வெளியே தெரியும் ஒய்யாரக் கொண்டைகளையும், தாழம்பூ வாசனைகளையும் தாண்டி, உள்ளே இருக்கின்ற ஈர்களையும், பேன்களையும் பற்றி எவரும் கவைலப்படுவதில்லை. அதனை ஆங்கிலத்தில் ‘காம்ப்' என்னும் நவீன வார்த்தைகளுக்குள் அடக்கி விட்டு, வாரா வாரம் அவர்களுக்கான ‘ கொடுப்பனவைக்' கொடுத்துவிடுவதுடன், தனது ‘கடமை' முடிந்து விடுவதாகத் தான் சராசரி, அவுஸ்திரேலியக் குடிமகன் நினைத்துக் கொள்வதுண்டு. தற்செயலாகத் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, அந்தப் பகுதிக்குள் போக நேரிட்டால், கறள் கட்டிய தகரக்கூரைகளும், உடைந்து போன கண்ணாடிகளைக் கொண்ட ‘ஜன்னல்களும்', வீதியெங்கும் சிதறிக்கிடக்கும் உடைந்து போன, பியர்ப் போத்தல்களும், மூக்குச் சிந்திய படியே விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களும், கட்டாக்காலி நாய்களுடன் கட்டிப்பிடித்தபடி படுத்திருக்கும் முதியவர்களும் அவர்களது கண்களையும், மனச்சாட்சியையும் உறுத்துவதுண்டு. எனினும், எப்படி முயன்றாலும் இவர்களை மாற்றமுடியாது என்று தங்கள் மனச்சாட்சிகளை, அவர்களே சாந்தப்படுத்தி விடுவதுண்டு!

 

மாயா தனது காரைப் பிரதான வீதியிலிருந்து, ‘உலுறு' நோக்கிச் செல்லும், சிறு செம்மண் பாதையொன்றில் செலுத்திக்கொண்டிருந்தாள். வெயில் வருவதற்கு முன்பு, அவள் ‘உலுறுவை' அடைந்து விடவேண்டும் என்பது தான் அவளது திட்டமாக இருந்தது. மத்திய வயதில் பயணித்துக் கொண்டிருக்கும் மாயா, இப்போதெல்லாம் ‘உலுறுவுக்கு' அடிக்கடி வர விரும்புகின்றாள். ‘உலுறு' என்பது வேறு ஒன்றுமல்ல. அவுஸ்திரேலியாவின் நடுவே பரந்து கிடக்கும் சிவந்த மண்ணின் பரப்பில், விரிந்து கிடக்கும் ஒரு பாரிய ‘பாறைத்தொடர்' தான்.

 

உலகத்திலேயே மிகவும் பெரிய ‘தனிக்கல்' இதுவென்று சொல்லப்படுகின்றது. வெளியே பல தலைகளைக் கொண்ட ‘ஒரு அரக்கன்' படுத்திருப்பது போலத் தோன்றினாலும், நிலத்தின் கீழேயே, இதன் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதி, தனிக்கல்லாகப் புதைந்து போய்க் கிடக்கின்றது என்று கூறுகிறார்கள். இதற்கு ‘வயிற் பெல்லாஸ்' (White Fellows) வைத்த பெயர் ‘ அயர்ஸ் றொக்' (Ayers Rock) எனினும், மாயாவுக்கு அந்தப் பெயரால், அதை அழைக்க ஏனோ விருப்பமில்லை. அவளைப் பொறுத்தவரையில், அந்த ‘கற்குன்றைப்' பற்றி ஏராளமான கதைகள் இருக்கின்றன. அவளது மூதாதைகளின் ‘கனவுக் காலங்களில்' (Dream Times), இதைப்பற்றிப் பலவிதமான ‘கர்ண பரம்பரைக் கதைகள்' உள்ளன. அநேகமானவை, மலைப்பாம்புக்கும், நச்சுப்பாம்புக்கும் நடந்த போராட்டத்தை நடுநிலைப் படுத்த, மற்றையவை அரணை, ஓணான், தீக்கோழி, கங்காரு, முதலை போன்றவற்றை முன்னிலைப்படுத்தி நிற்கின்றன.  எது எப்படி இருந்தாலும், இந்த கற் குன்றுக்கு' அண்மையில் வரும்போது, தனது மூதாதையரின் ‘ஆவிகள்' வந்து தன்னை, அரவணைப்பதாகவும், ஆறுதல் சொல்வதாகவும் அவள் உணர்கிறாள்.

 

அண்மையில் நடந்த ஒரு சம்பவமொன்று, அவளை இந்த இடத்திற்கு, இப்போதெல்லாம் அடிக்கடி அழைத்து வருகின்றது !

 

அவளது தாயாரான 'பின்டிக்கும்' (Bindi), யாரோ ஒரு ‘வயிற் பெல்லா' வுக்குமிடையில் ஏதோ ஒரு வகையில், ஒரு விதமான ‘தொடர்பு' ஏற்பட்டு விட்டது. அதற்குக் காதல் என்று பெயர் வைத்து அந்தப் புனிதமான வார்த்தையை மாசு படுத்த மாயா விரும்பவில்லை. பின்னர் அந்த ‘வயிற் பெல்லா' தனது பயணத்தைத் தொடர்ந்து சென்று விட,  அவர்களின் தொடர்பின் விளைவாக மாயாவின் அம்மா ‘பின்டி' (Bindi)  கர்ப்பமானாள். நல்ல வேளையாக, அவளுக்குப் பிறந்த குழந்தை, எந்த விதமான ‘வயிற் பெல்லா' வின் வெளிப்படையாகத் தெரியக்கூடிய எந்த அடையாளங்களும், குணாதிசயங்களும் கொண்டு பிறக்கவில்லை. அதனால் ‘மாயாவை' அவளது ‘இனத்தவர்' ஒதுக்கியோ, விலக்கியோ வைக்கவில்லை. அதனால் அவளும், இன்னுமொரு 'பூர்வீகக் குடி மகளாக' அவளது தாய் வழிப் பாட்டியால், அந்தக் 'காம்புக்குள்ளேயே' வளர்க்க்கப்பட்டாள். ஒருவேளை மாயாவை, அவளது அம்மம்மா ஒருவருக்கும் தெரியாமல் மறைத்தும் வைத்திருந்திருக்கலாம். ஆனால் மாயாவின் அம்மாவை, அவளது இனத்தவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படியான கலப்புத் திருமணங்களில் ஈடுபட்டவர்களை, பூர்வீகக் குடிகள் என்றைக்குமே, தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வதில்லை. ஈவிரக்கம் இல்லாது, பரந்த வெளிகளில் அவர்கள் துரத்திவிடப்படுவார்கள். இல்லாவிட்டால், உறவினர்களால் தயவு தாட்சண்யம் இன்றிக் கொல்லப்படுவார்கள். இப்படியான உறவுகளின் விளைவாகப் பிறக்கும் குழந்தைகள், எப்போதும் அவர்களது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதனால் பின்டி  ‘களவெடுக்கப்பட்ட தலைமுறையினரில் ' (Stolen Generation) ஒருவராக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதை விடவும், இவ்வாறு துரத்தப்பட்டவர்கள், மாட்டுமந்தைகளை வளர்க்கும் ' மிகப்பெரிய நிலப்பரப்பிலான மந்தை பராமரிப்பு நிலையங்கள்"  (Cattle Stations) போன்றவற்றைச் சுற்றி அலைவது வழக்கமாகும். இத்தகைய நிலையங்கள், பெரும்பாலும் வெள்ளையர்களாலேயே நடத்தப்பட்டதுடன், இவ்வாறு 'சமூகத்தால் விலக்கப்பட்ட பெண்களுக்கு,  நல்ல 'வரவேற்பும்' இருந்தது. ஏற்கெனவே மனமுடைந்து போயிருந்த பின்டிக்கு, மரத்தால் விழுந்தவளை மாடு  ஏறி மிதிப்பது போன்றதொரு வாழ்வில் வெறுப்பே ஏற்பட்டது. அத்துடன், தனது மகளை' ஒருநாளாவது திரும்பவும் பார்க்கவேண்டும் என்ற ஒரு தாயின் சாதாரண 'எதிர்பார்ப்பும்' அவளுக்குத் தான் உயிரோடு வாழவேண்டும் எனும் உந்துதலை அளித்தது.

 

இதனால் மரணத்தைப் பின் தள்ள விரும்பிய அவள், அங்கிருந்து மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு கிறீஸ்தவ ‘திருச்சபைகளால் நடத்தப்படும் சீர்திருத்த விடுதியொன்றுக்குத் தானாகவே போக முன்வந்தாள். இப்படியான விடுதிகளுக்கு, பூர்வீகக் குடிகளிலிருந்து 'இளம் வயதினரும், குழந்தைகளும், அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பிடித்துச் செல்லப்படுவது வழக்கமாக இருந்தது. இப்படியானவர்களையே 'களவெடுக்கப்பட்ட தலைமுறை' (Stolen Generation) ஐச் சேர்ந்தவர்கள் என்று அழைப்பார்கள். அவள் அவ்வாறு கொண்டுபோகப்பட்டது கூட, அவளது பாட்டியார் சொல்லித் தான் மாயாவுக்கே தெரியும். தனது அம்மாவைப் பார்க்கவேண்டும் என்ற ‘தாபம்' மாயாவின் மனதில் அடிக்கடி தோன்றி மறைந்தாலும், அதனை வெளியே எவரிடமும் சொல்லும் ‘துணிவு' அவளுக்கு ஏற்படவே இல்லை!பரந்து கிடந்த அந்தச் சிவப்புக் கல் மலைக்குவியலின், வாய்ப்பக்கத்தை நோக்கித் தனது காரைச் செலுத்திய ‘ மாயா', அங்கு தனியாக நின்றிருந்த ஒரு ‘யூகலிப்டஸ்' மரத்தின் அருகே நிறுத்தினாள்! அந்த மரமும், அவளைப்போலவே பல நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பது போலவே அவளுக்குத் தெரிந்தது. ‘உலுறுவின்' மேலே சென்று, அதிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக, உல்லாசப்பயணிகள் சிலர் வரத் தொடங்கியிருந்தனர். ‘உலுறுவை' அவள் பார்க்கும் விதத்துக்கும், மற்றவர்கள் பார்க்கும் விதத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகத் தான் அவள் எண்ணினாள். எல்லாரும் ‘கயிலாயம்' போவதனால், நானும் போக வேண்டும் என்பது போலத் தான் அவர்களது வருகை இருக்கும்!

 

ஆனால், மாயா, அந்த மலையின் வெளி அழகை ரசிக்கவில்லை. அதன் பிரமாண்டத்தைத் தன்னுள் உள்வாங்கிக் கொள்கின்றாள். அகல விரிந்த இரவு வானத்தின் நட்சத்திரச் சிதறல்களிலும்,  அடர்ந்த காடுகளின் நடுவில் காணப்படும் ‘மயான அமைதியிலும் ' அவள் இதே ‘உணர்வை' அடைவதுண்டு. ஒரு வேளை, தனது மூதாதையர்களின் ‘ கனவுக்காலங்கள்' என்பது இதுவாகத் தான் இருக்கவேண்டும் என அவள் பலமுறை சிந்தித்ததும் உண்டு. எல்லோருக்கும் எதுவுமேயில்லாத பாலை நிலமாகத் தெரிவது, அவளுக்கு மட்டும் எல்லாமே நிறைந்த ஒரு ‘வளமான பூமியாகத்' தோன்றுகின்றது.தனது உடலும், பிரபஞ்சமும் ஒன்றோடு ஒன்று ‘பின்னிப் பிணைந்தது’  போன்ற ஒரு விதமான ‘உணர்வு' அவளுக்கு இங்கு வரும்போது ஏற்படும்.

 

நினைவுகளின் நகர்வுகளுக்குக் கடிவாளம் போட்டவள், உரத்த குரலில்’பின்டி' என்று கத்தினாள். அப்போது அந்த மலைப்பிளவும். உரத்த குரலில், திருப்பிக் கத்தியது. பின்னர் தனது கணவனின் பெயரைச் சொல்லிக் ‘குலன்' என்று கத்தவும், மலைப்பிளவும் உரத்த குரலில் மீண்டும் திரும்பக் கத்தியது.    

 

இந்த இடத்தில், மாயாவின் கணவன் ‘குலனைப்' பற்றிக் கொஞ்சம் சொல்வது பொருத்தமென நினைக்கிறேன்! அவுஸ்திரேலியாவின் கரையோரம் தவிர்ந்து, மத்திய பகுதிகளில் பொதுவாக 'பூர்வீகக் குடிகளே' அதிகமாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் அதிகம் இல்லை. அதனால், குலனும், ஒரு மந்தை நிலையத்தில் ‘மாடுகளை மேய்ப்பவனாக' வேலை செய்தான். பகல் முழுவதும் குதிரைகள் மீதிருந்தபடி, மாடுகளை வழிநடத்துவது தான் அவனது வேலையாக இருந்தது. 'டிங்கோ' (Dingo) என அழைக்கப்படும் காட்டு நாய்களிடமிருந்தும், மற்றும் திருடர்களிடமிருந்தும் ‘மந்தைகளைக் கவனமாகப்' பாது காப்பது தான் அவனது தொழிலாக இருந்தது. அத்துடன், பூர்வீகக் குடிகளுக்கே தனித்துவமான ‘ தடம் பார்த்துத் தேடுதல்' (Tracking Skills) ஐ உபயோகித்துத் தப்பியோடி மறைந்து வாழும், சிறைக்கைதிகள், தேடப்படும் குற்றவாளிகள், போன்றவர்களைத் தேடிப்பிடிக்க, போலீசார் அவனது உதவியை நாடுவதுமுண்டு.


அப்போதெல்லாம், பூர்வீகக் குடிகளுக்கு, மதுசாரம் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. ஆதலால், அவர்கள் ‘யாராவது ஒரு வெள்ளைக்காரனின் காலில் விழுந்து தான் ‘அதிக பணத்தைக் கொடுத்து' அவர்கள் மூலம் 'மதுபானங்களை' வாங்கியாக வேண்டும்! இப்படி ஒரு நாள், மதுவருந்தி விட்டு நடந்து வரும்போது, ‘கைது' செய்யப்பட்ட குலனுக்கு, இரண்டு வாரங்கள் தனிமைச் சிறைத்தண்டனை கிடைத்தது.  ஒரு திறந்த வெளியில், வாழ்நாள் முழுவதையும் செலவழித்த ஒருவன், தனிமைச் சிறையில் போடப்பட்டால், இரண்டு நாட்கள் கூட அவர்களில் சிலரால் உயிர் வாழ முடியாது. அவர்களது ‘குடும்பப்  பிணைப்புகள்' அவ்வளவு தூரம் இறுக்கமானவை! அத்துடன் , இயற்கையுடனான அவர்களது தொடுகையும் மிகவும் நெருக்கமானது. நீரிலிருந்து வெளியே, தூக்கிப்போடப்பட்ட ஒரு மீனின் நிலையில் தான், இவர்கள் சிறைகளில் இருப்பார்கள். சிறையில் போடப்பட்ட இரண்டாவது நாளே குலன், சிறைக்கூட்டினுள் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு விட்டான்.இப்போதெல்லாம், பூர்வீகக் குடிகளுக்கெனச் சிறைச்சாலைக்குள்ளேயே ‘ தனியான திறந்த சிறைகள்' அமைக்கப்பட்டுள்ளன!

 

அவளுக்கும், குலனுக்கும் இடையேயான காதலின் காரணமாகவே ‘மாயா' இப்போதெல்லாம் இங்கு வருகிறாள். அவளுக்குள்ளே, வெளியே சொல்ல இயலாத ஒரு ‘ரகசியம்' ஒன்று புதைந்து கிடக்கின்றது. அவளது, அம்மம்மாவுக்குக் கூடத் தெரியாத ‘இரகசியமாக' அவள் அதைத் தனக்குள் மிகவும் ஆழமாகப் புதைத்து வைத்திருக்கிறாள். குலனின் தற்கொலைக்குப் பின்னர் மாயா, அவளது அம்மாவுடன் வசிக்கவில்லை. இன்னுமொரு ‘காம்பில்' உள்ள சில நண்பிகளுடன் சேர்ந்து வசித்து வந்தாள். அதற்கான முக்கிய தேவையும் அவளுக்கிருந்தது. குலன் இறந்த சில வாரங்களிலேயே, அவனது  குழந்தை தனது வயிற்றில் வளர்வது மாயாவுக்குத் தெரியவந்தது.

 

பிறக்கப் போகும் குழந்தையைப்பற்றி, எல்லா அன்னையர்களும் சுமக்கின்ற கனவுகளையே மாயாவும் சுமந்தாள். அந்தக்குழந்தை அவளுக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்பட்டது போலவும் அவள் உணர்ந்தாள்.

 

வயிற்றில் நோவு, ஏற்பட்ட போது, தனியாகவே அந்த ‘பில்லா பொங்’ (Billabong) ஐ நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள். மாலை நேரமாகையால், உயர்ந்த மரக்கிளைகளைலிருந்து, கூக்கபரா (Kookaburra) பறவைகளின் ஒலி, அவளைப்பார்த்து, யாரோ எக்காளமிட்டுச் சிரிப்பது போல கேட்டது.’தென்றல்' அவர்களது வயிற்றைத் தடவிக் ‘கிச்சு கிச்சு' மூட்டுவதனால் தான், அவை அவ்வாறு சிரிப்பதாக அம்மம்மா இளமையில் கூறுவதுண்டு.

 

எவரது உதவியுமில்லாமலே, ஒரு அழகிய ஆண் குழந்தையொன்றை, அந்த சிறு குளக்கரையின் , உயர்ந்து வளர்ந்த புற்களின் நடுவில் பெற்றெடுத்தாள்.

ஓரளவுக்கு, அயர்ச்சி தெளிந்து மாயா விழித்துகொண்டபோது அந்தக்குழந்தையின் ‘முனகல் சத்தம்' அவளது காதில் கேட்டது. மெதுவாகக் கண்விழித்துக் குழந்தையைப் பார்த்தவளுக்குத் தனது கண்களையே நம்ப முடியவில்லை.  

 

மூக்கையும், தலைமயிரையும் தவிர, அந்தக் குழந்தையின் ‘தோற்றம்' முழுவதுமே, ஒரு ‘வையிட் பெல்லா’ வாகவேயிருந்தது! அடுத்ததாக அவள் செய்த காரியமே, அவளை இவ்வளவு நாளும் வாட்டிக்கொண்டிருக்கின்றது.

 

அவளது மூதாதையர் செய்து வந்தது போலவே, அந்தக்குழந்தையை, ஒரு நெருப்பெறும்புகள் வாழும் ‘மண் குவியல்' ஒன்றினுள் வைத்து விட்டு, தனது அம்மம்மா வாழும் ;காம்பை' நோக்கி நடந்து சென்று விட்டாள்.

குழந்தையின் அவலம், சிறிது நேரம் வரை அவளது காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தது. கண்களைத் துடைத்தபடியே. அந்தக் குழந்தைக்கு ‘மானசீகமாக' ‘ஜோர்ஜ்' என்ற பெயரையும் வைத்து விட்டிருந்தாள். அந்தக் குழந்தையின், கன்னத்தில் ஒரு ‘பூமராங் ' (boomerang) போன்ற கறுத்த நிற ‘மச்சம்' ஒன்றிருந்தது அவளுக்கு இன்னமும், தெளிவாக நினைவிருக்கின்றது. ‘ஜோர்ஜ்' ஐப் பற்றி, நினைத்துப் பார்க்காத நாட்களே இல்லையெனக் கூறலாம்!

 

இப்போதெல்லாம், அவள் ‘உலுறு'வுக்கு அடிக்கடி வருவதற்கான காரணமே, சில மாதங்களுக்கு முன்பு அங்கு வரும்போது கண்ட, சுருட்டைக் கறுத்தத் தலைமயிருடனும், அகன்ற மூக்குடனும், காணும் அந்த 'வெள்ளை' இளைஞனின் உருவம் தான். அவளும் அடிக்கடி வருவதனால், அவனும் அடிக்கடி அங்கு வருகிறான் என்பதையும் புரிந்து கொண்டாள். ஒரு வேளை, அந்தப்பகுதியிலேயே வசிப்பவனாக இருக்க வேண்டும். அவனது ஒரு கன்னத்திலும்,

'பூமராங் '  போன்ற ஒரு மெல்லிய கருமை நிறம் கலந்த 'மச்சம்'..!

 

அவள் வழக்கம் போல, மலை வாயை நோக்கித் தாயின் பெயரை, உரக்கக் கூறிக் கத்தியபோது, அவனும் உரக்கக் கூவுவது கேட்டது!

 

அதற்கு ‘மலை வாய்' உரத்த குரலில் அளித்த பதில்…..’மாயா…..”  !

 

 

Comments