சந்திரனுக்கு அது ஒரு குறுகுறுத்த பருவம்!
பாவாடை, சட்டையோட என்னத்தைப் பார்த்தாலும் வடிவாத் தெரியிற காலம்! அண்டைக்கும் சரசு வழக்கம் போல, படலையைக் கடந்து சென்றாள். ஒரு கொஞ்ச தூரம் நடந்து போய்த் திரும்பிப் பார்த்து, கழுத்தைத் திருப்பி ஒரு சின்ன “‘வெட்டு"! சும்மா ‘வெட்டு' எண்டு எழுதமட்டுமே முடியுமே தவிர, அதை எழுதி விளங்கப்படுத்திறது கொஞ்சம் கடினமான காரியம்!
ஆனால், அடி வளவுக்குள்ள பனங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த ஆச்சிக்கு, அந்த ‘வெட்டின்' அர்த்தம் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்! மனுசி நேர சந்திரனிட்டை வந்து, ஒரு ஒளிவு மறைவுமில்லாமல், தம்பி, உனக்கும் அந்தப் பெடிச்சிக்கும் இடையில ஏதாவது இருக்கோ? என்று கேட்கவும், இப்படியான நேரடித்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத சந்திரனும் அப்பிடியொண்டும் இல்லையணை எண்டு வார்த்தைகளைத் தேடவும், மனுசியும், தம்பி உனக்குத் தங்கச்சிமாரெல்லாம் இருக்கினமப்பு! இந்த ‘எடுபட்டதுகளைப்’ பாக்கிறதை விட்டிட்டுக் கவனமாப் படிச்சுப் பெரிய உத்தியோகத்திலை இருந்தாய் எண்டால், நானா, நீயா எண்டு தங்கட பெட்டையளைக் குடுக்கப் போட்டி போடுவாங்களப்பு! வீடென்ன, வாசலென்ன, நகையென்ன, நட்டென்ன எல்லாம் தந்து அள்ளிக்கொண்டு போவாங்களெல்லோ. எண்டு ஒரு பிரசங்கமே செய்து முடிச்சுது! இதுக்குப் பிறகு, வீட்டுக்கு வெளியால சந்திரன் வாற நேரமெல்லாம், ஆச்சியும் விறகு பொறுக்க வாறதும் வழக்கமாகிப் போனது!
இந்த முதலாவது சம்பவத்துக்குப் பிறகு, ஊருக்குள்ள கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது நல்லது எண்டு சந்திரன் முடிவு செய்து விட்டான்! ஆச்சியும் தனது ‘புலனாய்வு முயற்சிகளைக்' கொஞ்சம் தளர்த்தின மாதிரி இருந்தது! பிறகு சந்திரனும்,யாழ்ப்பாணத்துக்குப் படிக்கப் போகத் தொடங்க, எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக அவனது நினைவிலிருந்து விலகிப் போனது! சந்திரனது படிப்பும், ஒரு மாதிரி முடிஞ்சு, கொழும்புக்கு வேலைக்கும் போகத் தொடங்கியிருந்தான்! ஆராவது ஊருக்கிள்ள கொஞ்சம் படிச்சுக் கிடிச்சு வந்திட்டால், கலியாணப் புறோக்கர் மாருக்கு ஒரு விதமான ‘அரிப்பு' ஏற்படும்!. அவர்களும் சந்திரனது வீட்டாரை அணுகி, ஒரு மாதிரி அடிக்க வேண்டிய ;குழை’ எல்லாம் அடிச்சு, ஒரு மாதிரி, ‘புரிந்துணர்வு உடன்படிக்கை' ஒன்றை முடித்திருக்க வேண்டும்!
சந்திரனோட ஏதாவது முக்கியமான விசயங்கள் கதைக்க வேண்டுமெண்டால், தாய், தகப்பன் அவனை அணுகிறது குறைவு. ஆச்சி தான், அனேகமாக ஒரு நல்லெண்ணத் தூதுவராக அனுப்பப் படுவது வழக்கம்! சின்னனா இருக்கேக்க, நல்லெண்ணெய் தடவித் தடுக்கில ‘பிரள' விட்டதிலையிருந்து, இண்டைக்கும் சனிக்கிழமையில தலைக்கு எண்ணெய் வைச்சுத் தப்பி விடுகிறதால, மனுசி கொஞ்சம் நெருக்கம் கூடத் தான்!,அண்டைக்கும் ஆச்சியும் சந்திரனிட்டை வந்து வழக்கத்துக்கும் மாறாகக் குழைஞ்ச மாதிரிக் கிடக்கச் சந்திரனும், என்னணையாச்சி, கொஞ்சம் விளக்கமா விசயத்தைச் சொல்லணை, எண்டு கேட்க மனுசியும் கதையைத் துவங்கிச்சுது.
‘தம்பி, நீயும் படிச்சு முடிச்சிட்டாய். உனக்கும் காலா காலத்திலை, ஒரு கலியாணத்தைக் கட்டி வைக்கலாம் எண்டு அம்மாவும், அப்பாவும் முடிவு பண்ணியிருக்கினம். அவை எப்பவும் உனக்கு நல்லது தானே செய்வினம். தங்கச்சியளுக்கும் வயசாக முந்திச் செய்ய வேண்டுமெல்லோ எண்டு ஆச்சியின் கதை தொடர்ந்து கொண்டே போனது!ஆச்சியோடை சண்டை பிடிச்சு ஒண்டும் ஆகப்போவதில்லை, என்று அனுபவத்தில் தெரிந்திருந்தபடியால், கொஞ்சம் விட்டு ப்பிடிப்பம் எண்டு யோசிச்ச சந்திரனும், ஆரணை பெட்டை எண்டு கேட்க, வேறை ஆரு, நம்மடை ராசாத்தி தான் எண்டு சொல்லவும்,’கிர்ர்' எண்டு தலைக்குள் என்னவோ சத்தம் கேட்டது மாதிரியிருக்கச் சந்திரனும் அப்படியே நிலத்தில் அமர்ந்து விட்டான்!
அட கடவுளே, சில வேளையில அவசரமான அலுவலாப் போகேக்குள்ள, உன்னைக் கும்பிடாமல் கோயிலைக்கடந்து போயிருப்பன், அதுக்காக இப்பிடியா என்னைத் தண்டிக்க வேண்டும்? என நினைத்துக் கொண்டான், இவ்வளவுக்கும் ‘ராசாத்தி பெரிய அழகு எண்டு சொல்லாவிட்டாலும், நிச்சயமாக ‘அலங்கோலம்; இல்லை. அழகும் சந்திரனுக்குப் பெரிய பிரச்சனையில்லை. ஏனெனில் அவனும் பெரிய ‘மன்மதக்குஞ்சு’ இல்லையென்று அவனுக்குத் தெரிந்தே இருந்தது.. அவளது அப்பா ஒரு பெரிய முதலாளி என்பது அவனுக்கு முதலாவது பிரச்சனை. அடுத்ததாக, ராசம்மா பள்ளிக்கூடத்தில படிக்கிற காலத்தில,ஆங்கில வாத்தியார் அவளுக்கு நாற்பதாம் வரிசையும், ஐம்பதாம் வரிசையும் சொல்லிக்குடுக்கப் பட்ட பாடு, பள்ளிக்குடம் முழுக்கத் தெரியும். அந்த ‘எவ்' சத்தம் மட்டும் அவளுக்கு ‘எப்' எண்டு தான் வரும்.அதால அவளின்ர பட்டப்பெயரே ‘பவுண்டின்' . அந்தக்காலத்திலை ‘சியால்' எண்டொரு பேனை இருந்தது. அதால, ராசம்மாவும், பேனையப் பற்றிக்கதை வந்தால், அந்த இடத்தில் ‘சியால்' என்றே பேனைக்குப் பதிலாகக் கதைப்பாள். அது ‘பைலட்' எண்டாலும், அதுக்கும் பேர் ‘சியால்' தான்! அவளும் கடைசி வரைக்கும் ‘எப்'' எண்டே பிடிவாதம் பிடிக்கக் கடைசியாக் களைச்சுப் போன வாத்தியும், நீ சொல்லுறது தான் சரியெண்டு சொல்லிச் சரண்டர் பண்ணின கதை அவனுக்கும் தெரிந்திருந்தது!. அவளுக்கு உன்னில, படிக்கிற காலத்திலேயிருந்து நல்ல விருப்பமாம்! ஆச்சியின் பேச்சு அவனை இந்த உலகத்துக்குத் திரும்பக் கொண்டு வந்தது! நல்ல ‘சீதனமும்' கொடுக்கினமாம் எண்டு கேள்வி, எண்டு ஆச்சியும் ஒண்டும் தெரியாதமாதிரி, சந்திரனுக்குத் தலையில நல்லெண்ணெய் தடவிற மாதிரிக் கதையை நகர்த்த, அவனுக்கும் தங்கைகளின் ‘முகங்கள்' வரிசையாக நினைவில் வந்து போயின! ஏதோ, ஒரு காரணத்தினால், அல்லது பல காரணங்களினால், அவன் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் குறுக்கிட்ட போதும், நிரந்தரமான வலிகளோ, வடுக்களோ இன்றி, இது வரை அவனால் விலகிச் செல்ல முடிந்திருக்கின்றது! அப்படியானால், காதலே சந்திரனுக்கு ஏற்படவில்லையா? என்ற கேள்விக்கும் அவனால் பதில் சொல்ல முடியாது! ஒவ்வொன்றிலும் இனம், மதம், மொழி என்று பல தடைகள் குறுக்கிட்டன!அவனைக் காதலிப்பதாகக் கூறியவர்கள், எவருக்கும் காதலுக்காக, அவற்றைக் கடந்து செல்லும் தைரியம் இருக்கவில்லை! அவற்றைக் கடந்து வரத் துணிந்த ஒருத்தியையும் விட்டுவைக்கக் காலனுக்கும் கருணையில்லை!
நீ விரும்பும் பெண்ணிலும் பார்க்க, உன்னை விரும்பும் பெண்ணொருத்தி இருப்பாளானால், நீ மிகவும் பாக்கியசாலி என்று பலவிதமான சமாதானங்களைத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்! தூரத்திலிருந்து தனது மனதைத் தானே பார்த்து, அதனுடன் அளவளாவக்கூடிய ‘குணாதிசயத்தை' அவன் வளர்த்துக்கொண்டது அவனுக்கு இப்போது மிகவும் உதவியாக இருந்தது! சரி,சந்திரன் ‘கோழை' தான் எனத் தீர்ப்பளித்து விட்ட திருப்தியுடன், கதையை நோக்கி நகர்வோம்!
திருமண ஆயத்தங்களில், ஒரு பணக்கார முதலாளியின் ‘ஆடம்பரங்கள் அத்தனையும் குறைவின்றி இருந்தன! திருமண அழைப்பிதழ் கூட, அவனது பட்டதாரிச் சான்றிதழை விடவும், நேர்த்தியான கடதாசியில் அச்சிடப்பட்டிருந்தது! அவனது பெயரை விட, அவனது பட்டமும், தொழிலும் கொஞ்சம் பெரிதாக அச்சடிக்கப்பட்டிருந்ததையும், சந்திரனின் கண்கள் அவதானிக்கத் தவறவில்லை! மாப்பிள்ளை அழைப்பின் போதும், ஒரு இயந்திரத்தனமான சிந்தனையுடன் நடந்து வந்தவனை ,’என் தலைவன் வருகிறான், தேரிலே….! எனற நாதஸ்வர வித்துவானின் பாடல், ராசாத்தியின் வீடு அண்மையில் வந்து விட்டதை, அவனுக்கு உணர்த்தியது!,சிறு குழந்தைகள்,கலகலப்புடன் குரும்பட்டிகளில் தேர் செய்து விளையாடும் விளையாட்டைப் போலவே பெரியவர்களின் கலகலப்புக்களுடன், திருமணமும் இனிதே நடைபெற்று முடிந்தது!
திருமணம் முடிந்த கையோடு, நயினாதீவுக் கோவில் திருவிழாவும் வந்த படியால் அங்கேயும் ஒருக்காப் போய்வாறது நல்லது எண்டு, ராசாத்தியின் குடும்பம் முடிவு செய்தது! கோயிலுக்கு வெளிக்கிட்ட ராசாத்தியைப் பார்க்க, அவனுக்கு முதலாவது ‘தலைச்சுற்று' ஏற்பட்டது! கலியாண வீட்டுக்குப் போட்டிருந்த அவ்வளவு நகையும் அவளது கழுத்தில் இருந்தது! அவனும். எவ்வளவுக்குக் குரலில், இனிப்பைக்குழைக்க முடியுமோ அவ்வளவுக்குக் குழைச்சு, ‘இஞ்சை, பாருங்கோ, இதெல்லாத்தையும் கழட்டி வைச்சிட்டு, சிம்பிளா ஒரு சங்கிலியை மட்டும் போட்டுக்கொண்டு வாங்கோ! எண்டு சொல்லவும், சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த தகப்பனின் காதில் இந்த வார்ததைகள் விழுந்து விட்டன! குறை நினைக்காதையுங்கோ, தம்பி… பிள்ளை, ஆசையாய்ப் போட்டிருக்குது..நகையளைப் போட்டுக்கொண்டு போனாத்தானே, நாலு பேர், நம்மை மதிப்பினம்! என்று சொல்ல, நான் கதைச்சது ராசாத்தியோட, என்று வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளை, மிகவும் சங்கடத்துடன், திரும்பவும் மென்று விழுங்கிக்கொண்டான்! கொஞ்சம் மாலையாகிற நேரமானதால், கோயிலுக்குப் போறவழி நெடுகிலும், ஒரே சன நடமாட்டம்! மோட்டார் சைக்கிள்ல போன ஒரு ஆமிக்காறன், கிட்டவரவும் சேலைத் தலைப்பையிழுத்துத் ‘தற்பாதுகாப்பு நடவடிக்கையில் ஈட்டுபட்ட ராசாத்தியிடம், அக்கோய், வெலாவக் கீயத எண்டு கேட்க, ராசாத்தியும் கொஞ்சமும் தயங்காமல், பைப் போர்டி பைப் எண்டு சொல்லவும், ஆமிக்காறன் கொஞ்சம் ஆடிப் போனது கடைக்கண்ணில் தெரிந்தது!
ஒரு மாதிரி ராசாத்தியைக் கொழும்புக்குக் கூட்டிக் கொண்டு வந்த பின்னர்…..
அவனது வீட்டில், அவன் வீட்டுத் தேவைக்கான அரிசி, மா, பருப்பு, சீனி போன்ற பாரமான பொருட்களை வாங்கிகொடுப்பது அவனுக்குப் பழக்கமாகையால், அன்று வேலை முடிந்து வரும் வழியில் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் காவிக்கொண்டு வந்தான்! ராசாத்தியும் முகத்தில் எந்த விதமான சலனத்தையும் காட்டாமல், வீட்டிலை அனேகமா, வேலைக்காரர் தான் இதுகளைப் பாத்துக்கொள்ளுவினம்! மற்றது அப்பா எல்லாத்தையும் சில்லறையா வாங்காமல்,மூட்டை, மூட்டையாக் கொண்டு வந்து இறக்கி விடுவார்! சந்திரனுக்குக் கோபம் வந்தது தான்! ஆனாலும், ராசாத்தி எதற்காக இதைச் சொல்லுகிறாள் என்று அவனுக்குப் பிடிபடவில்லை! ஒரு வேளை, அவனுக்குச் சம்பளம் காணாதென்பதைக் குத்திக்காட்டுகிறாளோ என்றும் மனம் நினைத்துக்கொண்டது! சரி, எதற்கும் விட்டுப்பிடிப்பம் என்று தீர்மானித்துக் கொண்டான்!
ராசாத்தி இப்போதெல்லாம் வீட்டில் இருக்கும்போது நகைகள் அணிவதையும் நிறுத்தி விட்டிருந்தாள்! தகப்பன் வரப்போவதாகத் தெரிந்தால் மட்டும், அவற்றைப் போட்டுக்கொண்டாள்! ஆனால், அடிக்கடி எங்கட வீட்டிலை எண்டால்……. மட்டும் அடிக்கடி வந்து போனது! சந்திரனுக்கு, அவன் மீதே ஒரு விதமான பச்சாத் தாபம் ஏற்பட்டது! சரி, ராசாத்திக்கு என் மேல விருப்பம் இல்லைப்போல கிடக்கு! காசைக் குடுத்து வாங்கின சாமான் தானே எண்டு நினைக்கிறாளோ தெரியாது! அப்படி அவள் நினைத்தாலும், அவளில் தவறில்லைத் தானே!
ஒரு நாள் இரவு ஏழு மணியிருக்கும்! சுவரில் இரண்டு பல்லிகள் ஒன்றையொன்று துரத்திப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன! அவனும் தானும் ஒரு பல்லியாகப் பிறந்திருந்தால், இந்த சீதனப் பிரச்சனையில்லாமல் இருந்திருக்கும்! ‘ராசாத்தி' என்ட பல்லியை, எந்த விதமான மனச் சஞ்சலங்களுமின்றி, அந்த ஆண் பல்லியைப் போல துரத்திப் பிடித்து விளையாடியிருக்க முடியும் என எண்ணியவன், ராசாத்திக்குத் தன் மீது விருப்பமில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான்! உடனேயே, மனம் மாற முந்தியே ராசாத்தியைக் கூப்பிட்டு, ராசாத்தி, நான் ஒரு அவசர அலுவலா, எங்கட வீட்டை போகவேணும்! நீ கொஞ்ச நாளைக்கு அப்பாவோட, அவற்றை கொழும்பு வீட்டில போய் இரு! என்று கூறியவன் தான் செய்வது சரி தானா என்றும் சிந்தித்தான்! ஆயினும் மனத்தை மாற்றிக்கொள்ளாமல், வேலைத்தலத்து மேலாளரிடம், எதிர்பாராத் விதமா, ஊருக்குப் போக வேண்டி வந்திட்டுது! அங்க போன பிறகு உங்களோட வடிவாக் கதைக்கிறன் என்று தொலைபேசியில் தெரிவித்து விட்டு, ராசாத்தியின் தகப்பனாருக்கும் விசயத்தைச் சொன்னான்! என்ன தம்பி, இருந்தாப் போலை, என்று இழுத்தவர் அதிகம் அலட்டாமல், சரி, தம்பி என்று போனை வைத்துவிட்டார்! அவரது ‘வியாபார மூளை' இவ்வளவுக்குள், ஆயிரம் காரணங்களைத் தேடியிருக்கும் என்றும் அவனுக்குத் தெரியும்!
அன்று இரவே பஸ் பிடித்தவன் யாழ்ப்பாணம் வரும் வரைக்கும் ஒரே யோசனையில் ஆழ்ந்திருந்தான்! விடியக்காலமை வீட்டையடைந்த போது, தலை ஏறத்தாழக் கொதிநிலையில் இருந்தது! வீட்டில், ஒரு அலுவலா வர வேண்டி வந்திட்டுது எண்டு சொல்ல அவர்களது அடுத்த் கேள்வி, அப்ப ஏன் அண்ணியைக் கூட்டிக்கொண்டு வரேல்லை? எண்ட கேள்வி அவனைத் திக்குமுக்காட வைத்துவிட்டது! எத்தினை நாளெண்டு வடிவாத் தெரியாததால, அவவின்ர அப்பா வீட்டை விட்டிட்டு வந்திட்டன்!
ஆச்சி, தனது முகத்தைத் அவவின்ர தோள்பட்டையில் இடிச்ச விதம், அவனிடம் இதைப்பற்றி ஆச்சி மேலும் கதைக்கப் போவதில்லை என்பதை அவனுக்கு உறுதிப்படுத்தியது!
இரண்டு நாட்கள் போயிருக்கும்! இருந்தாப்போல, சந்திரனுக்கு அடிவயிற்றில் ஒரு வலி ஏற்பட்டது! வலி தாங்க முடியாமல் போகவே, வீட்டிலிருந்து அவனை, அவனது நண்பனொருவன் உடனடியாக ஊரில் உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனான்! அங்கே அவன் மயக்கமானது மட்டும் தான் அவனுக்கு நினைவிருந்தது! எவ்வளவு நேரம், அவன் அந்த நிலையிலிருந்தான் என்பதைக்கூட அவனால் அனுமானிக்க முடியவில்லை! மெதுவாக ;மயக்கம்' தெளிந்து கொண்டிருந்தது!
ராசாத்தியின் குரல் வெளியிலிருந்து கேட்டது மாதிரியிருந்தது!
ஐயோ, என்ர ராசாவைப்பாக்க விடுங்கோ! என்ர கிட்னியில ஒண்டை அவருக்குக் குடுங்கோ! உரத்த குரலில், அவள் யாரிடமோ கெஞ்சிக்கொண்டிருந்தாள்!
அப்போது அங்கு வந்த மருத்துவர், சந்திரன் உமக்கு ஒரு பிரச்சனையுமில்லை! உங்கட நண்பன், உங்களுக்கு ‘வயித்துக்குத்து' எண்ட உடனை ‘கிட்னிப்பிரச்சனையா இருக்கும் ; எண்டு சொல்லி உங்கட வீட்டில சொல்ல, அவை கொழும்புக்கு உங்கட மனுசியிட்டைச் சொல்ல, அவை அப்பிடியே கார் ஒண்டைப் பிடிச்சுக்கொண்டு நேர இஞ்சதான் வந்திறங்கியிருக்கினம்! நான் அவையோடை இன்னும் கதைக்கேல்லை! கொஞ்ச நேரத்தாலை உள்ளுக்கு அனுப்பி விடுறன்! நீங்களே நேரில, இந்தச் சந்தோசமான செய்தியைச் சொல்லுங்கோவன் என்ற படி மெல்ல நழுவினார்!
சந்திரன் நனைந்து போன தலையணையினுள் மேலும், மேலும் புதைந்து கொண்டிருந்தான்!
|
சிறுகதைகள் >