அது பகலா அல்லது இரவா என்று வாணருக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனாலும், யாழ்தேவியில் இருந்து பிள்ளைகள் வந்திருந்த படியால், அது பின்னேரம் என்று நினைத்துக்கொண்டார். அவர் ‘அடங்கிப்' போனார் என்று பரியாரியார் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருந்தது,வாணருக்குத் தெளிவாகக் கேட்டது. இந்த ‘அடக்கம்' வருவது அவருக்கு மூன்றாவது முறையாகும். அவருக்கு ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளையும், இரண்டு பொம்பிளைப்பிள்ளைகளும் உண்டு. எல்லாரும் கலியாணம் கட்டிப் பிள்ளை குட்டிகளோட கொழும்பில் தான சீவியம். .கண்கள் மூடிய நிலையில் இருந்தாலும், தனது உடல், பூவரசம் மரத்தால் செய்யப்பட்ட , தலைமாடும், கால்மாடும் இல்லாத ஒரு கட்டிலில் வளர்த்தப் பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. அத்துடன், அவரால் வெளியில் நடக்கும் சம்பவங்களை, நேரில் பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. அட, இதைத் தான், மரணம் என்று சொல்லுகின்றார்களோ என்ற சிந்தனையிலும், அவருக்கு ஒரு சிரிப்பு வந்தது. ஆனால், அருகிலிருப்பவர்களிடம் இருந்து ஒரு விதமான சத்தமும் வராததால், தனது ‘உதடுகள்' உண்மையில் சிரிப்பை வெளிப்படுத்தவில்லை ன்று அனுமானித்துக் கொண்டார். அப்போது பரியாரின் விளக்கம் தெளிவாகக் கேட்டது.
இஞ்சை பாருங்கோ, வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூண்டிலையும், வாதமும், பித்தமும் விழுந்து போச்சு. இப்ப தனியச் ‘சிலேட்டுமத்தில' மட்டும் தான் ‘உயிர்' தொங்கிக்கொண்டிருக்கு. போன முறை, அடங்கேக்க, வாதம்' விழுந்து போகப் ‘பித்தம்' கொஞ்சம் ஓடிக் கொண்டிருந்தது.
பரியாரிக்கு வாணரில கனகாலத்துக் ‘கறள்' ஒண்டு இருக்குது எண்டு வாணருக்குத் தெரியும். பெரிசா ஒண்டுமில்லை. அவன் சின்னப் பெடியனா இருக்கேக்கை, ஒரு கலியாண வீட்டுக்கு வாணர் கூட்டிக்கொண்டு போய், அங்கை வடிவாச் சாப்பிட்ட பிறகு, வாசல்ல போற ஆக்கள் ‘மொய்' எழுதிறதைப் பாத்த பரியாரியும்,அதென்ன எண்டு கேக்க, வாணரும், ஆக்கள் சாப்பிட்டதுக்குக் காசு குடுக்கினம் எண்டு சொல்லவும், பொக்கற்றில்லாத காச்சட்டையோட நிண்ட பரியாரியாரும், காவோலை வேலிக்கிள்ளால பூந்து வெளியால ஓடேக்கிள்ள, முதுகில வேலிக்கருக்குப் பிளந்து போட்டுது. வடுவா, இவ்வளவு காலமும் அதை மறக்காம வைச்சிருக்கிறான் எண்டு கறுவிக்கொண்டார்.
வாணருக்குத் தாய், தகப்பன் வைச்ச பெயர் அம்பலவாணர். அந்தக்காலத்திலேயே கொஞ்சம் நவீனமான சிந்தனையுள்ளவர் எண்ட படியால, அம்பலத்தைத் தூக்கி வெளியால போட்டிட்டார். அதோட, அவர் நிரந்தரமாய்ச் செய்த தொழிலும், ஊரில உள்ள ஆக்களிட்டை, ஆட்டுக்குட்டியள வாங்கி, மாதத்தில ஒருக்கா வாற முஸ்லிம் வியாபாரியளின்ர லொறியில. மொத்தமா ஏத்தி அனுப்பறது தான். அந்தத் தொழிலையும் செய்துகொண்டு, அம்பலத்தின் பெயரையும் காவிக் கொண்டு திரியிறது, அவ்வளவு பொருத்தமாக அவருக்குப் படவில்லை.
‘அப்புவை நினைச்சாப் பெரிய கவலையாக்கிடக்குது, என்று மகன் சொல்வது அவருக்குத் தெளிவாகக் கேட்டது. நான் காசைக் கையில குடுக்கிற நேரமெல்லாம், அப்புவும் ‘வேண்டாம், மகனே, எனக்கென்னப்பு குறை?, நீ தான் வச்சுக்கொள்ளு' எண்டு வாங்கவே மாட்டார் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
மகன் ஒரு முறை திருவிழாவுக்கு வந்த நேரம், அவன் கோவிலுக்குக் கட்டிக்கொடுத்த ‘மணிக்கூண்டுக் கோபுரம்’, அம்பலவாணர் உபயம், என்று சிவப்பு நிற எழுத்துக்கள் சூரிய ஒளியில் மின்னிய படி நின்று கொண்டிருந்தது் .
வாணருக்கும் ஆட்டு லொறி வரப்பிந்தினதாலும்,, ஊரில கொஞ்சம் முன்பணம் கொடுத்து ஆடுகளை ‘புக்' பண்ணி வைச்சிருந்ததாலும், கொஞ்சம் காசு தேவைப்பட்டது. ஊருக்கிள்ள ஆரிட்டையும் கொஞ்சக்காசு கடன் கேட்கலாம் எண்டாலும், மகனின்ர ‘கௌரவமும்' அந்தக் கடனில் தொங்கிக்கொண்டிருந்த படியால் ஒருவரிடமும் வாய் திறந்து கேட்க முடியவில்லை. எனவே, துணிந்து மகனிடம் ‘தம்பி, கொஞ்சம் காசு தேவைப்படுகுது, லொறி வந்த உடன கொழும்புக்கு அனுப்பி விடுகிறன் என்று கேட்டுப்பார்த்தார்,
அப்பு, இப்ப தான் கோவில் காசு குடுத்திட்டு நிக்கிறன். நீங்கள் லொறியைக் கொஞ்சம் கெதிப் பண்ணி வரச்சொல்லுங்கோ, என்று சொன்னபடி போய் விட்டான்.
அப்போது, யாரோ மூக்கைச் சீறி எறியும் சத்தம் கேட்டது.மகன் அழுகிறான் போலும். மீண்டும் தனக்குள் சிரித்துக்கொண்டார்.
யாரோ அருகில் சுருட்டுப் பிடிக்கும் வாசம் வந்தது. அவருக்கும் ஒண்டைப் பத்தவைச்சால் நல்லம் போல கிடந்தது.
௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ உடனேயே தான் இப்போது ‘அடங்கிப்போய்' இருப்பது் நினைவுக்கு வரவும், கொஞ்சம் மூச்சை இழுத்து ஆழமாக விட்டுக் கொண்டார். சுருட்டுப் புகை, உள்ளே போனதோ இல்லையோ, உடம்பில் கொஞ்சம் 'புத்துணர்வு' திடீரெனப் பாய்ந்த மாதிரி இருந்தது. தனது புத்தியை நினைக்க அவருக்குப் பெருமையாக இருந்தது. இந்த 'நரிப்புத்தி' அவருக்குப் பல விதங்களில், பல தடவைகளில் உதவியிருக்கின்றது. .
‘மனுசனுக்குச் சமைக்கவே தெரியாது. நான், இரண்டாவதை வயித்தில வைச்சிருக்கிற நேரம், மனுசன் கறி வைக்க வெளிக்கிட்டு,கறிக்குள்ள போட்ட மீனெல்லாம் கரைஞ்சு போய்த் தனிய முள்ளு மட்டும் தான் கறியிக்கை மிஞ்சிக்கிடந்தது. அதுக்குப் பிறகு மனுசனை அடுப்படிப்பக்கம் நான் விடறதேயில்லை. இப்ப கூட, சாரதாக்கா வீட்டிலையிருந்து தான் மனுசனுக்குச் சாப்பாடு போறது' எண்டு வாணரின் மனுசி, அங்குள்ளவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்ததும் வாணருக்குத் தெளிவாகக் கேட்டது.
அட, நான் திரும்ப எழும்பவே மாட்டன் எண்டு எல்லாரும் நினைச்சுக்கொண்டினம் போல கிடக்கு. இந்த முறை, முழிச்சு எழும்பட்டும். எல்லாருக்கும் செய்யிறன் வேலை, எனத் தனக்குள் சொல்லிக்கொண்டார். வாணரும் அந்த நாளையில லேசுப்பட்ட ஆளில்லை. பழி வாங்கிற குணம் அவரோட கூடப்பிறந்தது.
வாணரின்ர மனுசி, எப்ப சமைக்கிறதை நிப்பாட்டினது எண்டு வாணருக்குச் சரியாக நினைவுக்கு வரவில்லை. இரண்டாவது மகளின் கலியாணம் முடிஞ்ச கையோடையா அல்லது மூத்த மகளுக்குக் பேரன் பிறந்த கையோடையா என்று கண்டு பிடிக்கக் கொஞ்ச நேரம் முயன்று, பின்னர் அந்த முயற்சியைக் கைவிட்டார். திடீரென ‘அம்மாவுக்கு' எல்லாப் பிள்ளையளின்ர வீட்டிலையும், திடீர் கிராக்கி ஏற்பட்டதும், ‘இனி, அப்புவுக்குத் தனிய உலை வைக்கிறதா? வீட்டை வந்து சாப்பிடுவார் தானே என்ற சமாதானமும் கூறப்பட்டது நினைவிருக்கின்றது. கொஞ்ச நாள், பிள்ளையளின்ர வீட்டை போய்ச் சாப்பிட்டுப் பார்த்தார். பல நாட்களில்,அவரது ஆடு பிடிக்கிற தொழிலால், அவருக்குச் சாப்பாட்டு நேரத்துக்கு வீட்டுக்குப் போக முடியாமல் போய்விடும் அல்லது ஆரோடையும் தவறனைக்குள்ள உள்ளிட்டால், நேரம் போறது தெரியாமல் போய்விடும். அவ்வாறு போகும் போது, மக்களின் பார்வையில், பல அர்த்தங்கள் தெரிவதாக அவர் உணர்ந்தார். தன்னால, இனிப் பிள்ளையளுக்குக் ‘கரைச்சல்' வரக்கூடாது என்று தானே சமைக்கத் துவங்கியது நன்றாக நினைவிருக்கின்றது. பிறகு பேரப்பிள்ளையளும் வளர, மனுசியும் கொழும்புக்காறியாப் போச்சுது. அவருக்கும் கொழும்புக்குப் போய்ப் பிள்ளை குட்டியளோட இருக்க இடைக்கிடை ஆசை வந்து போகும். ஆனால், ஒரு பிள்ளை கூட, அப்பு, என்னோட வந்து இருக்கலாம் தானே, என்று இதுவரை வாய் திறந்து கேட்கவில்லை. அது மனுசியின்ர பிழையா, பிள்ளையளின்ர பிழையா, தன்ர வளர்ப்புப் பிழையா, அல்லது மொத்த ஆண்குலத்தின்ர பிழையா என்ற கேள்வியைப் பல தடவைகள் தன்னைத் தானே கேட்டிருப்பார்! இரவு நேரங்களில், நாய் குலைச்சு, நித்திரை முறிஞ்சிட்டுது எண்டால், இப்படியான நினைவுகள் வந்து மனதை அரிப்பதுண்டு. மனித உடலுக்கு வயது போனாலும், மனித உணர்வுகளுக்கு வயது போவதில்லை என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டார்.
இந்தக் கண்றாவியைக் காணப் பொறுக்காமல் தான் ‘சாரதாக்கா' தனக்குச் சமைக்கிறதில கொஞ்சத்தை அவருக்குக் கொண்டுவந்து கொடுக்கிறது. வாணரும், இடைக்கிடை மீன், மரக்கறி எண்டு வாங்கிக் கொடுப்பதுண்டு. இந்தக் கதைக்குத் தான் வாணரின் மனுசி, கை, கால், மூக்கெல்லாம் வைச்சுத் தனது குற்றவுணர்வில் இருந்து விடு படுகிறதுக்குக் கதை புனையுது என்று அவருக்குப் புரிந்தது.
நாங்கள் அப்புவோட இருந்த காலத்திலை, ஒரு நாள் கூடக் கடைக்குப் போய், அரிசி வாங்கினது கிடையாது. அப்புவின்ர வயல்ல இருந்து, மூட்டை, மூட்டையாத் தான் நெல்லு வாறது. மனுசனும், நெடுக ஏதாவது ஒரு முயற்சி பண்ணிக்கொண்டே இருக்கும். இல்லாவிட்டால், எங்க இரண்டு பேருக்கும், சீதனமும் தந்து, ‘முதலாளி' மாப்பிள்ளையளாப் பாத்துக் கட்டி வைச்சிருக்க ஏலுமே. கடைசிக் காலமெண்டு, எங்களோட வைச்சிருந்து பாக்க எங்களுக்குத் தான் கொடுத்து வைக்கேல்ல. அவரைக் கொழும்புக்கு வாங்கோ, வாங்கோ எண்டு ஒவ்வொரு முறை வரேக்கையும் அவரிட்டைக் கேக்கிறனாங்கள். பிள்ளை நான் ‘காம்பறாக்குள்ள' இருந்து எப்படிச்சீவிக்கிறது எண்டு சொல்லி மாட்டனெண்டு சொல்லிப்போடுவார். ஒருவரும் கேட்காமலே, இரண்டு மகள்மாரும் தங்களுக்கிடையே பேசிக்கொள்வதும் வாணரின் செவியில் விழுந்தது. இப்போது ஏறத்தாள ஒரு ‘மரத்துப் போன' நிலைக்கு அவர் வந்திருந்தார். காரணமில்லாமல், பட்டினத்தார் நினைவில் வந்து வந்து போகத் தொடங்கினார்.
அந்த நேரம் பார்த்துப் பரியாரியார் கிட்ட வந்து அவரது கையைத் தூக்கிப் பாத்தார். இப்ப ‘சிலேட்டுமமும்' விழுந்து போச்சுது போல கிடக்கு. இனி, ஆள் தப்பாது. மகனோட ஒருக்காத் தனிய கதைக்கவேணும் என்று சொல்வது தெளிவாக வாணருக்குக் கேட்டது. பின்னர், பரியாரி எதையோ மகனிடம் சொல்லவும், மகனும் மூண்டாந்தரமாய் , கடை, கிடை எல்லாத்தையும் விட்டிட்டு வந்திருக்கிறம். இனியும் , அப்பு எழும்புவார் எண்டு எங்கள்ள ஒருத்தருக்கும் நம்பிக்கையில்லை. ஏதோ, நீங்க செய்யிறதைச் செய்யுங்கோ எண்டு சொல்வது கேட்டது.
பிறகு பரியாரியும், உரத்த சத்தத்துடன் ‘நல்லா ஆண்டு அனுபவிச்ச மனிசன். எல்லா நாடியும் விழுந்துபோன பிறகும், மனிசன்ர உயிர் என்னும் போகாமல் இருக்குதெண்டால், ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். நான், என்ர அனுபவத்தில, இப்பிடிக் கன பேரைக் கண்டிருக்கிறன்.’ மண் ஆசை' மட்டும் மனுசன்ர உயிரைப் போகவிடாமல் பிடிச்சுக் கொண்டிருக்கு. பாலுக்குள்ளை, கொஞ்சம் மண்ணைப் போட்டுப் பிள்ளையள் பருக்கி விடுங்கோ! மனிசன் சந்தோசமாய்ப் போயிரும்'
ஒரு நீதிபதியின் உத்தரவைக் கேட்டது போல, எல்லோரும் திடீரென அமைதியாகியது போல இருந்தது. பின்னர் மகன், ஒரு மூக்குப் பேணிக்குள்ள, கொஞ்சம் பாலைக் கொண்டுவரப் பரியாரியார், கொஞ்சம் மண்ணையள்ளி அதனுள் போட்டு, அவரது வாயைத்திறந்து, ஒரேயடியாக, அவ்வளவத்தையும் வாணரது வாய்க்குள் ஊத்தினார். அது மட்டுமல்ல, அவரது மூக்குத் துவாரங்களையும் தனது விரல்களால் இறுக்கமாகப் பொத்தியிருந்தார்.
வாணரின் உடல் அசையவேயில்லை. அவரது கண்கள் மட்டும் திடீரெனத் திறந்து கொண்டன! அந்தப்பார்வை, அவர் ஆட்டுக்குட்டிகளைக் கொலைக்களத்துக்கு அனுப்பும்போது அவற்றின் கண்களில் தெரிந்த ‘இயலாமையுடன் கெஞ்சும்' பார்வையைப்போலவே இருந்தது.
|
சிறுகதைகள் >