யாழ் தேவிப் பயணமொன்று!

posted May 26, 2013, 9:16 PM by வாடா மல்லிகை   [ updated Jun 1, 2013, 1:20 AM ]

சுகுமாரனின் முகத்தில் அன்று மகிழ்ச்சி பரவியிருந்தது!

அன்றைக்குத் தான் தனது முதலாவது சம்பளத்தை, அப்பா எப்போதும் செய்வது போலவே, அம்மாவின் கையில் கொடுத்திருந்தான். அம்மாவும் அப்படியே பணத்தை வாங்கி வைத்து விடவில்லை. அதைக் கொண்டு போய்ச் சாமிப் படத் தட்டில் வைத்து, அதில் இருநூறு ரூபாவை எடுத்து, அவனிடம் திருப்பிக் கொடுத்தா. அதை உடனடியாக வாங்கிக்கொள்ளாமல், சிறிது நேரம் சிந்தித்தான். அப்போது தான், வீரகேசரிப் பேப்பரில் இருந்து, தலையைத் தூக்கிப் பார்த்த அப்பா, அவனுக்கு இன்னுமொரு நூறைக் கொடுத்துவிடன் என்று கூறினார். அவனது கண்கள், பனித்தன. இவ்வளவுக்கும் அவனது மாதச் சம்பளம் அப்போது, எண்ணூறு ரூபாய்கள் மட்டுமே. அதில் நூறு ரூபாவைத் தனது, தங்கையிடம் கொடுத்தவன், அடுத்த நாளைக்கான கொழும்புப் பயணத்தைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கினான்.புதிதாக, வேலையில் சேர்ந்தவர்களுக்கு, அந்த வங்கியினது, தலைமைக்காரியாலயத்தில், நடக்கவிருக்கும் பயிற்சிக்காகப் போக வேண்டியிருந்தது. அவனும், அவனது இன்னொரு நண்பனும் அடுத்த நாள் காலை, யாழ்தேவியில் போவது என முடிவு செய்திருந்தார்கள்!

'காங்கேசன் துறையிலிருந்து கொழும்பை நோக்கிச் செல்லும் 'யாழ்தேவி' கடுகதிப் புகையிரதம் இன்னும் சில வினாடிகளில், முதலாவது மேடைக்கு வரும். இதில் மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் முன்னுக்கும், இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் பின்னாலும், இணைக்கப் பட்டிருக்கும். இது சாவகச்சேரி, கொடிகாமம், பளை, ஆனையிறவு.. என அறிவித்தல் தொடர்ந்தது.

எதுக்கும் மூண்டாவது பெட்டியில ஏறுங்கோ. நாங்களும் தான் கொழும்புக்கு வாறம்! அதில கொஞ்சம், இடம் இருக்கும்! குரல் கேட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள், யாழ்தேவி கூவிய படி புகையிரத நிலையத்துக்குள் நுழைந்து விட்டது! மூன்றாவது பெட்டியும், எங்களுக்கு முன்னாலேயே வந்து நின்றது.

புகையிரதம் வந்ததும், பாய்ந்து விழுந்து கோர்னர் சீட் பிடிக்கிறதுக்கும், ஒரு திறமை வேணும். நாங்களும் விழுந்தடிச்சுக் கொண்டு ஏறிப் பார்த்தால், எல்லாக் கோணர் சீற்றுக்கள்ளையும், ஆக்கள் குந்திக்கொண்டிருக்கினம். ஆக்களைப் பார்த்தால், கொழும்புக்குப் போற மூஞ்சியள் மாதிரியும் தெரியேல்லை. கொஞ்ச நேரத்தில, பத்மினி எண்டு எங்களோட வேலை செய்யிற பிள்ளையும், வேறு ஒரு கிளையில வேலை செய்யிற, அவவிண்ட இன்னொரு சிநேகிதமும், ஆறுதலாக வந்து ஏற, அந்தக் கோணர் சீற்றுக்காரர் இரண்டு பேர் எழும்பி இடம் குடுத்துட்டி, இறங்கிப் போயினம். அவை இரண்டு பேரும் தங்கட அப்பாக்களாம். கோண்டாவில்லில் இருந்து இடம் பிடிச்சுக் கொண்டு வருகினமாம் என்று நாங்கள் கேட்காமலே, எங்களுக்குச் சொல்லிவிட்டு, அந்தக் கோணர் சீற்றுக்களில் அமர்ந்து கொண்டார்கள். எங்களுக்கும், வேறு வழியில்லாமல், கிடைத்த இருக்கைகளில் அமர்ந்து கொள்ளப் புகையிரதமும், மெல்ல மெல்ல நகரத் துவங்கியது.

புங்கங்குளம் தாண்ட முந்தியே, நீங்கள் தானே சுகுமார் என்று பத்மினி கேட்டா. ஓமோம், நீங்கள் தானே 'கேள்வியின் நாயகி' என்று சுகுமார் திருப்பிக் கேட்கக் கொஞ்சம் திகைத்துப் போன பத்மினி, வாயைத் திறக்க முன்னம், எனது நண்பன் ' இல்லை, எங்களுக்கு இந்தப் பயிற்சி வகுப்புகள், நடக்கேக்கை, நீங்கள் தான் அடிக்கடி, கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிற படியால, நாங்கள் உங்களுக்கு வைச்ச பேர் அது" என்று உதவிக்கு வந்தான். இவவின்ர பேர் மங்களா என்று அறிமுகப் படுத்திவிட்டு,'எப்படி உங்கட வேலைகள் போகுது, என்று, பத்மினி கதையைத் தொடங்க, பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் எங்களது பெட்டிகளை, மேலே வைக்க, இடம் பார்த்துக் கொண்டிருந்தோம். எல்லா இடத்தையும், முருங்கைக் காய்க் கட்டுகளும், பலாப் பழங்களும் ஏற்கெனவே பிடித்து விட்டன போல இருக்க, ஒரு மாதிரிக் கிடைத்த இடைவெளிகளுக்குள், எமது பெட்டிகளைத் திணித்து விட்டோம். பத்மினியின் நண்பியும், நீங்கள், சிங்களம் கதைப்பீங்களே, என்று கேட்டுத் தானும் ஊமையில்லை, என்று தன்னைக் காட்டிக் கொண்டா.

நண்பனும், என்னடாப்பா, இவளவை, அங்கினேக்கை கண்டால், நிமித்திக் கொண்டு போவாளுகள், இப்ப பார்த்தா, வலிய, வலிய வந்து கதைக்கிறாளுகள் என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டான். சரியடாப்பா, நாங்கள் இவளவையோட மினக்கடாம, வெளியாலை பாப்பம் என்று கூறிய படி, வெளியே பார்க்க, அப்போது தான் மழை பெய்து முடிந்ததால், வரணிப் பக்கத்தில் வளர்ந்திருந்த, ஆம்பல் பூக்கள் மிகவும் அழகாக இருந்தன. நிரை, நிரையாக வளர்ந்திருந்த தென்னை மரங்களும், எமது, கிராமங்கள் எவ்வளவு அழகானவை என்பதைப், பறை சாற்றிக் கொண்டிருந்தன.

வீட்டை உங்களுக்குக் கலியாணம், கிலியாணம் பேச இல்லையா? பத்மினியின் எதிர் பாராத இந்தக் கேள்வியால், கொஞ்சம் ஆடிப் போய்த் திரும்பிய போது, எங்களோடு பயணம் செய்த ஆச்சியும், தனது நாடியில் சுட்டு விரலை வைத்த படி, ஆச்சரியப் பட்டார்.
இல்லை, எங்களுக்கு வேற பிரச்சனைகள் இருக்கிற படியால, எல்லாத்தையும் முடிச்சுப் போட்டுதான் செய்ய வேணும். இப்ப, என்னத்துக்கு அவசரப் படுவான் என்று, சுகுமார் பதிலளிக்க, ஆம்பிளையள் எல்லாரும் இப்பிடியே நினைச்சால், பொம்பிளைப் பிள்ளையள் என்ன செய்யிறதாம்?

இதென்னடா, பிரச்சனையாப் போச்சு, என நினைத்துக் கொண்டிருக்க, அப்போது தான் கலியாணமான சோடி ஒன்று, மண மகனைச் சவூதிக்குத் திருப்பியனுப்புவதற்காகப் பயணம் செய்தது, அவர்களைப் பயணம் அனுப்ப வந்த மாப்பிள்ளையின் மாமிக்காரி, பிள்ளை சொல்லுறதிலையும் ஒரு நியாயம் இருக்குத் தானே தம்பியள் என்று துவங்கியது. இந்த ரயில் பயணங்களில் இப்படியான இலவச ஆலோசனைகளுக்குக் குறைவே கிடையாது என்பதைக் காட்டியது! புது மாப்பிள்ளையும், பட்டப் பகல் எண்டும் பாக்காம, ஏதோ அப்ப தான், முதன் முதலாப் பொம்பிளையைக் கண்டது மாதிரி, அடிக்கடி தனது அன்பைப் பகிரங்கப் படுத்திக் கொண்டிருந்தார்..

எங்களுக்குக் கொஞ்சம் பசிக்கவும் துவங்க, ஆனையிறவு உப்பளம் உதவிக்கு வந்தது. இஞ்சை பார் , எவ்வளவு உப்புக் குவிஞ்சு போய்க் கிடக்குது,என்று சொல்லியபடி வெளியில் பார்த்தான் சுகுமார். வீட்டில கட்டித் தந்த சாப்பாட்டை, எனது நண்பன் எடுத்தான். அவன் தான் எனக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தான். முட்டைப் பொரியலும், புட்டும், கருவாட்டுப் பொரியலின் மணமும்,கொஞ்ச நேரத்திற்கு எல்லாவற்றையும் மறக்க வைத்தது.

ஆனையிறவு தாண்டியதும், அழகிய வயல் நிலங்கள் பச்சைப் பசேலென்று தெரிந்தன. ஊரில்,புழுதி விதைப்பில, சின்னச் சின்ன வரம்புகளுடன், உயரம் குறைந்த வயல்களைப் பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு, இந்த வயல்கள், ஒருவித கிழு கிழுப்பை ஊட்டின.

நாங்க என்ன சும்மாவா கேக்கிறம். சீதனம் தருவம் தானே! மீண்டும் பத்மினி!

இதென்ன கோதாரியாக் கிடக்கு, மச்சான். வேற பெட்டியில ஏறியிருக்கலாம் போல!

யாழ்தேவி, மிக மெதுவாக ஓடத்துவங்கியது.

தம்பி, இப்ப இது முறிகண்டியானைக் கடக்கிறது. யாழ்தேவிக்கும், முறிகண்டியானுக்குப் பயம் தான். அந்தப் புது மாமி, கேட்காமலேயே விளக்கம் தந்தா.

நாங்க சமைச்ச சாப்பாடு இருக்கு. தேவையெண்டால், வெக்கப் படாமல் கேழுங்கோ! மீண்டும் பத்மினியின் சீண்டலுடன், யாழ்தேவி மாங்குளத்தில் ஓய்வெடுத்தது!

வட, வடே!

கச்சான்...... கச்சான்...

இந்தச் சத்தங்களில், ஒரு விதமான சந்தம் மறைந்திருதது போல ஒரு உணர்ச்சி!

மச்சான், கொஞ்சம் கச்சான் வாங்கிக் கொடுப்பமடா, என்ன இருந்தாலும், எங்களை, நம்பித் தானே பயணம் வருகுதுகள்!

நண்பன், இளகிக் கொண்டு வருவதற்கான, முதலாவது அறிகுறி தெரிந்தது!

சுகுமாரும், இவளவையின்ர வாயைக் கொஞ்ச நேரமாவது, பிசியா வைச்சிருக்கிறதுக்காகவெண்டாலும் கச்சான் உதவும் என நினைத்து நண்பனின் ஆலோசனையை ஆமோதித்தான்.

புகையிரதம் வவுனியாவை, நோக்கி ஓடிக்கொண்டிருந்தது!

வவுனியா புகையிரத நிலையத்தினுள், ஒரு பெருமூச்சை விட்டவாறு யாழ்தேவி நுழைந்தது.

அநேகமானவர்கள், தங்கள் மதியச் சாப்பாடுகளை, இங்கேயே முடித்து விட அவசரப் பட்டனர். வவுனியா தாண்டினால், கையைக்காலை நீட்டிச் சாபிடுவது கொஞ்சம் கடினமாக இருக்கும்!

பல பெண்கள் போட்டிருந்த தாலிக் கொடிகள், இப்போது கணவர்களிடம் கை மாறின. சில புத்திசாலியான கணவர்கள், தங்கள் உள்ளாடைகளில், ஒரு விதமான இரகசியமான பொக்கட்டுகளைத் தைத்திருப்பார்கள் போலும். அவர்கள் நகைகளை வாங்கியதும்,யாழ்தேவியின் கழிப்பறைக்குள் போய் வந்த படி, இருந்தது அதனை உறுதிப் படுத்தியது. அதிகம் நகை போடாதவர்கள், சேலைத் தலைப்புகளை, இழுத்து மூடுவதன் மூலம், இயலுமான அளவுக்குத் தங்கள் நகைகளை, மறைத்துக் கொள்ள முற்பட்டனர்! ஏன் தான், இவற்றை அணிந்து வர வேண்டுமோ, எனச் சுகுமாரன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

வவுனியாவில் இருந்து, பேராதனைப் பல்கலைக்கழகம் போகும் மாணவர்களின் கூட்டமும் ஏறியது! மாணவப் பருவத்துக்கேயுரிய, அந்தப் பயமில்லாத துணிச்சல், அவர்களின் முகங்களில் எழுதியிருந்தது.

ஏறியவுடனேயே அவர்கள் தங்கள் அடையாளமான பைலாப் பாட்டுக்களைப் பாடத் துவங்கியது, வவுனியாவில் அவர்கள் சும்மாயிருக்கவில்லை என்பதையும் தெளிவாகக் காட்டியது. இனிப் பொல்காவலையில் இறங்கி, உடரட்ட மெனிக்கேயைப் பிடிக்கும் வரைக்கும், கல கலப்புக்குக் குறைவிருக்காது எனச் சுகுமாரன் நினைத்துக் கொண்டான். அவர்கள் ஏறியதிலிருந்து, பத்மினியும் அவளது தோழியும் ஒரு விதமான 'மவுன விரதம்; தொடங்கி விட்டது போல இருந்தது.

கண்டி நகர் கண்டு நாமும் வருகிறோமம்மா!
காணாத காட்சியெல்லாம் கண்டோமேயம்மா!


மதவாச்சி தாண்டியதும், இந்தப் பாடல், சூட மெனிக்கே பலாலா, யனவா மேயப்பே! என மாறிவிடும் என்பதும் சுகுமாருக்குத் தெரிந்திருந்தது!

மால் மருகா எனும், வேல்முருகா நீயே...
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே...
வருவாய் வேல்முருகா.......
கதிர்மலைக் கந்த வேளே!
காப்பது நீ, ஐயா!.....


அவர்களது, பாடலில் இடைக்கிடை முருகப் பெருமானும் வந்து தலையைக் காடிவிட்டுப் போனார்.

யாழ்தேவி, வவுனியாவை விட்டுப் புறப் பட்டு மதவாச்சி வரை, ஆட்டமும் பாட்டும் தொடர்ந்தது. பின்பு களைத்துப் போய்,, அவர்கள் முன்னூற்றி நாலு, விளையாடத் துவங்கியிருந்தார்கள்!

அப்போது, அவர்களில் ஒருவன், விரிவுரையாளனாக இருக்க வேண்டும் என்று, அவர்களுக்கிடையில் நடந்த உரையாடல்களில் இருந்து தெரிந்தது, தனது கலியாண மோதிரத்தைக் கழட்டி, அதைப் பணயமாக வைத்து விளையாடப் போவதாகக் கூறவும்,, யாழ்தேவியில் பயணம் செய்த ஒரு பெரியவர், யாரும் எதிர்பாராத மாதிரி,
'தம்பிமார், நீங்க என்னத்தையும் வைச்சு விளையாடுங்க, ஆனால் அந்த மோதிரத்தை மட்டும் வைச்சு விளையாட விட மாட்டன் சொன்னார்.

அப்பு, உங்களுக்கு என்ன பிரச்சனை, எனச் சாதாரணமாகத் தொடங்கிய வாக்குவாதம் பெரிய சத்தங்களுடன் தொடர்ந்தது.

அப்புவும், தம்பி, நீங்கள் ஆரு பெத்த பிள்ளையளோ எனக்குத் தெரியாது. ஆனால், கலியாண மோதிரத்தை வைச்சு விளையாட மட்டும் விட மாட்டன் என்று பிடிவாதம் பிடித்தார்.

இறுதியில், அந்த மாணவர்களுக்கே, தாங்கள் செய்வது பிழையென்று தெரிந்ததோ, அல்லது பெரியவரின் பிடிவாதத்துக்குப் பயந்தார்களோ, அந்த மோதிரத்தை வைத்து விளையாடுவதை நிறுத்தி விட்டார்கள். இப்போது யாழ்தேவியும், அனுராதபுரம், புகையிரத நிலையத்தினுள் நுழைந்தது. மதவாச்சியில் இருந்து, வெளியில் தெரிந்த இடங்களில் பெரிய மாற்றங்கள் தெரிந்தன. மரங்களும், வயல்களுமாகப் பச்சைப் பசேலென்று வெளிகள் இருந்தன. கல்வீடுகள் மறைந்து, காட்டுத் தடிகள் கொண்டு கட்டப் பட்டு, அவற்றின் மீது மண்ணுருண்டைகள் அடுக்கப் பட்டு, கிடுகளால் வேயப்பட்ட கூரைகள் அதிகம் காணப் பட்டன. பனையோலை வேலிகள், முற்றாகவே மறைந்து போயின. இடைக்கிடையே, ஓடு போடப்பட்ட கல்வீடுகளும் காணப் பட்டன. புத்தளம், கற்பிட்டி போகவேண்டியவர்கள், அனுராதபுரத்தில் இருந்து, பஸ் எடுப்பதற்காக, இறங்கிப் போயினர்.

இதுவரை, காலை நீட்டி அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும், கொஞ்சம் ஒடுங்கிப் போய், ஒதுக்கமாக அமர்ந்து கொண்டார்கள். அவ்வாறு, நகர்ந்து கொள்ளாமல், இருந்தவர்களை, மாத்தயோவ், பொட்டக், அங்கன்ன க்கோ .... என்ற சத்தங்கள், நகர வைத்தன.

வட, வடே.... எஸ்ஸோ வடே....... என்ற குரலில், வடை விற்பவர்களில் தொனியும் மாறியிருந்தது. மொத்தத்தில், கடவுச் சீட்டு இல்லாமல், இன்னொரு நாட்டுக்குள் பிரவேசிப்பது போலவே இருந்தது.

யாழ்தேவி வழமைக்கு அதிகமான நேரம், அனுராதபுரத்தில் தரித்து நின்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், நோக்கிச் செல்லும்,உத்தரதேவிக்காகக் காத்திருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.உத்தர தேவியைக் கண்ட மகிழ்சியில், யாழ்தேவி மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

இப்போது, வெளியில் காணப்பட்ட மாடுகளும், குறையத் தொடங்க, சேற்று நிலங்களில், எருமைகள் அதிகம் படுத்திருந்தன. இடையிடையே, தண்டவாளங்களில், குறுக்கிடும் சிற்றோடைகளில், பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். தண்டவாளங்களில், இரைமீட்கும் இந்த எருமைகளைத் தூக்கி எறிவதற்காக, யாழ்தேவியின் முன்னால், பாரிய இரும்புத் தகடுகள் பொருத்தப் பட்டிருந்தன. யாழ்தேவி, இரத்தம் தோய்ந்த முகத்துடன், கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்துனுள், நுழைந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

பொல்காவலை, வரும் வரைக்கும், கலகலப்புக்குக் குறைவிருக்கவில்லை, பத்மினியினதும், அவவின்ர தோழியினதும் வாய்கள் கூட, மவுனமாய் இருந்தது, கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.பொல்காவலையில், மாணவக்கூட்டம் இறங்கியதும், யாழ்தேவியின் அமைதி முடிவுக்கு வந்தது, வெளியில், உயர்ந்து வளர்ந்திருந்த, ரப்பர் மரங்களும், தென்னைகளும், ஈரப் பலாக்காய் மரங்களும், ஒரு புத்துணர்ச்சியை ஊட்டின.

கொழும்பிலை எங்க தங்கப் போறீங்கள்? மீண்டும் பத்மினியின் சீண்டல்.

வேற எங்கை, கொச்சிக்கடையில் தான்!

நாங்களும், கொச்சிக்க்கடை தான்! 

கொச்சிக்கடை,என்னவோ 'திருநெல்வேலி' மாதிரியும், ஏதோ யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி மாதிரியும், எங்கள் பேச்சில் புகுந்து விளையாடியது.

பொல்காவலையில் இருந்து, புறப்பட்ட யாழ்தேவி, எந்த விதத் தடங்கலும் இன்றி,, றாகம, வரையும் ஓடியது. றாகம, ஒரு முக்கிய சந்தியாதலால், யாழ்தேவியின் இரு பக்கமும், கைகாட்டி மரங்களாலும், சமிக்ஞை விளக்குகளாலும், நிறைந்திருந்தது, மிகவும் அழகாக இருந்தது. 

இங்கிருந்து ஏறியவர்கள், அனேகமாக முஸ்லிம்களாக இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த தொப்பிகளும், பெண்கள் போட்டிருந்த உடைகளும், அவர்களைத் தனியாக இனம் காட்டின. இதுவே, மீண்டும் தமிழில் சத்தம் போட்டுக் கதைக்கக் கூடிய, துணிச்சலைப் பலருக்குக் கொடுத்திருக்க வேண்டும், எனச் சுகுமாரன் நினைத்துக் கொண்டான்.

பொல்காவலை,தாண்டியதும், குருநாகலையில் இருந்து, கொழும்பு வரை, குறிப்பாக ஒன்றையும் காணவில்லை, புத்தர் சிலைகளும், புத்தரின் பெரிய வீடுகளும் தான் அதிகமாகக் காணப் பட்டன. இலங்கையின் இரண்டாவது பெரிய ஆறான களனியாறு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதன் கரையில் வளர்ந்திருந்த, மூங்கில்கள், ஆற்றை நோக்கி, தலை சாய்த்திருந்தது, மிகவும் அழகாக இருந்தது. 'அதுவரை, 'தொண்டைமானாற்றையும், வழுக்கியாறையும் பார்த்திருந்த , சுகுமாருக்கு இது விந்தையாக இருந்ததில், வியப்பேதும் இல்லை.

களனியில் இருந்தே, தமிழ் ஆக்கள், இறங்கத் தொடங்கியிட்டினம்!

கொழும்புக் கோட்டையை, யாழ்தேவி சென்றடையப் பிற்பகல் இரண்டு மணியாகி விட்டது!

சுகுமாருக்கும்,நண்பனுக்கும் கொழும்பு சூனியமாகத் தெரிந்தது. இதுவரை, நெஞ்சில் இருந்த துணிவெல்லாம், பனிபோல உருகியோடி விட, பத்தாதக்குப் பக்கத்தில இரண்டு பொம்பிளைப் பிள்ளையளும், அப்ப கொச்சிக்கடைக்குப் போவமே எண்டு கேட்க, நூற்றி இரண்டாம் நம்பர் பஸ்ஸில் ஏறி டிக்கட் கேட்கக் போட்டு வந்த ஒரு பஸ்ஸில் ஏற, கொண்டக்டரும், மாத்தையா, டிக்கட் ஹத்தறத? என்று கேட்டான்!

'ஒவ்; என்று கூறியபடி, அவனிடம், இருபது ரூபாவைக் கொடுத்து விட்டுச் சுகுமாரன், மிச்ச்சகாசுக்கு, வெயிட் பண்ணினான்.

கொண்டக்டர் இது மாதிரி, எத்தனை பேரைப் பார்த்திருப்பான்!
'பயிண்டக்கொட இத்துறு சல்லி தென்னம், மாத்தையா என்றான்.

அதோடு நிப்பாட்டாமல், கலைக்கிற மாதிரி,
ஒக்கொம இஸ்ஸறட யண்ட.... எண்டு சத்தம் போட்டுக் கத்தவே எல்லாரும் முன்னுக்குப் போனார்கள்.

சுகுமாரது இப்போதைய பிரச்சனை எல்லாம். மிச்சக் காசை எப்பிடிச் சிங்களத்திலை, கேக்கிறது, எண்டு தான்! 
Comments